செல்போன் காதல்2





செல்போனில் தவறான அழைப்பு வழியாக எனக்கொரு காதலி அமைந்தாள் என்று நான் சொன்னால், ‘கொடுத்து வச்ச மகராசன்’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். தினமும் செல்போனில் சுவேதாவின் குரல் இனிமையைக் கேட்கவில்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

என் இதயம் இந்த ஒரு மாத காலமாக ‘சுவேதா... சுவேதா...’ என்றுதான் துடிக்கிறது. நான் டூவீலர் ஒர்க்ஷாப்பில் நான்கு வருடங்களாக மெக்கானிக்காக இருக்கிறேன். சுவேதாவிடமும் உண்மையைத்தான் சொன்னேன். சுவேதாவும் இதே நகரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். ‘நேரில் பார்க்கணும் செல்லம்’ என்று பல நாட்களாகக் கேட்டு, இன்றுதான் கடை முகவரியைச் சொன்னாள். ‘‘இதோ ட்ரையல் பார்த்து வருகிறேன்’’ என்று சொல்லி யமாஹாவை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்.

வெறும் கையோடா செல்வது என்று பூ வாங்கினேன். அந்த வீதியில் ஜெராக்ஸ் கடைக்கு எதிர்ப்புறம் இருந்த மளிகைக்கடை முன் யமாஹாவை நிறுத்தி, ஸ்டைலாய் சாய்ந்து நின்று சுவேதா செல்லத்தைப் பார்த்தேன்! ஹா... வானுலக தேவதை!

செல்போனில் அவளைக் கூப்பிட்டேன். எடுத்தவள், ‘‘மணி மூன்று ஆச்சு! என்ன பண்றீங்க? ஓனர் சாப்பிடப் போனவரு நாலு மணிக்குள்ள வந்துடுவாரு. சீக்கிரம் வாங்க, எதிர்ல மளிகைக்கடைகிட்டே பைக்ல சாய்ஞ்சுட்டு ஒரு கொரங்கு என்னை வெறிக்கப் பார்த்துட்டு இருக்கு. அது பண்ற பந்தா இருக்கே! ஆளும் அவன் மூஞ்சியும்... கையில பூ வேற... எந்த பேக்குக்கு குடுக்க நிற்கிறானோ! வாங்க ரவி...’’