சுட்ட கதை சுடாத நீதி





தொண் ணூறு வயதைத் தொட்ட மூதாட்டி அவர். பேத்தியின் திருமணத்துக்கு நகை வாங்க, அவரையும் கூட்டிப் போனார்கள். வயதுமுதிர்ந்த சுமங்கலி என்பதால், அவரது பெயரிலேயே பில் போட்டு, அவர் கையாலேயே வாங்கினார்கள். அவர்கள் நகை வாங்கிய நேரம், அந்த நகைக் கடையில் கஸ்டமர்களுக்கு ஒரு பரிசுப் போட்டி நடந்துகொண்டிருந்தது. அதற்கான கூப்பனை பாட்டி பெயரில் நிரப்பிக் கொடுத்தார்கள்.

கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து, இப்போது நகைக்கடையிலிருந்து போன்! பாட்டிக்கு முதல் பரிசான ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. பாட்டியைக் கூட்டிப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். வீடே சந்தோஷத்தில் துள்ளினாலும், ஒரு சின்ன கலக்கம் எல்லோருக்குள்ளும் ஓடியது. தனி அறையில் படுத்திருக்கும் பாட்டி, ஏற்கனவே இதய நோயாளி. ‘அதிர்ச்சியான விஷயங்கள் எதையும் அவருக்குச் சொல்லக்கூடாது’ என குடும்ப டாக்டர் கட்டளை போட்டிருக்கிறார். இனிமையான விஷயமாக இருந்தாலும், இந்தச் செய்தி தரும் அதிர்ச்சி அவரை ஆபத்தில் கொண்டுவிடுமோ என கவலைப்பட்டார்கள்.

குடும்ப டாக்டரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார்கள். ‘‘இவ்வளவுதானா? என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல... இனிமே நீங்க கவலைப்படத் தேவையில்லை. இந்தமாதிரி நிறைய விஷயங்களை நான் பார்த்திருக்கேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில என்ன செய்றதுன்னு நான் பயிற்சி எடுத்திருக்கேன். பக்குவமா பாட்டிக்கு நான் சொல்றேன்...’’ என்ற டாக்டர், பாட்டியின் அறைக்குச் சென்றார்.
ஏதேதோ குடும்ப விஷயங்களை சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கடைசியாக டாக்டர் சுற்றி வளைத்து இப்படிக் கேட்டார்... ‘‘பாட்டிம்மா! உங்களுக்கு திடீர்னு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க?’’

பாட்டி சிரித்தபடி பதில் சொன்னார்... ‘‘அதுல பாதியை உங்களுக்குக் கொடுத்துடுவேன் டாக்டர்! நீங்க எவ்ளோ அக்கறையா என்னைப் பார்த்துக்கறீங்க!’’

இந்த பதிலை எதிர்பார்க்காத டாக்டர் அப்படியே அதிர்ச்சியில் மயங்கி தரையில் சரிந்தார். எல்லோரும் சோதித்தபோது, அவரது மூச்சு நின்று போயிருந்தது. அதிர்ச்சிகளுக்கு பழகிக் கொள்ளுங்கள்!