மாதாந்திர மளிகைச் சாமான் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு, அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகிவிட்டன ஃபினாயில், ஃப்ளோர் கிளீனர், டாய்லெட் கிளீனர் மற்றும் ஹேண்ட் வாஷ் போன்ற சுகாதார அயிட்டங்கள். இவையெல்லாம் திடீரென தீர்ந்து போனால் கையும் ஓடாது, காலும் ஓடாது பலருக்கு.
''உங்க வீட்டுக்குத் தேவையான ஃபினாயில், ஃப்ளோர் கிளீனர், டாய்லெட் கிளீனர், ஹேண்ட் வாஷை எல்லாம் நீங்களே சுலபமா தயாரிச்சு ஸ்டாக் வச்சுக்கலாம். இதையெல்லாம் தயாரிச்சு, வெளியில வித்து பிசினஸா பண்ண நினைக்கிறவங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு’’ என்கிறார் கலைச்செல்வி. 29 வருடங்களாக இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கிற இவர், கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

* என்னென்ன தேவை? முதலீடு?‘‘பைன் ஆயில், காஸ்டிக் சோடா, சோடியம் சல்பேட், சிலரி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட மூலப் பொருட்கள்... தவிர பக்கெட், பிளாஸ்டிக் குச்சி, பாட்டில்கள்... ஃபினாயில் தயாரிக்க 300 முதல் 500 ரூபாயும், சோப் ஆயிலுக்கு 500 ரூபாயும், ஹேண்ட் வாஷுக்கு 1,000 ரூபாயும், ஃப்ளோர் கிளீனருக்கு 150 ரூபாயும் முதலீடு தேவை.’’
* எத்தனை வகை? என்ன ஸ்பெஷல்?‘‘இப்பல்லாம் யாரும் ஆசிட் உபயோகிச்சு பாத்ரூமை சுத்தப் படுத்தறதில்லை. பாத்ரூம் டைல்ஸ்களை ஆசிட் வீணாக்கிடுது. அதே மாதிரி சில வகை ஃபினாயில் உபயோகிச்சா, ஆஸ்பத்திரி வாசனை வரும்னு அதையும் விரும்பறதில்லை. கைகளுக்கு பாதிப்பில்லாத, காரத்தன்மை இல்லாத டாய்லெட் கிளீனரையும், மல்லிகை, ஆரஞ்சு, லேவண்டர் மாதிரி வாசனை கலந்த ஃபினாயிலையும்தான் விரும்பறாங்க. அப்படி விருப்பமான எந்த வாசனையிலயும் நாம பொருள்களைத் தயாரிக்கலாம். வீட்டு உபயோகத்துக்குத் தனியாகவும், ஆபீஸ் உபயோகத்துக்குத் தனியாகவும், ஆஸ்பத்திரிகளுக்கு தனியாகவும் வேற வேற தரத்துல தயாரிக்க முடியும்!’’
* விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘கடைகளைவிட 2 ரூபாய் லாபம் கம்மியா வச்சு விற்பனையை ஆரம்பிக்கிறது நல்லது. முதல்ல அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். பிறகு மெதுவா கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். பெரிய உடலுழைப்பு தேவையில்லாத வேலை. ஒரே நாள்ல எல்லா பொருள்களையும் தயாரிச்சிட லாம். 25 சதவீத லாபம் நிச்சயம்.’’
* பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சியில 5 வகையான பொருள்களைக் கத்துக்க, கட்டணம் 1,000 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்