“என் தலையில செயற்கை முறையில் முடியை ஒட்ட வைத்திருக்கிற நேரமா பார்த்து இந்தப் படத்தைக் காட்டுறீங்களே தலைவா...இதைத்தான் டைமிங்னு சொல்றாங்களா?’’
தனது டிரேட் மார்க் லொள்ளுடன் இந்தப் புகைப்படம் பற்றி பேசத் தொடங்கினார் சத்யராஜ்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த விக் நம்மளோடதுன்னு இந்த உலகத்துக்கே தெரியும். மொட்டைக்கு நெருங்கிய சொந்தம் என்கிற அளவிற்குத்தான் என்னோட தலையில் முடி இருக்கும் என்று காட்டிக்கொள்வதிலும் நான் ‘ஓப்பன்’ டைப் என்பதும் தெரிந்த விஷயம். ஆனாலும் இருக்கிற கொஞ்சநஞ்ச முடியையும் எடுத்துட்டு சில படங்களுக்காக நான் மொட்டை போட்டிருக்கேன். ‘100வது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘அமைதிப்படை’, ‘பெரியார்’, ‘ராமச்சந்திரா’, ‘மாறன்’ படங்கள் அந்தப் பட்டியலில் இருக்கு.
கொல்லத்தில் ஒரு பேலஸில் ‘அமைதிப்படை’ ஷூட்டிங்கின்போது எடுத்த படம் இது. கிளைமாக்ஸில் சாமியாராக வரும் காட்சியில் நடிப்பதற்காகத்தான் மொட்டை போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆனதே தனிக் கதை. ஒரு நாள் மணிவண்ணன் சாரிடமிருந்து எனக்கு போன். ‘ஒரு டூயல் ரோல் சப்ஜெக்ட் இருக்கு... அதுல ஒரு ரோல் வில்லன். கதை சொல்றேன் வாங்க’ என்று அழைத்தார்.
அப்போதுதான் ஹீரோவாக எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்த நேரம் என்பதால், வில்லன் வேடத்தில் நடிக்க எனக்குத் தயக்கம். அதை மணிவண்ணனிடம் சொன்னேன். ‘கதை கேளுங்க... பிடிச்சிருந்தா நடிங்க. இல்லாட்டி பரவாயில்லை’ என்று வற்புறுத்தவே, அவர் வீட்டுக்குப் போனேன். படங்கள் பற்றிப் பேசுவதாக இருந்தால் பெரும்பாலும் அவர் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்துதான் பேசுவோம். அன்றும் மொட்டை மாடியில் வைத்துத்தான் கதை சொன்னார். இரண்டு மனசோடுதான் கதை கேட்டுக்கொண்டிருந்தேன். கதைப்படி தேர்தல் முடிவு வர வர, கொஞ்சம் கொஞ்சமாக நாற்காலியில் நான் தள்ளி உட்காரும் காட்சியை அவர் சொன்னதுதான் தாமதம், உடனே ஓகே சொல்லிட்டேன்.
படம் ரிலீசானதும் பெரிய பெரிய போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுசும் சூப்பர் கலெக்ஷனைக் கொடுத்துச்சு. எனக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நான் மட்டும் கதை கேட்க போகாமல் இருந்திருந்தால் அப்படியொரு வெற்றியை சந்தித்திருக்க முடியாது!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்