பேனாவும், தூசி படிந்த பழங்களும்





‘‘என்னோட எழுத்தும், வாழ்க்கையும் வேறில்லை. நான் நடக்க முயற்சி பண்ணி விழுந்தெழுந்த தெரு, பசி போக்க வழியில்லாம பறிச்சுத் தின்ன சனம்புக்கீரை, எங்க எல்லாரையும் கிணத்துல தள்ளிட்டு, அம்மா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணின கிணறு... இதைத் தவிர நான் எழுதுவதற்கு வேறெதுவும் இல்லை’’

- தேனி நடையைக் காட்டிலும் சோகநடை ததும்புகிறது தேனி சீருடையானின் பேச்சில். நகரின் மையத்தில் ஒரு பழக்கடை. சிறிய துணி கொண்டு பழங்களைத் துடைத்தபடியே பேசுகிற சீருடையான், தமிழின் கவனிக்கத்தக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். ‘ஆகவே’, ‘ஒரே வாசல்’, ‘விழுது’, ‘பயணம்’, ‘மான் மேயும் காடு’ உள்ளிட்ட இவரது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், வலிகளையும் அங்கத உணர்வோடு படம் பிடிக்கின்றன. ‘நிறங்களின் உலகம்’ நாவல், விழியற்ற ஒரு மனிதனின் வாழ்க்கைப்பாட்டை முன்னிறுத்தும் ஆகச்சிறந்த இலக்கியம். ஒரு தள்ளுவண்டி பழ வியாபாரியை முன்னிறுத்தி நகரும் ‘கடை’ நாவலும் பாராட்டைக் குவித்த படைப்பு. கருப்பையா என்கிற தேனி சீருடையானின் வாழ்க்கையில் மட்டுமின்றி வார்த்தைகளிலும் எளிமை இழையோடுகிறது.

‘‘தேனிக்குப் பக்கத்தில அம்மாப்பட்டிதான் பூர்வீகம். அங்கே பிழைக்க வழியில்லாம எங்க அய்யா, தேனிக்கு வந்துட்டாரு. ஒரு பொரி, கடலைக் கடையில வேலை செஞ்சாரு. கிடைக்கிற ஓரணா, ரெண்டனா கூலியை, குடிக்கும் கூத்தியாளுக்கும் கொடுத்துட்டு வெறுங்கையோட வருவாரு மனுஷன். இப்படியொரு லட்சணத்துல 6 புள்ளைக வேற. அம்மாவுக்கு ரணமான வாழ்க்கை. பசிக்கு அழுகிற புள்ளைகளப் பாப்பாளா... குடிச்சுட்டு சுத்துற புருஷனைப் பாப்பாளா.. தவிச்சுப் போவா அம்மா!

இப்போ நினைக்கும்போதும் மனசெல்லாம் இளகிப்போகுது. அந்தக்காலத்துல யாராவது என்கிட்ட, ‘உன்னோட கனவு என்னப்பா’ன்னு கேட்டிருந்தா, ‘நெல்லுச்சோறு திங்கிறது’ன்னு சொல்லியிருப்பேன். அப்படியொரு வறுமை. பெரும்பாலும் சோளக்களி. அதுவும் கிடைக்காத நாட்கள்ல காட்டுல கிடக்கிற சனம்புக்கீரையை கிள்ளியாந்து வேகவச்சித் தருவா அம்மா. அதையே சாப்பாடா தின்னுட்டு, வயித்தைப் புடிச்சுக்கிட்டு படுத்துருவோம். நெல்லுச்சோறு திங்கிற நாளு திருநாளு.



இந்த சூழ்நிலையிலயும் என்னைப் படிக்க வச்சுப் பாக்க நினைச்சுச்சு அம்மா. ரெண்டாப்பு படிக்கிற நேரம்... திடீர்னு கண்ணு மங்கலாத் தெரிஞ்சுச்சு. வாத்தியார் எழுதிப்போடுற எழுத்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பின்னுக்குப் போயிருச்சு. தெருவில நடக்கிறப்போ தடுமாறத் தொடங்குனேன். ஒருநாள் விளக்கெண்ணெய் வாங்கப் போனபோது கரன்ட் கம்பத்துல மோதி சீசாவையும், மண்டையையும் உடைச்சுக்கிட்டு வந்து நின்னேன். அப்பத்தான் அம்மாவுக்குத் தெரிஞ்சுச்சு... எனக்குப் பார்வை பறிபோன விஷயம்’’ - நமது அதிர்ச்சி முகபாவத்தை சிறிய புன்னகையோடு எளிதாகக் கடந்து செல்கிறார் சீருடையான்.

‘‘ஆளுக்கொரு வைத்தியம் சொன்னாங்க. அத்தனையும் செஞ்சு பார்த்ததுல, இருந்த கண்ணும் வெந்து புண்ணாப் போச்சு. தலைச்சம் புள்ளைக்கு பார்வை பறிபோயிருச்சேன்னு அம்மா அழுத கண்ணீர் காயிறதுக்குள்ள தங்கச்சிக்கும் பார்வை பறிபோயிருச்சு. ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு யாருக்கும் புரியல... குடும்பம் குலைஞ்சு போச்சு. படிப்பு விட்டுப்போச்சு. அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம, அம்மா பின்னாடியே திரிஞ்சேன்.

கணபதின்னு உறவுக்காரர் ஒருத்தர், பூந்தமல்லியில இருக்கிற பார்வையற்றோர் பள்ளிக்கூடம் பத்தி சொன்னார். நானும், தங்கையும் அங்க கிளம்பிட்டோம். நல்ல சாப்பாடு... நல்ல சூழ்நிலை... கனத்து காயம்பட்டுக் கிடந்த மனசுக்கு இதமா இருந்துச்சு.

ஆனா அம்மாவுக்கு கஷ்டம் குறையல. கவலைப்பட்டு, கவலைப்பட்டு அதோட உடம்பும் தளர்ந்து போச்சு. வேலை, வெட்டிக்குப் போக முடியலே. ரொம்ப சிரமப்பட்டா. வெளிநாடுகள்ல இருந்து ஸ்கூலுக்கு நிறைய பிரெய்ல் இதழ்கள் வரும். எல்லாம் கனம், கனமா இருக்கும். அதையெல்லாம் படிச்சுட்டு அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன். அதைக் கடையில போட்டு, கிடைக்கிற காசுல மத்த பிள்ளைகளோட பசியாத்துச்சு அம்மா.

நல்லாப் படிச்சேன். பிரெய்ல் மொழி கத்துக்கிட்ட பிறகு, படிப்பு தவிர வேறு செய்திகளையும் வாசிக்க ஆரம்பிச்சேன். வாசிக்க, வாசிக்க எழுதுற ஆசையும் வந்துச்சு. பிரெய்ல் மொழியிலேயே எழுத ஆரம்பிச்சேன். நான் எழுதினதைப் படிச்சுட்டு ஆசிரியர்கள் பாராட்டுனாங்க. பத்தாம் வகுப்புல ஸ்கூல்லயே முதலிடம் வந்தேன். ஆங்கிலத்தில மாநிலத்திலேயே முதலிடம். மேல படிக்க விருப்பமிருந்தும் வாய்ப்பு இல்ல.. கஷ்டப்படுற அம்மாவுக்கு ஏதாவது உதவி செஞ்சாகணும்னு ஊருக்குக் கிளம்பிட்டேன்.



உக்காந்தபடி செய்யிற வேலை ஏதாவது கிடைக்குமான்னு தேடுனேன்.. எல்லாருமே பரிகாசம் பண்ணி அனுப்பினாங்களே ஒழிய யாரும் வேலை தரல. நம்பிக்கையிழந்து தவிச்ச ஒரு தருணத்தில, தேனியில ஒரு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்துச்சு. தட்டுத் தடுமாறி தனியாவே நடந்து அங்க போயிட்டேன். ‘ஆபரேஷன் பண்ணினா பார்வை கிடைக்க வழியிருக்கு’ன்னு சொல்லி தங்க வச்சுட்டாங்க. ஆபரேஷன்

முடிஞ்சபிறகு பாதியளவுக்கு பார்வை திரும்பிருச்சு. இருட்டுதான் எதிர்காலம்னு திட்டவட்டமா நம்பினவனுக்கு திடீர்னு கொஞ்சம் வெளிச்சம் கிடைச்சா..? வாழ்க்கையில பிரகாசமான ஒரு பிடிப்பு வந்திருச்சு...’’ - சிரிக்கிறார் சீருடையான்.

‘‘ஓரளவுக்கு பார்வை வந்தபிறகு தீவிரமா வேலை தேட ஆரம்பிச்சேன். படிச்ச படிப்புக்கு தலையாரி வேலையாவது வாங்கிடலாம்னு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் போனேன். ‘பார்வையில்லாத பள்ளிக்கூடத்துல படிச்சதை எல்லாம் பதிவு பண்ண முடியாது. மெட்ராசுக்குப் போ’ன்னு அனுப்பிட்டாங்க. அங்க போனா, ‘பார்வை இல்லாதவங்களுக்குத்தான் இங்கு பதிவு பண்ணுவோம். உனக்கு பார்வை வந்திருச்சு. இங்கே பதிவு பண்ண மாட்டோம்’னு சொல்லிட்டாங்க. ‘போங்கடா நீங்களும் உங்க வேலையும்’னு சொல்லிட்டு எங்க அய்யா வழியில பொரி, கடலை யாவாரத்துல இறங்கிட்டேன். கையில கொஞ்சம் காசு சேந்தவுடனே இன்னொரு ஆபரேஷன் பண்ணி பார்வையை இன்னும் கொஞ்சம் தேத்திக்கிட்டேன். குடும்பத்துல ஓரளவுக்குக் கஷ்டம் குறைஞ்சுச்சு. பஜார்ல இந்தக் கடையைப் புடிச்சேன். சின்னதா இந்தப் பழக்கடை. 

உள்ளுக்குள்ளே எழுத்து கிடந்து அறுத்துக்கிட்டே இருந்துச்சு.. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில ஐக்கியமான பிறகு திட்டவட்டமான எழுத்து கைவந்துச்சு. சிறுபத்திரிகைகளும் களமா இருந்துச்சு. ஏழைகளோட சீருடையே அழுக்குதான். ‘எப்பவும் அழுக்கு தோஞ்ச உடையோட திரியிற ஒரு துயர மனிதன்’ங்கிறதுக்கு அடையாளமா ‘சீருடையான்’னு பேரை வச்சுக்கிட்டு எழுத ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு நிறைவிருக்கு. கடைசியா வந்த ‘நிறங்களின் உலகம்’ நாவல், கிட்டத்தட்ட என் சுய சரிதை.

புள்ளைக தலையெடுத்த பிறகு வாழ்க்கை இன்னும் கொஞ்சம் வெளிச்சமாயிருக்கு. பழக்கடையை பிள்ளைகள் விரிவுபடுத்தி ஜூஸ் கடையும் போட்டிருக்காங்க. பேரன், பேத்திகளோட உலகத்துல இப்போ வாழ்ந்துக்கிட்டிருக்கேன். உச்சபட்ச இருட்டையும், அதிவெளிர் வெளிச்சத்தையும் ஒருசேர தரிச்சிச்சவன் நான். சொல்ல இன்னும் நிறைய கதைகள் இருக்கு. எல்லாக் கதைகளும் வாழ்ந்து அனுபவிச்ச கதைகள்; அதனால என் காலத்துக்குப் பிறகும் அவை வாழும்ங்கிற நம்பிக்கை இருக்கு!’’

- துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, தூசி படிந்த பழங்களைத் துடைக்கிறார் தேனி சீருடையான். பழங்கள் பளீரென ஒளிர்கின்றன.
- வெ.நீலகண்டன்
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்