செல்போன் காதல்1

காதல் விஷயத்தில் குணா, ரவி, சேகர் என்று என் வயதில் எல்லோருமே மாட்டிக் கொண்டவர்கள்தானாம். காதல் யாரையும் தன் வலையில் விழச்செய்யாமல் விடாது என்றுதான் நேற்று மூர்த்தியும் சொன்னான்.
கடந்த ஒரு மாதத்தில் ராம் நகர் இரண்டாவது தெருவுக்குள் நான்கைந்து முறை நுழைந்து விட்டேன். யாரும் என்னை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, ‘யார் நீ... உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கவில்லை. ‘சின்னு... நீ எங்கே இந்தப் பக்கம்?’ என்று தெரிந்தவர்கள் யாராவது பார்த்துக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு கிடந்து அடிக்கிறது.
இதோ சாந்தி வீடு வந்து விட்டது. வீட்டின் வெளிப்புறமாக அவள் தட்டுப்படவில்லை. எதிர் வீடு எப்போதும் போல் பூட்டிக்கிடக்க, அதன் திண்ணையில் அமர்ந்து நோட்டமிட்டபடி இருந்தேன். இவள் எந்த நேரமும் டிவியே கதியாகக் கிடக்கிறாளா? வாயேன்டி வெளியே!
பால்காரன் சைக்கிளில் வந்து பெல் அடித்தான். சாந்தி பால் செம்பை தூக்கிக்கொண்டு குதிரை போல் கதவு நீக்கி ஓடிவந்து பால் வாங்கினாள். என்னைப் பார்த்தவள் விழிகளில் பேசினாள். பால்காரன் பக்கத்து வீடு செல்லும்வரை காத்திருந்து, சாந்தியை நெருங்கி புது செல்போனைக் கொடுத்தேன்.
‘‘குமார் உன்கிட்ட குடுக்கச் சொன்னான். மத்த விஷயமெல்லாம் போன்ல சொல்வானாம். எட்டு மணிக்குக் கூப்புடுவான்’’ - இதயம் பட படக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
|