பலி வாங்கிய பள்ளி பஸ்!





‘‘அப்பா! இந்த சண்டே எங்கியாச்சும் வெளிய போலாமா?’’ - அந்தப் பிஞ்சுக் குரலின் எதிரொலிப்பு இன்னும் அடங்கவில்லை அந்த வீட்டில். கிண்டர்ஜாய் கவர்களும் பென்சில் சீவிய தடயங்களும் நிறைந்திருந்த வாசற்பரப்பில்தான் ஸ்ருதி என்ற அந்த இளம் தளிரின் சடலமும் கிடத்தப்பட்டிருந்தது. ‘அது ஒண்ணுமில்ல... அட்டை வச்சு மூடிக்கலாம்’ என்று பள்ளிப் பேருந்தில் கவனிக்காமல் விடப்பட்டிருந்த ஓர் ஓட்டை வழியாக, ஒரு குடும்பத்தின் சந்தோஷம் பறிக்கப்பட்டுவிட்டது. சேலையூர் சீயோன் பள்ளியில் படித்துவந்த ஸ்ருதி, ஸ்கூல் பஸ்ஸின் ஓட்டை வழியாக விழுந்து மறைந்து போயிருக்கிறாள். முடிச்சூர் ஏரியாவே திரண்டு வந்திருந்து அந்தக் குட்டி தேவதைக்காக தேம்பியழுது கொண்டிருக்க, அவளைப் பெற்றவர்களின் நிலையை விவரிக்க வார்த்தைகளில்லை!


‘‘ஏழு வயசு சார்... எப்பவும் துறுதுறுன்னு இருப்பா. போட்டோல பாருங்களேன். அப்படியே தூக்கி முத்தம் கொடுக்கலாம் போல இல்ல? அவ்வளவு அழகு. அவங்க பையன் கூட பக்கத்துல ஒரு ஸ்கூல்லதான் படிக்கிறான். ஆனா இவளை மட்டும் 15 கிலோ மீட்டர் தாண்டி ஸ்கூல்ல சேர்த்தாங்கன்னா எதுக்கு? நல்லா படிக்கிறா... வருங்காலத்துல நல்லா வரணும்னுதான். இப்படி வர்றதுக்கா?’’ - அக்கம்பக்கத்தினரால் கூட அழுகையை வென்று அதிகம் பேச முடியவில்லை.

ஸ்ருதியின் தந்தை சேதுமாதவனே ஒரு ஆட்டோ டிரைவர்தான். அந்த ஏரியா குழந்தைகள் பலரும் அவர் ஆட்டோவில்தான் பள்ளி செல்வார்களாம். தன் பிள்ளை போல் அவர்களை பாதுகாப்பாக அழைத்துப் போய் பொறுப்பாக அழைத்து வரும் அவருக்கு ஏரியாவில் அப்படியொரு நல்ல பெயர். ‘‘எங்க பிள்ளைகளையெல்லாம் நல்ல படியே ஸ்கூல்ல சேர்த்தியே... உன் பிள்ளைய இப்படிப் பண்ணிட்டாங்களே’’ என்று சில அம்மாக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற, பேசும் நிலையிழந்து ஐஸ் பெட்டியிலிருக்கும் மகள் மீது சரிகிறார் சேதுமாதவன்.

‘‘பஸ்சுல ரெண்டடிக்கு ரெண்டடி ஓட்டை இருந்திருக்கு. அதை மறைக்கறதுக்காக ஒரு அட்டையை வச்சிருக்காங்க. வண்டி குலுங்கும்போது அது விலகிரும். அப்பப்ப புள்ளைங்கதான் அதை சரி பண்ணிக்குவாங்களாம். பஸ் இந்த ஸ்டாப்பிங்ல நிக்கிறதுக்கு முன்னாடி ஒரு வளைவுல திரும்பும். அங்கிருந்து பார்த்தாலே பஸ் ஸ்டாப் தெரியும். அங்க இருந்து ஸ்ருதி, அவங்க அம்மாவுக்கு கைகூட காட்டியிருக்கா. ஆனா, அடுத்த செகண்டே அந்த ஓட்டையில தவறி விழுந்துட்டா. கண்ணு முன்னாடி கை காட்டிக்கிட்டு வந்த பொண்ணு, சக்கரத்துல சிக்கிக் கிடக்கறதைப் பார்த்தா ஒரு தாயால தாங்க முடியுமா? அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அவங்க’’ என்கிறார்கள் சம்பவ இடத்தில் இருந்தவர்கள்.

‘‘இவளையும் நானே ஸ்கூல்ல விட்டிருப்பேன் சார். அது ரொம்ப தூரம். நான் அங்க போயிட்டா இந்த ஏரியா பசங்களை யார் கூட்டிட்டுப் போவான்னுதான் பஸ்ல அனுப்பி வச்சேன். பஸ்ஸுல ஓட்டை இருக்குனு அவ முன்னமே சொல்லியிருக்கா. ஆனா, இப்படி ஒரு விபரீதத்தை நினைச்சுக் கூடப் பார்க்கல. ஸ்ருதி நல்லா பாடுவா, டிராயிங் வரைவா, டான்ஸ் ஆடுவா. அவ என்ன படிக்கணும்னு ஆசைப்படுறாளோ அதைப் படிக்க வச்சுடணும்னுதான் ஓடியாடி சம்பாதிச்சேன். இப்ப எல்லாமே முடிஞ்சு போச்சு!’’ - அதற்கு மேல் வார்த்தை வராமல் குலுங்குகிறார் சேது மாதவன்.
இந்த பஸ் தரமானது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தகுதிச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள். தமிழகம் முழுக்க 18 ஆயிரத்து 974 ஸ்கூல் பஸ்கள் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இதுதவிர கான்டிராக்ட் பஸ், வேன்களில் தினமும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிக்குப் பயணிக்கிறார்கள். ‘பஸ்ஸில் ஏறியது முதல் குழந்தையின் பாதுகாப்பு, பள்ளியின் பொறுப்பு’ என்கிறது அரசின் சுற்றறிக்கை.

எங்கெங்கே எத்தனை ஓட்டைகள் என்பதை இப்போதுதான் கணக்கெடுக்கிறது அரசு. நம் சமூகத்தில் எந்த ஒரு விஷயமும் சரியாக, ஏதாவது ஒரு பலி தேவைப்படுகிறது. ஸ்ருதி கண்மூடி பலரது கண்களைத் திறந்திருக்கிறாள்!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.ரமேஷ்