இது பழைய மொந்தையில் புதிய கள் சேர்க்கும் காலம். கடந்த தலைமுறையில்
ரசிக்கப்பட்ட படங்களை இன்றைய காலத்துக்கும், நவீனத்துவத்துக்கும் ஏற்ற
வகையில் மாற்றி எடுக்கும் போக்கில் சமீபத்தில் ‘ஸ்பைடர்மேன்’ மீண்டும் மறு
உருவெடுத்ததைப்போல, இப்போது ‘டோட்டல் ரீகால்’ மறு உருவெடுக்கிறது. 1990ல்
அர்னால்ட் நடித்து வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம், இப்போது
அதே தலைப்பில் நடிகர்கள், இயக்குநர் மாறி புதிய வடிவம் பெற்றிருக்கிறது.
1966ல் பிலிப் கே.டிக் எழுதிய ‘வி கேன் ரிமெம்பர் இட் ஃபார் ஹோல்சேல்’ என்ற
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் ஸ்க்ரிப்ட். கடந்த
படத்தில் செவ்வாய்க் கிரக பயணத்தை இணைத்து சொல்லப்பட்ட திரைக்கதை, இப்போது
இந்த உலகத்தை ஆளும் அரசியல் சக்திகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
கொஞ்சம் குழப்பமாக இருந்தால், ‘இந்தக் கதை நடப்பது 2084ல்’ என்று தெரிந்து
கொள்வது நலம். வருடத்துக்கு வருடம் அறிவியல் விந்தைகள் வளர்ந்து கொண்டே
போக, அடுத்த 72 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்க சாத்தியம் இருக்கிறதென்பது
ஆவலைத் தூண்டும் விஷயம்தான். அப்படி ‘ரீகால்’ என்னும் நிறுவனம், நமக்கு
விருப்பமான வாழ்க்கையை நினைவுகளில் புதைத்துத் தருவதாக கதை போகிறது. நம்
விருப்ப வாழ்க்கையைக் காசு கொடுத்து வாங்கி, கனவுகளில் கண்டு இன்புறலாம்.
முந்தைய படத்தில் செவ்வாய்க் கிரகம் போகும் தன் கனவில் திளைக்கப் போன
பூமியிலிருக்கும் தொழிலாளி அர்னால்டுக்கு ஏற்படும் அனுபவம், அதைத்
தொடர்ந்து செவ்வாய்க்கே அவரை இட்டுச் செல்லும் பயணமாக அமைந்தது. இந்தப்
புதிய படத்தில் அந்தப் பயணம் பூமியிலேயே அமைகிறது. கண்டங்களெல்லாம்
சுருங்கி இரண்டே சர்வாதிகார சக்திகள் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன.
புவியின் கிழக்குப் பகுதியை நியூ ஷாங்காயும், மேற்குப் பகுதியை யூரோ
அமெரிக்காவும் ஆண்டு கொண்டிருக்க, அவர்களுக்குள்ளும் ‘யார் அப்பாடக்கர்..?’
என்கிற போருக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் களமாக புதிய கதை
விரிகிறது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படத்தில், வளர்ந்து வரும் ஹாலிவுட்
ஸ்டாரான காலின் ஃபேரல் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கேட் பெகின்ஸேலும்,
ஜெஸ்ஸிகா பியலும் நடித்திருக்கிறார்கள். ‘அண்டர் வேர்ல்ட்’, ‘டை ஹார்ட்’
சீரிஸ் படங்களின் மூலம் பெரும் பெயர் வாங்கிய லென் வைஸ்மேன்தான் இயக்குனர்.
இந்தப் படம் அவருக்குப் புதிய அனுபவத்தைத் தந்திருக்கும். காரணம்...
ஹீரோயினாக நடித்திருக்கும் கேட் பெகின்ஸேல், அவரது காதல் மனைவி.
உலகமெல்லாம் வெளியாகும் அதே ஆகஸ்ட் மூன்றாம் தேதி இங்கே உட்கார்ந்து
தமிழிலும் எந்தக் குழப்பமும் இல்லாமல் படத்தைப் பார்க்க முடியும் என்பதும்
கால மாற்றத்தின் ஒரு விந்தைதான்..!
- ஜி