இசைஞானியின் குடும்பப் பாடல்கள்...





ஒரு படத்தின் இசைக்கு இசைஞானியின் ஒப்புதலை வாங்குவதே ஆகப்பெரிய காரியம் என்றிருக்க, இளையராஜாவின் குடும்பமே பாடல்களில் பங்கெடுத்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது ராம்குமார்.வி இயக்கும் ‘வெயிலோடு விளையாடு’ படத்தில். படத்தின் இசையை கார்த்திக்ராஜா அமைக்க, அதில் ஒரு பாடலை இசைஞானியே எழுதிப் பாட, இன்னொரு பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடிக்கொடுக்க, மற்றொரு பாடலை வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் பாடிக் கொடுத்திருக்கிறார்கள்.

‘அங்காடித் தெரு’ மகேஷுடன் ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ தனன்யா நடித்திருக்கும் படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் புதுமை வேண்டி பாடல்களில் இசைஞானியின் குடும்பமே பங்கெடுத்த கதையைச் சொன்னார் ராம்குமார். ‘‘இந்தப் படத்தோட கதையை முடிவு பண்ணி, ஹீரோவுக்கான தேடல்ல இருந்தப்ப, மகேஷ் இதுக்குத் தோதா இருந்ததே முதல் ஆச்சரியம். ஏன்னா, கதைப்படி என் ஹீரோ ஒரு வாலிபால் விளையாட்டு வீரன். மகேஷும் நிஜத்துல வாலிபால் சாம்பியனாம். அதேபோலத்தான் இசையிலும், மற்ற அம்சங்களிலும் அடுத்தடுத்து ஆச்சரியங்கள் தொடர்ந்துச்சு.

என்னோட மனம் கவர்ந்த இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசைக்கிற படம் இது. அவர்கிட்ட ஒரே ஒரு விண்ணப்பம்தான் வச்சேன். ஒரு பாடலை இளையராஜாவைப் பாட வச்சு ரெக்கார்ட் பண்ணணும்னு. அதுக்காக இசைஞானிகிட்ட இவர் கேட்டப்ப, ஸ்கிரிப்ட் என்னன்னு கேட்டிருக்கார். இவர் கதையைச் சொன்னதும் பாட ஒத்துக்கிட்டவர், ‘பாடலை நானே எழுதிடறேன்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரே எழுதிப் பாடிய ‘நெத்திப்பொட்டு வச்சு எம்மனசை இழுத்தாளே...’ங்கிற பாடல் அழகான கிராமிய மெலடியா அமைஞ்சது.

அடுத்து ஒரு பாடலுக்கு யாரைப் பாடவைக்கலாம்னு யோசிச்சப்ப, கார்த்திக் ராஜாவே சொன்ன சஜஷன் ‘யுவனைப் பாட வைக்கலாம்’ங்கிறது. அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டு அவர் பாடிய ‘தூரத்தில் உன்னைக் காணும் நேரத்தில்...’ங்கிற பாட்டு, இன்னைக்கு இருக்கிற யூத் ட்ரெண்டுக்குப் பொருத்தமா அமைஞ்சு பெரிய ஹிட்டாகியிருக்கு. இந்த சந்தோஷங்கள்ல, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தர்ற ‘கட்டுக்கடங்காத புயலென...‘ங்கிற பாடலுக்கு வெங்கட்பிரபுவையும், பிரேம்ஜியையும் கேட்டுப் பாட வச்சோம்.

காதலும், விளையாட்டும் ஹீரோவுக்கு சவாலா அமையும் படத்துல ஒரு குத்துப்பாடல் வருது. அதுக்கு சென்டர்ஃபிகரா சஞ்சனா சிங்கை ஆட வைக்க முடிவு செய்துட்டு, அவங்க கூட ஒரு ஹீரோ ஆடினா நல்லா இருக்குமேன்னு யோசிச்சோம். படத்தோட ஒளிப்பதிவாளர் மசானி, விமலுக்கு நண்பர். ‘கேட்டுத்தான் பார்ப்போமே...’ன்னு விமல்கிட்ட கேட்டப்ப, அவரும் எந்த ஈகோவும் பார்க்காம ஒத்துக்கிட்டு ஆடிக்கொடுத்தார். எல்லா வகையிலும் இளைஞர்களுக்கான ட்ரீட்டா இருக்கும் இந்தப்படம்..!’’
- ஜி