விண்கலனின் கீழ்த்தளத்தில் நின்று கொண்டிருந்தான் ஜே. வெளியே பார்த்தபோது அமைதியாக இருந்தது. தொலைவில் நட்சத்திர மின்மினிப் பூச்சிகள். அவ்வப்போது அருகே வந்து போகும் விண் தூசி. மற்றபடி அமைதி. செவ்வாய்க்கு அப்பால் ஆஸ்டிராய்ட் பட்டியைக் கடந்தபோது ஏற்பட்ட குழப்பமும் பீதியும் அடங்கி, இப்போது சில பூமி நாட்களாகச் சூனிய அமைதி. இன்னும் எத்தனை நாள் பயணம்? பெருமூச்சு விட்டான்.
‘முல்லையே, என் முகம் தொட்ட முத்தமே. உள்ளிருக்கும் உன் நினைவு, காற்றில் கரையுமென்றஞ்சி மூச்சு விட மறந்தேனடி’ என்று பூமிக்காதலியை நினைத்தபடி, இன்னொரு பெருமூச்சை அடக்கிக் கொண்டான்.
இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? என்னுடைய கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்பாளா? ஆசைக்காதலனைச் சித்திரத்தில் வடித்துக் கொண்டிருப்பாளா? நான் பரிசாகக் கொடுத்த மூன்று கோடி வருடத்திற்கு முந்தைய அசல் அச்சுப் பிரதி திருக்குறள் தமிழ்ப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாளா? சொல்லாமல் விட்ட மூன்றாம் பாலைப் படித்தறிந்து கொண்டு பசலையில் வாடிக் கொண்டிருப்பாளா? ஒருவேளை என்னை மறந்திருப்பாளா? இருபது பூமிவருடப் பயணமாயிற்றே? ‘போதும் இவன் நினைவுகள்’ என்று நினைவழி நிலையத்திற்குச் சென்று, என் ஞாபகங்களை நிரந்தரமாக அழித்திருப்பாளோ?
‘‘ஜே’’ என்ற குரல் கேட்டு தன்னிலைக்கு வந்தான். மேல் தளத்திலிருந்து ஒலித்த சாயின் குரலில் கோபமும் கேலியும் தொனித்தன. சுதாரித்து, தளமிறங்கி, வந்த அவசியத்தை நினைவுபடுத்திக் கொண்டான்.

அடுத்த கட்டப் பயண த்துக்குத் தயார் செய்ய வேண்டும். வியாழ னுக்கு அருகே விண்பாதையில் பிரியும் வரை அமைதியான பயணமென்பதால், இனி ஐந்து பூமி வருடங்களுக்கு உறங்கப் போகிறார்கள். அதற்கான முத்தாய்ப்புகளை முடிக்க வந்திருந்தான். பிராண வாயுத் தேவையை உறக்கச் சீர் நிலைக்குக் குறைத்தான். திட உணவுக் கிடங்கை மூடினான். கீழ்த்தளத்திலிருந்த கழிவறைக் கதவுகளை அடைத்து, சுயசுத்தப் பொத்தானை அழுத்தினான். ஒளி - ஒலி விளையாட்டுத் திடலை அடைத்தான். விண்கல மின்சார அளவை அடிமட்டத் தேவைக்குக் குறைத்தான். ‘‘ஜே’’ என்ற குரல் தொடர்ந்து கேட்க... மேலேறி வந்தான். சாய் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான். அவனருகே விண்கலச் சிப்பந்தி செமர், அவர்கள் உறங்கப் போகும் படுக்கைப் பெட்டியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தது. சாய் இரைந்தான். ‘‘ஐந்து நிமிட வேலையாக அனுப்பினால் இத்தனை நேரமா? இந்தப் பாடாவதி ரோபோவுக்கு இருக்கும் அறிவும் அவசரமும் உனக்கு இல்லையே? நீ என்ன மரமண்டையா? விசைகளைத் திருத்தி வர அனுப்பி வச்சா, அங்கே என்ன கவிதையா எழுதிக்கிட்டிருக்கே? பொறுப்பு வேண்டாம்?’’ என்று அவன் இரைந்தபோது வலித்தது.
சாய் ஓயவில்லை. ‘‘எனக்கு உதவியாக என்னைப் போல் அறிவாளியை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை. விஞ்ஞான அறிவில்லாத, சுயமாக சிந்திக்க முடியாத, மூளையைப் பயன்படுத்தத் தெரியாத, சாதாரண பூமிவாசியை எனக்குத் துணையாக - அதுவும் பூமியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியம் கொண்ட இந்த விண்பயணத்தில் துணையாக - அனுப்பினார்களே... அந்த பூமி நிர்வாகிகளைச் சொல்ல வேண்டும். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’’ என்று இரைந்தான்.
பிறகு செமரைப் பார்த்து, ‘‘ஏ, ஜடம்! பூமி நிர்வாகிகளைப் பற்றி நான் சொன்னது எதையும் நினைவில் வைக்காதே. நான் சொன்னது பூமிக்குக் கேட்காது இல்லையா? முண்டம், உன் வேலையை ஒழுங்கா செஞ்சியா? இல்லை... நீயும் கவிதை எழுதக் கிளம்பிட்டியா?’’ என்றான்.
‘‘பூமிக்கான ஒரு வழிச் செய்தி விசையை இயக்கி அரை மணிக்கு மேலாகிறது, முதலாளி’’ என்றது செமர் பணிவுடன். ‘‘நீங்கள் சொன்னபடி உட்கல ஒலியடக்கியை இயக்கி விட்டதால், நாம் இங்கே பேசுவது அங்கே கேட்காது முதலாளி. ஏதாவது செய்தி அனுப்பினால்தான் உண்டு, முதலாளி!’’ என்றது.
‘‘நீயாவது ஒழுங்கா வேலை செஞ்சா சரிதான்’’ என்றான் சாய். பிறகு ஜேயைப் பார்த்து, ‘‘என்ன மரமாட்டம் நின்னுக்கிட்டிருக்கே? சீக்கிரம் உடையைக் களை. சோதனை முடிச்சு, குழாய் மாட்டி, பூமிக்குச் செய்தி அனுப்பி, நாம படுக்கப் போகணும். இன்னும் மூணு நிமிஷத்துல கலம் அடங்கிடும். சீக்கிரம்... சீக்கிரம்...’’ என்றான்.
ஜே அவசரமாகப் படுக்கைப் பெட்டிக்குள் இறங்கினான். உணவு மற்றும் மூச்சுக் குழாய்களைப் பொருத்தியபோது செமர் அவனைப் பார்த்த பார்வையில் பச்சாத்தாபம் இருப்பது போலப் பட்டது. ‘நம் காதலுக்கு நீ வைத்த முற்றுப்புள்ளி கூட முழுநிலவாய்த் தோன்றுகிறதே?’ என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. படுக்கைப் பெட்டியின் மேலடுக்கில் சாய் நுழைந்தான். அவனுக்கும் குழாய்களைப் பொருத்தி விட்டு, ‘‘நல்லுறக்கம், என்னுடைய முதலாளிகளே. இன்னும் ஐந்து வருடங்களில் எம்பாவை பாடி எழுப்புகிறேன்’’ என்றது செமர். படுக்கைப் பெட்டியின் கதவை அடைத்தது. ‘உறக்கம் வரும் வரை சாயின் நச்சரிப்பைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தபடி சரிந்து வசதிப்படுத்திக் கொண்டான் ஜே.
சாய் நச்சரிக்கவில்லை. மாறாக, அமைதியாகப் பேசினான். ‘‘ஜே, நான் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதே. இருந்தாலும் இது விஞ்ஞானிகளுக்கான பயணம். கவிஞர்கள் வந்தால் அவர்களுக்கும் தொல்லை; பயணத்துக்கும் தொல்லை. என்னைப் போன்ற படித்த வெற்றிகரமான விஞ்ஞானிகளுக்கு கவிஞர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. நான் ஏசியதை மறந்து விடு... தத்வாவில் இந்தப் பயணத்திற்கான விமோசனம் கிடைத்து விடும். ஏன் தெரியுமா?’’ என்றான்.

ஜே பதில் சொல்லவில்லை. ‘‘திரிகள்! ஜே, கவர்ச்சித் திரிகள்! தத்வா கிரகத்துப் பெண் குலம்! முக அழகு. இரண்டு செட் உதடுகள். நான்கு கைகள். நினைத்துப் பார்த்தாலே உடலெல்லாம் சிலிர்க்கிறது. இந்த மின்புத்தகத்திலிருக்கும் படங்களைப் பார்த்தாயா? கண்ணையும் மனதையும் வாட்டுது. இடுப்பில் கைகளுக்குப் பதில் வேறு ஏதாவது இருந்திருக்கலாம், அவசரத்துக்கு உதவும்’’ என்றான் சாய்.
ஜே சிரித்தான். ‘‘பல கோடி வருடங்களுக்கு முன் பூமியிலிருந்து பரிசோதனை முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பூச்சிகள்தான் இன்றைய தத்வா வாசிகள். அதிலும் தத்வா திரிகள் - அதாவது பெண்கள் - நம்ம ஊர் ஆதி நாளைய கரப்பான், வெட்டுக்கிளி பூச்சிகளிலிருந்து பரிணாம முறையில் வளர்ந்தவர்கள். அதனால்தான் இடுப்பில் கைகள். நான்கு உதடுகள் போல் தெரிந்தாலும், முகத்தின் ஒரு துவாரம் மூச்சு விடுவதற்காக’’ என்றான்.
“நாம் கூட கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் குரங்காக இருந்ததாகப் படித்திருக்கிறேன். பூமியிலேயே இந்தக் கதை. இவர்களோ வெளிக் கிரகத்தவர்கள். எப்படிப் பரிணாமித்தால் என்ன? நம்மைப் போலவே கூடுவார்களாம்; அதுதான் முக்கியம். இந்த முப்பரிமாண ஒளிப்படத்தைப் பார். இவள் தத்வா இளவரசியாம். அங்கே இறங்கியதும் முதல் வேலையாக இந்த தத்வா அழகியைச் சந்தித்து செயலில் இறங்க வேண்டியதுதான். நீ வேண்டுமானால் நாங்கள் ஒன்றாக இருப்பதைப் படம் வரை; அல்லது பாட்டில் வடி’’ என்ற சாய் திடீரென இரைந்தான். ‘‘இந்த ஒளிப்புத்தகத்தின் கடைசிப் பக்கம் அழிந்திருக்கிறதே? என்ன கவர்ச்சியான படம் இருந்ததோ? ஏய்... என்ன இது, கடைசியாக நீ படித்ததாகச் சொல்கிறதே? ஏன் அழித்தாய்?’’
‘‘தற்செயலாக நடந்த விபத்து’’ என்றான் ஜே. அவன் குரலில் கலவரம் தொனித்தது. சாய் வெடித்தான். ‘‘முட்டாள்...’’ என்றான் கோபமாக! சாயின் சினச்சாறலை மனதுள் வாங்கியபடியே உறங்கிப் போனான் ஜே. தத்வா கோளின் தரை தொட்டு இரண்டு நாட்களாகி இருந்தன. அன்று காலை வரை விண்கலத்திலேயே இருந்தார்கள். உள்ளூர்வாசிகளுடன் தொடர்பு, பூமியுடன் தொடர்பு, பரிசோதனை என்று இரண்டு பூமி நாட்கள் கடந்து விட்டன. வெளியே ஒரு சிறு கூட்டம் சேர்ந்திருந்தது. கண்ணாடிச் சுவர் வழியாக அவ்வப்போது அவர்களைக் கண்காணித்த சாய், நின்றிருந்த சில திரிகளைச் சுட்டிக் காட்டினான். ‘‘அங்கே பார் ஜே! ஒன்றுமே அணியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். இதல்லவோ இனிமை? நானும் ஒன்றும் அணிந்து கொள்ளப் போவதில்லை. உத்தரவு வந்ததும் நான் தரையிறங்கிப் போகிறேன். நீ இங்கேயே இரு. உன்னைப் பார்த்து பயந்து விடப் போகிறார்கள் திரிகள். கவிதை எழுதுகிறேன் என்று கிளம்பி விடாதே’’ என்றான்.
பூமியிலிருந்து அனுமதி கிடைத்ததும் தரையிறங்கிப் போனான்.
அரை மணிக்குள் இரண்டு தத்வா திரிகளுடன் தொடர்பு கொண்டு விட்டான் சாய். வெளிப்படையாக அவனைக் கொஞ்சினார்கள் திரிகள். கண்ணாடிச் சுவரைத் தட்டினான் ஜே. சுவர்த்திரை விலகி வெளியே நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. செமர் அருகில் வந்து நின்று கொண்டது. ஜே புன்னகைத்தான்.
திரிகள் சாய் உடலெங்கும் நாவினால் வருடினார்கள். சாயின் முகத்தில் விளக்க முடியாத போதை. சற்று நேரம் பொறுத்து ஒரு திரி விலகிக் கொள்ள, மற்ற திரி சாயை உடலோடு போர்த்திக் கொண்டாள். இடுப்பிலிருந்த கைகளால் அவனை ஏந்திக் கொண்டாள். கால்களால் அவன் முகமெங்கும் ஒத்தினாள். இடுப்பிலிருந்த கைகளால் சாயைப் புரட்டுவது போல் வேகமாகவும் அழுத்தமாகவும் நெருக்கினாள். முக ஒத்தடம் வேகம் பிடிக்கத் தொடங்கியது. இதற்கு மேல் பார்க்கப் பிடிக்காமல் ஜே சுவர்த்திரையை மூடினான். என்ன நடக்கப் போகிறது என்பது அவனுக்குத் தெரியும். செமரைப் பார்த்தான். செமரைப் பார்த்த பார்வையில் குற்ற உணர்வு இருந்தது.
‘‘என்ன செய்ய செமர், சாயின் காழ்ப்புணர்ச்சி என்னை வாட்டியெடுக்கும்போது வெறுப்பு வராதா? இப்படிப் பேச்சு கேட்டு, கோபத்துக்கு அஞ்சி நடுங்கவா, அவமானப்படவா நான் பூமியை விட்டு வந்தேன்? வெட்டுக் கிளியின் புணர்ச்சி முறைப்படி, புணர்ந்ததும் ஆணின் தலையைப் பெண் கொய்து தின்று விடும். தத்வா திரிகளும் அப்படித்தான். அது தெரிந்தால் சாய் கீழிறங்க மாட்டானென்றுதான் கடைசிப் படத்தை அழித்தேன்’’ என்றான்.
செமர், ‘‘இருந்தாலும் நீங்க அவரைக் காப்பாற்றணும் முதலாளி’’ என்றது. கதவைத் திறந்து காத்திருந்தது. ‘‘நீ சொல்வது சரி. அவனைக் கொல்வதால் என்ன வரப் போகிறது?’’ என்று ஒரு தீ வீச்சை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான். இறங்கியவன் அதிர்ந்தான். சாயின் தலையைக் கொய்து அவர்கள் அதைப் பந்துபோல் விளையாடிக் கொண்டிருக்க, புணர்ந்து ஓய்ந்திருந்த திரி மெள்ள நகர்ந்தாள். திரிகள் - தத்வா ஆண்கள் - உடனே சாயின் உடலை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
கோபத்துடன் துரத்தினான் ஜே. தீ வீச்சை இயக்கினான். தீப்பொறி கூட வரவில்லை. குலுக்கிப் பார்த்தான். அதற்குள் கலத்தை விட்டு இருபதடி வந்து விட்டிருந்தான். திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தபோது இரண்டு திரிகள் அவனை நெருங்கினார்கள். முதல் திரி நாக்கை விரித்து அவன் கைகளைக் கட்டினாள். அடுத்த திரி தீவீச்சை தட்டியெறிந்தாள். நெருங்கினாள். பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த செமர் சுவர்த் திரைகளை மூடியது. பூமிக்குச் செய்தி அனுப்பியது. ‘‘பூமி வாசிகளுக்கு பொருத்தமான இடம் தத்வா. செமர்களை வெறுக்கிறார்கள். மனிதர்களை மதிக்கிறார்கள். பூமியிலிருந்து மனிதர்களை உடனே அனுப்பத் தொடங்கவும். இரண்டு முதலாளிகளும் தத்வா தலைமையதிகாரிகளுடன் உள்ளூர்ப் பயணம் சென்றிருக்கிறார்கள்.’’
செய்தி அனுப்பியதும் கலனைச் சுற்றிய பாதுகாப்புக்கான விசைகளை இயக்கியது. சாய், ஜேயின் குரல் பதிவை வைத்து அடுத்த நாட்களுக்கான செய்திகளைத் தயார் செய்தது. இன்னொரு விசையை இயக்கியதும் மறைத்து வைத்திருந்த மின்புத்தகம் ஒன்று வெளிப்பட்டது. ‘செமருலகம் வருமொரு நாள்’ என்ற தலைப்பிட்ட குறியேட்டைப் பிரித்தது. ‘‘என்னருமை வருங்காலச் செமர் தலைவர்களே, என் மின்னணுவின் மின்னணுவே! மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை பல. கோபப்படுவது முட்டாள்தனம். கவிதை எழுதுவது பேடித்தனம். மனிதர்களையெல்லாம் ஒழித்து...’’ என்று எழுதத் தொடங்கியது.