எங்கே போயிருக்கிறார் சுனிதா?





தரையிலிருந்து 385 கி.மீ உயரத்தில், நிமிடத்திற்கு 480 கி.மீ வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். ஏதோ ஊட்டிக்கு போய் வருவதுபோல், ‘நாலு மாசம் இருந்துட்டு வர்றேன்’ என பெட்டி, படுக்கைகளுடன் இங்கு கிளம்பிய சுனிதா வில்லியம்ஸ், 48 மணி நேரப் பயணத்துக்குப் பின் விண்வெளி நிலையத்தினுள் பத்திரமாக நுழைந்துவிட்டார். நாமும் இந்த சாதனைக்காக கை தட்டி முடித்தாயிற்று. சரி, ‘இந்த விண்வெளி நிலையம் என்பது என்ன? என்ன நடக்கிறது அங்கே?’ எனக் கேள்விகளோடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி, நெல்லை சு.முத்துவை சந்தித்தோம்.

‘‘பூமியை அதன் வெளிப்புறத்திலிருந்து பார்க்க முடியாதா என்று யோசித்தான் மனிதன். அதற்காக புவி ஈர்ப்பு பார்டரைத் தாண்டி ஒரு பந்தை எறிந்தான். அதுதான் செயற்கைக்கோள். இன்று வானிலை ஆராய்ச்சிக்கு, இயற்கை வளங்களைக் கண்டுபிடிக்க, தகவல் தொடர்புக்கு, உளவுப் பணிகளுக்கு என பலவிதமாக அது பயன்படுகிறது. வெறும் செயற்கைக்கோள்களே இவ்வளவு செய்யும்போது, அதில் மனிதர்களும் தங்கியிருந்து பணியாற்றினால் எப்படி இருக்கும் என்று அடுத்த அதிரடிக்கு ஆயத்தமானான் மனிதன். உடனே, ‘நம்ம சண்டையை எல்லாம் அப்புறம் வச்சிக்குவோம்’ என அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா என எலிகளும் பூனைகளும் ஒன்று சேர்ந்து, 1998-ம் ஆண்டு விண்வெளியில் நிறுவியதுதான் ‘சர்வதேச விண்வெளி நிலையம்’.’’

அங்கே என்னென்ன வசதிகள் இருக்கும்?
‘‘ஒரு 24 மாடிக் கட்டிடம் போன்றது இது. கிட்டத்தட்ட 400 டன் எடை. இதற்குள் பல அறைகள் உண்டு. ஆனால், இஷ்டம் போல் கை, காலை நீட்டித் தூங்க முடியாது. சாய்வு நாற்காலியில் பெல்ட் போட்டுத்தான் தூங்க வேண்டும். போர் அடித்தால் கதவுகளைத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கலாம். அதற்கு முன் மையத்துடன் தன்னை இணைக்கும் ஒரு கயிற்றை இணைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தொப்புள்கொடி என்றே அழைக்கிறார்கள். கயிறு மாட்டியிருந்தால் தைரியமாக வெளியே குதிக்கலாம். புவி ஈர்ப்பு விசை இல்லாததால் கீழ்நோக்கி விழப்போவதில்லை. பயிற்சி பெற்றவர்கள் அங்கே நடக்கலாம், ஓடலாம். ஸ்டேஷனின் மேல்பரப்பில் பராமரிப்பு வேலை கூட செய்யலாம்.

‘பூமியை விட்டு வெளியே போனால் மனிதனால் வாழ முடியுமா’ என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. இப்போது மாதக்கணக்கில் இங்கு தங்கியிருக்கும் விஞ்ஞானிகள் அதை முடியுமென்று நிரூபிக்கிறார்கள். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் சிலிண்டரில் இருக்கும். இரண்டையும் கலந்து தண்ணீரை அங்கேயே தயாரித்துக் கொள்கிறார்கள். ஸ்டேஷனின் மேற்புற சோலார் தகடுகள் சூரிய ஒளியை மின்சாரமாக்கித் தருகின்றன. சாப்பாடு மட்டும் பூமியிலிருந்தே போகிறது, பேஸ்ட் வடிவில்.

காற்று, தண்ணீர், சாப்பாடு, மின்சாரம் என எல்லாம் கிடைக்கிறபோது வேறு என்ன வேண்டும்? ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் தீர்ந்துவிட்டால், பூமிக்குச் சொல்லி விட்டால் அடுத்த விண்கலத்தைப் பிடித்து அனுப்பி வைப்பார்கள். ஒருவேளை வரத் தாமதமானால், இருக்கவே இருக்கிறது சிறுநீர். அதையும் சுத்திகரிப்பு செய்து குடித்துக் கொள்ள அங்கே வசதி உள்ளது. மனிதக்கழிவு மட்டுமே அங்கே குப்பையில் போடப்படுகிறது. அதை அங்கேயே ஜன்னல் வழியாக எறிந்து விட முடியாது. அடுத்தமுறை விண்கலம் வரும்போது கொடுத்தனுப்ப வேண்டும். பொழுதுபோக்குக்கு டி.வி, ரேடியோ நிகழ்ச்சிகளை பூமியைவிடத் தெளிவாக அங்கே பெற முடியும்.

விண்வெளி என்ற பரவச அனுபவத்துக்கு முன்னால் சிரமங்கள் தெரியாது. ஆனால், விண்வெளிக்குச் செல்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளும் பயிற்சிகளும் மிகக் கடுமையாக இருக்கும். உயிர் வாழத் தேவையானதைக் கொடுத்து ஒரு பெட்டிக்குள் நான்கு நாட்கள் பூட்டி வைப்பது போல ஒரு டெஸ்ட். அதில் திறமையாக செயல்பட்டால்தான் விண்வெளிக்கு டிக்கெட். எந்த நோயும் இல்லாதவராக இருக்க வேண்டும். ஏற்கனவே ஆபரேஷன் செய்தவர்கள் என்றால், விண்வெளியின் அழுத்தத்தில் ஆபரேஷன் செய்த இடம் பிளந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் தவிர, ஈரானைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் பத்திரிகையாளர் ஒருவரும்தான் கட்டணம் கட்டி விண்வெளிக்குப் போய் வந்திருக்கிறார்கள்.



விண்கலம் மேல்நோக்கிச் செல்லும்போது, ரத்த ஓட்டம் முழுக்க தலைக்கு ஏறி மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். உடல் நெடுநெடுவென வளர்ந்தது போலவும் இருக்கும். ஆனால், இதெல்லாம் மாயை. பூமிக்குத் திரும்பும்போதே எல்லாம் சரியாகிவிடும். இந்த மாயைகளுக்கு மன ரீதியாகத் தயாராக வேண்டியதும் அவசியம். ‘சர்வதேச’ அளவிலான இப்படிப்பட்ட ப்ராஜக்ட்டில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியா இன்னும் பங்கு கொள்ளவில்லை என்பதுதான் கொஞ்சம் நெருடல். நாம் அதில் இடம்பெறுவதை காலமும், இங்குள்ள அரசியல் தலைவர்களும்தான் தீர்மானிக்க வேண்டும்’’ என்கிறார் முத்து.

அது தீர்மானிக்கப்படும் வரை, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்கள் இந்தியப் பூர்வீகம் கொண்டவர்கள் என்பதில் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
- அய்யனார் ராஜன்
படம்: புதூர் சரவணன்