‘‘மலையைக் கூட தூரத்துல நின்னு பார்த்தா கடுகளவுதான் தெரியும். அது போலத்தான் வாழ்க்கையும். எந்தப் பிரச்னையையும் எளிதா அணுகினா பாஸிட்டிவ்வா முடியும். தப்பான அணுகுமுறையினால கடுகளவு பிரச்னை கூட மலையா மாறி மிரட்டும். இந்த சின்ன லைனை வச்சு பிரமாண்டமா சொல்லப்பட்ட முயற்சிதான் இந்தப்படம்...’’ என்கிறார் மெஜஸ்டிக் மல்டிமீடியா லிமிடெட்டின் ‘மிரட்டல்’ இயக்குநர் ஆர்.மாதேஷ்.
‘சாக்லேட்’டில் இனிப்பான காதல் கதை சொல்லி, ‘மதுர’யில்
கலக்கியவர் இப்போது மிரட்ட வந்திருக்கும் காரணம்
கேட்டால், ‘‘எதுலயும் உச்சத்தை மிரட்டல்னுதானே சொல்வோம். அப்படி ஆக்ஷனிலும் காமெடியிலும் மிரட்டலான படம் இது...’’ என்கிறார். அதேபோல இந்த மிரட்டலுக்கு வினய்யைத் தேர்ந்தெடுத்ததற்கும் காரணம் சொன்னார்.
‘‘இந்தப் படத்துக்கு நல்லா படிச்சுட்டு, சாஃப்ட்வேர் வேலைக்காகக் காத்திருக்க ஒரு இளைஞன் எனக்கு வேணும். அவன் எப்படிப்பட்டவன்ங்கிறது சஸ்பென்ஸான விஷயம். இதுக்கு விஜய் போல நல்லாத் தெரிஞ்ச ஹீரோக்களைப் பயன்படுத்தினா, அடுத்த காட்சிகளை எளிதா யூகிச்சுடலாம். அப்படி எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்ணலைன்னாலும் பிரச்னையாகிடும். ஆனா வினய்யை வச்சு கதையை எப்படியும் நகர்த்த முடியும். சாஃப்ட்டான வாழ்க்கைமுறை கொண்ட இளைஞன், தவறுதலா அடிதடி வேலைக்குப் போனா என்ன ஆகும்னு சொல்ல வர்ற கதையா ஆனதால, வினய் இதுக்கு கச்சிதமா பொருந்திட்டார். தமிழ் பேசத் தெரியற, ஹேண்ட்ஸம் லுக்கோட இருக்கிற யங் ஹீரோவான அவருக்கு இந்தப்படம் நல்ல பிரேக்காவும் அமையும்...’’

படத்தில் வினய்க்கு ஜோடியாகும் ஷர்மிளாவையும் ஆடிஷனில் நூற்றுக்கணக்கான தேடல்களில் பிடித்திருக்கிறார்கள். மும்பை பிறப்பு, பெங்களூரு வளர்ப்பு என்று வனப்புக்குக் குறைவைக்காமல் இருக்கும் ஷர்மிளா பற்றியும் சிலாகித்தார் மாதேஷ்.
‘‘ஷர்மிளா கேரக்டரும் கூட எதிர்பார்ப்பு வைக்கத் தேவையில்லாத கேரக்டர்தான். அதனாலதான் இதுக்கும் தெரிஞ்ச முகமா இல்லாம, புதுமுகத்தை நடிக்க வைக்க நினைச்சேன். ஷர்மிளாவும் என் எதிர்பார்ப்பை சரியா பூர்த்தி பண்ணியிருக்காங்க. பிறகுதான் தெரிஞ்சது, அவங்க சில கன்னடப் படங்கள்ல நடிச்சிருக்காங்கன்றது. இருந்தாலும் ஒரு புதுமுகம் போலவே ஆடிஷனுக்கு வந்து ஒத்துழைச்சு நடிச்சது பாராட்டப்பட வேண்டிய அம்சம். எப்படி இருந்தாலும் தமிழைப் பொறுத்தவரை ஷர்மிளா நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு புதுமுகம்தான்.
ஃபிலிம் இல்லாமக்கூட படமெடுக்க முடியும். ஆனா சந்தானம் இல்லாம முடியாதுங்கிற இன்றைய காலகட்டத்துல முக்கியக் கேரக்டர்ல வர்ற அவர், தன் கேரக்டரைக் கேட்டு ‘இப்படி ஒரு ஆக்ஷன் படத்துல நான் காமெடி பண்ணியதேயில்லை...’ன்னு மலைச்சுப் போனார். இதுவரை சென்னைத்தமிழ் மட்டுமே பேசி நடிச்சிருக்க அவர் இதுல முதல் முறையா தமிழை பிராமண உச்சரிப்புல பேசி நடிக்கிறார். இவங்களோட பிரபு, பாண்டியராஜன், பிரதீப் ராவத், மன்சூர் அலிகான், கஞ்சா கருப்பு, ‘மகாநதி’ சங்கர், யுவராணி, உமா பத்மநாபன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கு படத்துக்குள்ள! பிரவீன்மணி இசைல டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கார்.
ஆக்ஷன் படமா இருந்தாலும் முழுக்க காமெடி ட்ரீட்மென்ட்லயே போற கதைல பிரமாண்டத்துக்கு குறைவிருக்காது. ஹீரோயினைக் கடத்தற ஒரு சீன்ல வழக்கமா வர்ற கார், ரயிலை விட்டுட்டு விமானத்துல கடத்த வச்சோம். வான்வெளி விஷுவலுக்கான லொகேஷன் தேடி லண்டன்ல பிடிச்சோம். லண்டன்லயும் பார்லிமென்ட் கட்டிடத்துக்கு மேலே பறக்க அரும்பாடுபட்டு அனுமதி வாங்கி ஒரு பிளேன், ஒரு ஹெலிகாப்டர்ல ஷூட் பண்ணியது மறக்க முடியாத அனுபவம். அதேபோல ஹைதராபாத்ல நிஜாம் ப்ராபர்ட்டியில விசேஷ அனுமதி வாங்கி, ஒரு ஏக்கர்ல வீடு செட் போட்டு ஷூட் பண்ணினோம்.

எதுக்காக இத்தனை ரிஸ்க்குன்னா நுகர்வோருக்கான எந்தப் பொருளையும் வாங்கிட்டு அதுக்கான விலையைக் கொடுக்கிற சமூகத்துல, சினிமாவுக்கு மட்டும் நம்பிக்கையின் பேரில் பணத்தை முதல்லயே கொடுத்துட்டு ரசிகர்கள் தியேட்டருக்குள் வர்றாங்க. அவங்களை ஏமாற்றக்கூடாதில்லையா..?’’
மிரட்டலான விளக்கம்..!
- வேணுஜி