மகத்தான எதிர்காலம் தரும் மத்திய அரசு வேலை!





மத்திய அரசின் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் நாட்டின் உயரதிகாரிகளுக்கான தேர்வுகளை போதுமான அளவு அலசிவிட்டோம். இனி, அந்த உயரதிகாரிகளுக்கு உதவும் அடுத்தகட்டப் பணியாளர்களுக்கான தேர்வுகளைப் பார்ப்போம். இப்படிப்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காகவே அமைக்கப்பட்டதுதான் ‘ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்’ எனும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம். எஸ்.எஸ்.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆணையம் சமீபத்தில்தான் எழுத்தர் பணிக்கான தேர்வுத் தேதிகளை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் பல்வேறு தேர்வுகள் குறித்து இங்கே விலாவாரியாக விளக்குகிறார், போட்டித் தேர்வு பயிற்சி மையமான ‘சக்தி அகாடமி’யின் இயக்குனர் பாலாஜி.

‘‘வருடத்துக்கு ஒரு முறைதான் இந்தத் தேர்வுகளை ஆணையம் நடத்துகிறது. சுமார் பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வேலைகளுக்கான போட்டித் தேர்வு இது. பிளஸ் 2 தகுதியுடையவர்கள் எழுதும் ஹையர் செகண்டரி லெவல் தேர்வு, டிகிரி படித்தவர்கள் எழுதும் கிராஜுவேட் லெவல் தேர்வு மற்றும் இன்னும் ஐந்து வகையான தேர்வுகளை வருடந்தோறும் இந்த ஆணையம் நடத்துகிறது. முதல் இரண்டு தேர்வுகளில்தான் அதிகபட்சமான காலியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன. மற்ற ஐந்து தேர்வுகளும் விசேஷ அதிகாரிகளுக்கான வேலை என்பதால், இதற்கு கல்வித் தகுதி டிகிரியாக இருந்தாலும், அதில் சில பாடங்களைக் கட்டாயம் படித்திருக்க வேண்டுமென்று ஆணையம் விரும்புகிறது. அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் முதல் இரண்டு தேர்வுகள் குறித்து நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சியாகிறவர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். உதாரணமாக, ராணுவத் துறையின் தலைமைச் செயலகங்கள், தேர்தல் கமிஷன், வெளியுறவுத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை, ஜனாதிபதியின் செயலாளர்களுக்கான துறை, விஜிலென்ஸ் எனப்படும் மத்திய கண்காணிப்புத் துறை, தடயவியல் இயக்குனர் துறை, ஆடிட்டிங் துறை, கணக்கியல் துறை, பாதுகாப்புக்கான கணக்குத் துறை, சி.பி.ஐ, மத்திய காவல் துறை, வருமான வரித் துறை என்று தேர்வுகளுக்கு ஏற்ப வேலைகள் வழங்கப்படுகின்றன. 

பொதுவாக எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகளை வட இந்திய மாணவர்கள்தான் அதிகம் எழுதுகிறார்கள். வினாத்தாளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் அவர்களே அதிக வேலைகளைத் தட்டியும் செல்கிறார்கள். அறிவிக்கப்படும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களில் மாநிலங்களுக்கான காலியிடங்கள் என்று தனியாக ஒதுக்கப்படுவதில்லை. திறமை மட்டுமே இந்தத் தேர்வுகளில் ஜெயிப்பதற்கான அளவுகோல் என்பதால், ஆணையம் வழங்கும் அத்தனை பணியிடங்களையும் தமிழக மாணவர்களே முழுதும் கைப்பற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இனி ஹையர் செகண்டரி லெவல் தேர்வை கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்...


இந்தத் தேர்வுக்கு கல்வித் தகுதி பிளஸ் 2. வயது பதினெட்டிலிருந்து இருபத்தி ஏழுக்குள் இருக்கவேண்டும். பிற்பட்ட வகுப்பினருக்கு இந்த வயது வரம்பில் மூன்று வருடமும், தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பினருக்கு ஐந்து வருடமும் தளர்வு உண்டு. இந்தத் தேர்வு இரண்டு வகையாக நடக்கிறது. ஒன்று, எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் கிளார்க் எனப்படும் எழுத்தர் வேலை. இரண்டாவது, ஸ்டெனோகிராஃபர் எனப்படும் சுருக்கெழுத்தர் வேலை. இரண்டுக்கும் தனித்தனியான தேர்வுகள்.

எல்.டி.சி தேர்வு... எக்ஸ், ஒய், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரிவுகளுக்கும் ஒரே வகையான எழுத்துத் தேர்வுதான். எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும் ‘ஃபிசிகல் எஃபிஷியன்ஸி டெஸ்ட்’ எனும் ஸ்கில் டெஸ்ட்தான் மூன்று பிரிவுகளையும் வித்தியாசப்படுத்துகிறது. முதல் இரண்டு பிரிவுகளுக்கும் ஸ்கில் டெஸ்ட் என்பது தட்டச்சு செய்வதாக இருக்க, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வுக்கான ஸ்கில் டெஸ்ட் மட்டும் கணினியில் தட்டச்சு செய்வதாக இருக்கும். இந்த ஹையர் செகண்டரி லெவல் தேர்வில் தேர்வானவர்களுக்கு பிரிவு அடிப்படையிலேயே அரசுத் துறைகளில் வேலை கிடைக்கும்.

 உதாரணமாக ‘குரூப் எக்ஸி’ல் தேர்ச்சி பெறுபவர்கள், ராணுவத் தலைமையிடங்கள், தேர்தல் ஆணையம், அயல்நாட்டு துறை சர்வீஸ்கள், நாடாளுமன்றத் துறை, ஜனாதிபதி அலுவலகம், மத்திய விஜிலன்ஸ் ஆணையம் மற்றும் தடய அறிவியல் இயக்குநரகம் போன்றவற்றில் அமர்த்தப்படுவார்கள். ‘குரூப் ஒய்’யில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம், ஆடிட்களுக்கான அக்கவுன்ட் அலுவலகங்கள், பொது கணக்கீடு மற்றும் டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸ் துறைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பிரிவில் தேர்வாகிறவர்கள் இண்டியன் ஆடிட்டிங் ஜெனரல் அலுவலகம், விவசாய அமைச்சகம், பேடன்ட்-ட்ரேட் மார்க்-டிசைன் துறைகளுக்கான அலுவலகங்கள் போன்றவற்றில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இனி, தேர்வின் அமைப்பு பற்றிப் பார்க்கலாம்...

இந்தத் தேர்வு இரண்டு கட்டமாக நடக்கும். ஒன்று எழுத்துத் தேர்வு. அடுத்தது ஸ்கில் டெஸ்ட். எழுத்துத் தேர்வு ஆப்ஜெக்டிவ் முறையிலானது. அதாவது, ஒரு கேள்வியைக் கொடுத்து நான்கு பதில்களைக் கொடுத்திருப்பார்கள். சரியானதற்கு டிக் அடிக்க வேண்டியதே பாக்கி. இதில் நான்கு வகையான பாடத் திட்டங்களிலிருந்து கேள்விகள் வரும். ஒன்று, ஜெனரல் இன்டலிஜென்ஸ் எனப்படும் பொது அறிவுத் திறன். இதில் ஐம்பது கேள்விகள். இரண்டாவது, ஆங்கிலம். இதிலும் ஐம்பது கேள்விகள். மூன்றாவது, நியூமரிக்கல் ஆப்டிட்யூட் எனப்படும் கணித நுண்ணறிவு. இதிலும் ஐம்பது கேள்விகள். கடைசியாக ஜெனரல் அவேர்னஸ் எனும் பொது அறிவு. இதிலும் ஐம்பது கேள்விகள். மொத்தம் இருநூறு கேள்விகள்.

ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்ற விதத்தில் மொத்தம் இருநூறு மதிப்பெண்கள். இரண்டு மணி நேர அவகாசம். ஜெனரல் இன்டலிஜென்ஸ் என்பது உங்களது பகுத்தறியும் திறனை சோதிப்பது. இதில் தர்க்க அறிவு, படங்களைப் புரிந்து பதிலளித்தல், வித்தியாசங்களைக் கண்டுபிடித்தல், சின்னங்களைக் கண்டுபிடித்தல் போன்றவற்றில் கேள்விகள் இருக்கும். ஆங்கிலத்தில் இலக்கணம், அருஞ்சொற்பொருள், எதிர்ச்சொற்கள், வாக்கியங்களை சரி பார்த்தல், சொற்களைப் பற்றிய அறிவு போன்றவற்றில் கேள்விகள் இருக்கும். நியூமரிக்கல் ஆப்டிட்யூடில் அடிப்படைக் கணிதம் தொடர்பான கேள்விகள் இருக்கும். ஜெனரல் அவேர்னஸில் இந்தியாவின் சமகால நிகழ்வுகள், இந்திய வரலாறு, பண்பாடு, புவியியல், சுற்றுச்சூழல் மற்றும் இந்தியாவின் நட்பு நாடுகள் குறித்த கேள்விகள் இருக்கும்.

பொதுவாக எல்.டி.சி தேர்வுக் கேள்விகள் எல்லாமே பிளஸ் 2 லெவலில்தான் இருக்கும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க் உண்டு. இந்த எழுத்துத் தேர்வுக்குப் பின், ‘ஸ்கில் டெஸ்ட்’ எனப்படும் பணித் திறனை சோதிக்கும் தேர்வு. அதைப் பற்றி அடுத்து பார்க்கலாம்...
- டி.ரஞ்சித்