தண்ணீர் இல்லாமேலே வளருது நெல்





தர்றேன்னா தலையை இப்படி ஆட்டு...
தர மாட்டேன்னா இப்படி ஆட்டு’’ என்று நாமும் அண்டை மாநிலங்களிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்துவிட்டோம். ஆனாலும், தண்ணீர் விஷயத்தில் நமக்குத் ‘தண்ணி காட்டுவதை’ அவர்கள் நிறுத்தியபாடில்லை.

இனி தமிழக விவசாயிகள், ‘‘தரலைன்னா போ’’ என்று அவர்களிடம் வீறாப்பாகவே சொல்லிவிடலாம். காரணம், ‘அண்ணா 4’ என்ற புதிய ரக அரிசி. சொட்டுத் தண்ணீர் இல்லாவிட்டாலும் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் எருக்கு போல, ஆமணக்கு போல, இன்னும் பெயர் தெரியாத பல காட்டுச் செடிகள் போல, நெல் பயிரும் வளர்ந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புதான் இந்தப் புதிய கண்டுபிடிப்பு!

காலத்தில் பெய்ய வேண்டிய மழை நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது. ஆடியிலும் கோடை போல காய்கிறது; அல்லது மொத்தமாக வெளுத்துக்கட்டி வெள்ளக்காடாக்கி ஓய்கிறது. காவிரி கைவிட்ட நிலையில், ஓரளவு கைகொடுத்து வருகிற முல்லைப் பெரியாறு தண்ணீரும் ‘வருங்காலத்தில் கிடைக்குமா’ என்கிற ஐயம் கிளம்பிவிட்டது. இந்நிலையில்தான் வறட்சிப் பிரதேசங்களுக்கென்றே பிரத்யேகமான இந்த நெல் ரகத்தைத் தயாரித்து விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

இப்போது தண்ணீர்ப் பஞ்சத்தால் பாலை போல ஆன காவிரி டெல்டா பகுதிக்கு மட்டுமில்லை... காலம்காலமாக பாலைவனமாகக் காட்சி தரும் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளுக்கும் ஏற்றதாம் இந்த ‘அண்ணா 4’. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணா நூற்றாண்டையொட்டி துவக்கப்பட்ட ஆராய்ச்சியின் வெற்றிகரமான கண்டு பிடிப்புதான் இந்த ‘அண்ணா 4’. ‘‘தற்போது சோதனைப் பயிரிடலாக மதுரை ஒத்தக்கடை அருகே பதினெட்டு ஏக்கர் பரப்பில் விளைந்து நிற்கும் ‘அண்ணா 4’ நெல்மணிகள், தண்ணி இல்லாக் காடுகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்’’ என்கிறார் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் ‘விதை மைய’ சிறப்பு அதிகாரி பாஸ்கரன்.

‘‘நிலத்தோட தன்மை இடத்துக்கு இடம் வித்தியாசமா இருக்கிறது இயற்கை. இதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். தமிழ்நாடு பரவாயில்லை. கொஞ்சம் பகுதிகள்தான் வறட்சிக்குள்ளாகுது. ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசத்துல எல்லாம் வறட்சியோட பாதிப்பு ரொம்பவே அதிகம். தென்மாவட்டங்கள் வறண்டு கிடந்த ஒரு காலத்துலதான் வேலிக்கருவை விதைகளைத் தூவியிருக்காங்க. ‘குறைவான மழையில வளரும்’ங்கிற ஒரே காரணத்துக்காக அதை அறிமுகப்படுத்தியிருக்காங்க.



அதுக்கு முன்னால இந்தியப் பகுதிகள்ல அவ்வளவா வேலிக்கருவைகள் இல்லாததால, அது நிலத்தடி நீரைப் பதம்பார்க்கும்னு நம்ம ஆளுங்களுக்குத் தெரியல. அதுங்க வளரவளரத்தான் பாதிப்பு தெரிஞ்சிருக்கு. வேலிக்கருவைகள் விவசாயமே பண்ண முடியாதபடி நிலத்தை தரிசாக்கிடும்னு என்னிக்கு உணர்ந்தோமோ, அன்னிக்கே அதுங்களை அப்புறப்படுத்தற வேலைகளும், அதில் இருக்கற ‘வறட்சி தாங்குற தன்மை’யை மற்ற பயிர்களுக்குக் கொடுக்குறதுக்கான ஆராய்ச்சிகளும் ஆரம்பிச்சிடுச்சு. அந்த ஆராய்ச்சியில ஒரு மைல்கல்தான் இந்த ‘அண்ணா 4’னு சொல்லலாம்!’’ என்கிற பாஸ்கரன், ‘அண்ணா 4’ன் தனித்தன்மைகள் குறித்து ரொம்பவே பூரிக்கிறார்.

‘‘ஆறேழு வருஷ ஆராய்ச்சியோட ரிசல்ட்தான் இது. ராக்ஃபெல்லர்னு ஒரு அமெரிக்க நிறுவனமும் எங்ககூட இதுல பங்கெடுத்துச்சு. கிடைக்கிற கொஞ்ச அளவு தண்ணீர்லயும் தாக்குப்பிடிக்கணும்கிறதுதான் எங்களோட குறிக்கோள். பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னால இது சாத்தியமாச்சு. சாதாரண நெல் பயிர்களுக்கு தேவைப்படுறதுல 25 சதவீதத் தண்ணீர் இருந்தா போதும்... 100 நாட்கள்ல இந்தப் பயிர் மகசூல் தந்துடும்.

ராமநாதபுரம் பகுதிகள்ல தொடர்ந்து பெய்துட்டு வர்ற மழை அளவைக் கணக்குல வச்சு இதை உருவாக்கியிருக்கறதால, கிடைக்கிற கொஞ்ச மழையே போதுமானது. ஒருவேளை அதிகமா மழை பெய்ஞ்சா (!) அந்தப் பகுதிகள்ல உள்ள கண்மாய்கள்ல தண்ணியை சேமிச்சு வச்சு பிறகு கோடையிலயும் ‘அண்ணா 4’-ஐ விதைச்சு அறுவடை செய்யறது சாத்தியம்’’ என்கிறார் அவர்.

‘ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் 4 முதல் 5 டன் நெல்லும் ஏழரை டன் வைக்கோலும் கிடைக்கும்’ என்று பெரும் வாக்குறுதியோடு களம் இறங்கியிருக்கும் ‘அண்ணா 4’ ரக அரிசி, சன்னமான வெள்ளை நிறத்தில் இருக்கிறது. தென்மாவட்டங்களுக்கென பிரத்யேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், திண்டிவனம், குடுமியான்மலை உள்ளிட்ட மற்ற சில இடங்களிலும் இதனை சோதனையாகப் பயிரிட்டுப் பார்த்து ஆர்வமாக இருக்கிறார்களாம் விவசாயிகள். ‘‘அநேகமாக அடுத்த மழைப்பருவத்தில் ராமநாதபுரக் காடுகள் அனைத்திலும் ‘அண்ணா 4’ஐப் பார்க்கலாம்’’ என்கிறார்கள்
அதிகாரிகள்.

பொதுவாக ராமநாதபுரம் பகுதிகளில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றைத்தான் பயிரிடுவார்கள். கிடைக்கிற தண்ணீரைக் குடித்து வளர்பவை இவைதான். கோடையில் அதுவும் கிடையாது. வேலிக்கருவைகளை வெட்டி மூட்டம் போடுதல் மட்டும்தான் வேலை. இப்படிப்பட்ட மக்களிடம் குவிண்டால் குவிண்டாலாக அரிசி பயிரிடும் ஆசையை விதைத்திருக்கிறது அண்ணா 4.
- அய்யனார் ராஜன்