டாப்ஸிக்காக அடித்துக்கொள்ளவில்லை





டாப்ஸிக்காக பார்ட்டி ஒன்றில் நடிகர்கள் மனோஜும் மஹத்தும் அடித்துக்கொண்டதாக வெடித்த பிரச்னை, கிட்டத்தட்ட ஆறிப்போய்விட்டது. ஆனாலும், ‘சம்பவம் நடந்த இடத்தில் டாப்ஸி இருந்தார் - இல்லை’ என்ற பட்டிமன்றத்தின் சூடு தணியாமலே இருக்கிறது கோடம்பாக்கத்தில். நடந்த சம்பவம் பற்றி அறிய மஹத்தை தொடர்புகொண்டபோது அவரது செல்போனில் சிணுங்கியது ‘வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு...’ காலர் ட்யூன்.

‘‘மனோஜும் நானும் நண்பர்களாத்தான் பழகிட்டிருந்தோம். இடையில இந்த மாதிரி கசப்பான அனுபவங்களை சந்திப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல. (சம்பவம் நடந்த) அன்னிக்கு மனோஜைப் பத்தி நான் ஏதோ தப்பா பேசிட்டதா யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க. அப்போ நான் அங்க இருந்த கார்டன்ல தனியா ஒதுங்கி நின்னு செல்போன்ல பேசிக்கிட்டிருந்தேன். திடீர்னு மூணு பேர் என்னை நெருங்கி வந்தாங்க. என்னென்னவோ சொல்லி தகராறு பண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ வேகமா வந்த மனோஜும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு என்னைத் தாக்கினார். நான் அத எதிர்பார்க்கல. அங்கங்க எனக்குக் காயமாயிடுச்சு. மறுநாள் ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். அப்போதான் விசாரணைக்காக போலீஸ் வந்தாங்க. அவங்ககிட்ட நடந்ததைச் சொன்னேன். அவங்க அதை புகாரா எடுத்துக்கிட்டாங்க.

அப்புறமா மனோஜ் என்னை போன்ல கூப்பிட்டார். வேற ஒரு மூட்ல இருந்ததால கோவத்துல தாக்கிட்டதாவும், அதுக்காக வருத்தப்படுறதாவும் சொல்லி மன்னிப்புக் கேட்டார். நானும் அதை ஏத்துக்கிட்டேன். இதெல்லாம் நடந்த அந்த இடத்துக்கு டாப்ஸி வரவே இல்லை. அந்தப் பிரச்னை அதோடு முடிஞ்சுடுச்சு.’’

மனோஜின் அப்பா மோகன்பாபு உங்களை மிரட்டினதா சொல்றாங்களே?
‘‘அது உண்மையில்லைங்க. மோகன்பாபு சார் என்கிட்ட பேசவே இல்லை. மனோஜ் மட்டும்தான் பேசினார். அவரும் மன்னிப்பு கேக்கத்தான் பேசினாரே தவிர, மிரட்டுறதுக்காக இல்லை. இருந்தாலும் நான் கொடுத்த புகாரை இன்னும் வாபஸ் வாங்கல. அது அப்படியே இருக்கு. தெலுங்கு படத்துல நடிச்சப்போதான் டாப்ஸி கூட எனக்குப் பழக்கம் ஏற்பட்டுச்சுனு சொல்றதுலயும் உண்மை இல்லை. நான் தெலுங்குப் படத்துலயே நடிச்சதில்லை. ‘மங்காத்தா’தான் நான் நடிச்ச முதல் படம்.’’

அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் தனது பெயரை இழுத்து நீங்க விளம்பரம் தேடிக்கிட்டதா டாப்ஸி சொல்லியிருந்தாரே?

‘‘நான் யார் பேரையும் யூஸ் பண்ணல. டாப்ஸி பேரை வச்சு விளம்பரம் தேடிக்கணும்கிற அவசியமும் எனக்கு இல்ல. அவங்க புகாருக்கு நான் பதில் சொல்லவும் தேவையில்லனு நினைக்கிறேன். டாப்ஸியை எனக்குத் தெரியும்... அவ்வளவுதான். அவங்ககிட்ட நானோ, என்கிட்ட அவங்களோ பேசுறதில்ல. என் செல்போன்ல டாப்ஸியோட படங்களையும் வீடியோஸையும் வச்சிருக்கறதா சில பத்திரிகைகள்ல எழுதியிருக்காங்க. ஆனா, அப்படி எதுவும் என் போன்ல இல்ல’’ என்று கொதித்த மஹத்தை கூலாக்க வழக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம்.

அடுத்து நீங்க நடிக்கிற படங்கள்..?
‘‘க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கிற ஒரு படத்துல நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். இன்னும் டைட்டில் வைக்கல. டைரக்டர் பாலாவோட அசிஸ்டென்ட்தான் இயக்குறார். எனக்கு ஜோடியா க்ருத்தி நடிக்கிறாங்க. ஏற்கனவே இவங்க தெலுங்குல பவன் கல்யாண் ஜோடியா நடிச்சிருக்காங்க. போட்டோ ஷூட் முடிச்சு, அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குது. சோலோ ஹீரோவாதான் நடிப்பேன்னு இல்ல... ‘மங்காத்தா’ மாதிரி ரெண்டு மூணு ஹீரோ சப்ஜெக்ட்லயும் நடிக்கத் தயாரா இருக்கேன். ‘தல’யே அது மாதிரி கேரக்டரில் நடிக்கும்போது சாதாரண வாலு நான் மாட்டேனா?’’ என்று கலகலப்பாக முடித்தார் மஹத். டாப்ஸி ஜோடியாவும் நடிப்பீங்கதானே மஹத்?
- அமலன்