அழகே கொல்லுதே!





‘இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா மறைந்தார்’ என்ற செய்தியோடு அவரின் வயோதிகப் புகைப்படத்தை செய்தித்தாள்களில் பார்த்து அதிர்ந்துவிட்டேன். எப்படி இருந்த மனுஷன்..! அவரின் பெருமைகளை நீங்கள் நினைவு கூர்ந்திருந்தது, ஒரு நல்ல இறுதி ‘ஆராதனை’யாக அமைந்தது.
- ஏ.ஜி.கல்யாணசுந்தரம், சென்னை-126.

விண்வெளி நிலையத்தை இதற்கு மேல் இன்ச் இன்ச்சாக விவரிக்க சான்சே இல்லை. படிக்கப் படிக்க எங்களுக்கே எடை குறைந்து, மிதப்பது போல் ஆகிவிட்டது. பி.பி.சியில் கூடக் கிடைக்காத விஞ்ஞானத் தகவல்களை எளிய தமிழில் எடுத்துச் சொன்ன விஞ்ஞானி நெல்லை முத்துவுக்கு நன்றி!
- வி.சரஸ்வதி ஏழுமலை, புதுச்சேரி.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இணைந்தால் வாழ்க்கையில் வெளிச்சத்தையும், வெற்றியையும் ஒருசேர அடையலாம் என்பதை உணர்த்திய தேனி சீருடையானின் வாழ்க்கைக் கதை நெகிழ்ச்சி தந்தது.
- எஸ்.எம்.பாலசுப்ரமணியன், தேனி.

‘கண்ணதாசனின் கட்டில் சென்டிமென்ட்’ படித்து நெஞ்சம் நெகிழ்ந்தது. அவரோடு அந்தக் கட்டிலையும் எரித்தார்கள் என்ற செய்தி மனசை கனக்க வைத்தது. ‘நேற்றைய பொழுதில்’, இன்றைய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும்!
- மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

என்னது? உதட்டை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சிடலாமா? அப்போ இனிமே போலீஸார், ‘விரைவில் குற்றவாளிகளைப் பிடிச்சிடுவோம்’னு வெறும் உதட்டளவில் சொல்லமாட்டாங்க!
- எஸ்.கோபாலன், சென்னை.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நம் பாரதத்தைச் சேர்ந்த 81 பேர் களம் இறங்குவதையும் அவர்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகளையும் படித்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெருமைதான். நம் எதிர்பார்ப்புகளை இறக்கி வைத்தால், அவர்கள் சுலபமாகப் போட்டியிட்டு தங்கம் வெல்வார்கள் என்பது என் கருத்து!
-வி.சி.கீதா ராமு, பெங்களூரு.

ஆமைகளுக்குள் சண்டை வந்து விவாகரத்தாகி விட்டது பெரும் வினோதம்தான். சின்னக் காரணங்களுக்காக விவாகரத்து வரை போகும் நம் தம்பதிகளின் முன்னேற்றம் ஆமை வேகத்தில்தான் நகரும் என்ற நீதியை நான் அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்!
- சத்தியநாராயணன், சென்னை-61.

‘ரத்தசரித்ர’த்தில் அறிமுகமான ‘ராதிகா ஆப்தே’வின் கேஷுவல் அழகு, கொல்கிறது. பல மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் யதார்த்தவாதியான அவரின் சினிமா கரியர், எப்போதும் ‘சுத்தசரித்திரம்’தான்!
- மயிலை.கோபி, சென்னை-83.

‘அந்நியன்’ பட ஸ்டைலில் கருட புராண தண்டனைகளை ரீமிக்ஸ் செய்து ஆல்தோட்ட பூபதி தந்திருந்த ‘புரூடா புராணம்’ செம கலக்கல்!
- த.சத்திய நாராயணன்,
சென்னை - 38