செல்போன் காதல்3





சுந்தருக்கு மனசே சரியில்லாமல் இருந்தது. அறை நண்பன் கார்த்தி கூட, ‘‘ஏன்டா பெண்டாட்டியை முழுங்கினவன் போல உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டான்.

‘அவசரப்புத்தியினால் காதலைக் கெடுத்துக் கொண்டேனே’ என்று வருத்தம் மேலிட அமர்ந்திருந்தான்.‘‘மெஸ்சுக்கு சாப்பிடப் போகலாமா’’ என்று கார்த்தி கேட்டதும், ‘பசி இல்லை’ என்று சொல்ல வாய் வந்தது.

‘‘கொஞ்ச நேரம் போகட்டும்’’ என்றான்.இன்று மதியக் காட்சிக்கு தேவயானியும், சுந்தரும் சென்ட்ரல் தியேட்டருக்குச் சென்றிருந்தார்கள். தேவயானி பனிரெண்டாவதில் அறிவியல் குரூப் படிக்கிறாள். தியேட்டரில் சுந்தர் உரிமையாய் அவள் தோளில் கைபோட்டு படம் பார்க்க முயற்சித்தான்.

கோபத்தில் எழுந்தவள், இவன் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். இவனும் பாதியிலேயே அவள் பின்னால் கிளம்பினான்.‘‘ராத்திரி உனக்கு போன் போடறேன். நீ கொடுத்த கிஃப்ட் அத்தனையையும் வந்து வாங்கிக்கோ.

போன்ல இடம் சொல்றேன். மோசமான பையன் நீ’’ என்றவள் போய்விட்டாள். இப்போது இவன் செல்போன் அலறியது; நின்றது; அலறியது. சுந்தர் அழைப்பை எடுக்கவில்லை!‘‘உன் ஆள்தானே கூப்புடுது... எடுத்துப் பேசுடா! தினமும் குசுகுசுன்று மணிக்கணக்கா பேசுவே... என்ன ஆச்சு?’’ என்ற கார்த்தியிடம், ‘‘இனிமேல் பேசலைடா! படிக்கிற பொண்ணு, நல்லா படிக்கட்டும்’’ என்றான்.வரிசையாய் குறுஞ்செய்திகள் அவள் பெயரில் வர, ஒன்றைத் திறந்து பார்த்தான்.

‘சாரிடா செல்லம்’ என்றிருக்க, ‘‘சாப்பிடப் போலாம் கார்த்தி’’ என்று எழுந்தான் சுந்தர்.