‘‘இது பொம்மனுக்கும், அல்லிக்கும் காதல் வந்த கதை. அதுக்குக் காரணமா ஒரு விஷயம் அமைய, அங்கே முக்கியத்துவம் அடையறான் மாணிக்கம்...’’ என்று சின்ன சஸ்பென்ஸ் வைத்துச் சிரிக்கிறார் திருப்பதி பிரதர்ஸின் ‘கும்கி’ இயக்குநர் பிரபு சாலமன்.
‘‘இங்கே ‘பொம்மன்’ங்கிறது என் படத்து ஹீரோ விக்ரம் பிரபு. ‘அல்லி’ங்கிறது என் ஹீரோயின் லக்ஷ்மி மேனன். ‘மாணிக்கம்’ங்கிறது கும்கி யானை...’’ என்று இன்னும் கொஞ்சம் புரியும்படி விளக்கம் சொன்னார் அவர். தலைப்புக்குப் பொருத்தமாக ‘மைனா’வில் மென்மையான ஒரு காதல் கதையை நெகிழ வைத்துச் சொன்னது போலவே, ‘கும்கி’யில் வலிமையான ஒரு காதல் கதையோடு வருகிறார் பிரபு சாலமன்.
‘‘என்னைக்கும் சலிக்காத விஷயம் காதல். ஆனா காதலுக்கான களம் புதுசா இருந்தா ரசிக்க முடியும். அதுக்காகத்தான் உள்ளே வருது கும்கி...’’ என்றவர் தொடர்ந்தார். ‘‘ஊருக்குள்ள புகுந்துடற காட்டு யானைகள் பண்ற அட்டகாசத்தை பேப்பர்ல படிக்கிறோம். அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்ட ‘கும்கி’ன்ற பழக்கப்பட்ட யானைகள் உதவுது. கொஞ்ச காலத்துக்கு முன்னால மசினக்குடியில நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டப்ப, அதிலேர்ந்து உதிச்ச விஷயம்தான் இந்தப் படக் கதையா விரிஞ்சது. ஒரு கிராமத்துல காட்டு யானை புகுந்து பிரச்னை ஏற்படுத்த, அதை விரட்ட கும்கியோடு அங்கே வர்றார் ஹீரோ விக்ரம் பிரபு. வந்த இடத்துல பழங்குடி இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மி மேனனைப் பார்த்துக் காதல் வயப்படறார். அந்தக் காதல்ல இதுவரை பார்க்காத பழமை, கலாசாரம் உள்ளிட்ட விஷயங்கள் புதுசா இருக்கும். யானை முன்னால வர, காதல் அதுக்குப் பின்னால வர்ற லைன்.

‘கும்கி’ன்னு டைட்டில் வச்சு யானை பிரதானப்பட்டதால, முழுக்க முழுக்க இது யானைகள் வாழ்வைப் பற்றியே சொல்ற படம்னு யாரும் நினைச்சுட வேண்டியதில்ல. அந்தக்களம் ஃப்ரெஷ்ஷா இருக்கவே, அதைக் காதலுக்கான விஷயமா பயன்படுத்திக்கிட்டேன்.
ஹீரோ விக்ரம் பிரபுவை சிவாஜி சாரோட பேரன், பிரபு சாரோட மகன்ங்கிறதுக்காகத் தேர்ந்தெடுக்கலை. யானைக்கு பக்கத்துல நிற்கிற அளவுக்கு தோரணை கொண்ட புதுமுகத்தைத் தேடிக்கிட்டிருந்தப்ப வந்து நின்னவர்தான் விக்ரம் பிரபு. அவரோட ஆறடிக்கு மேலான உயரம் எனக்குத் தோதா இருந்தது. படம் முடிஞ்ச நிலையில, அவர்கிட்ட என்ன எதிர்பார்த்தேனோ... அது கிடைச்ச திருப்தி இருக்கு. அது போலத்தான் லக்ஷ்மி மேனனும். எதிர்பார்ப்புக்கு மேல நடிக்கத் தெரிஞ்ச லக்ஷ்மி, மீண்டும் தமிழ் சினிமாவில மறைஞ்ச ஷோபாவைத் தட்டி எழுப்பிக் கொண்டுவருவாங்கன்னு நம்பலாம். தம்பி ராமையாவும் எதிர்பார்க்க முடியாத ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார்.
கம்பம் பக்கத்துல யாரும் போகாத தொட்டக்குடி கிராமத்துல படம் பிடிச்சாலும், சினிமாவுக்கான அழகியலுக்காக அதை மேட்ச் பண்ண பல இடங்களுக்கு பயணப்பட்டதுல ஜோக் நீர்வீழ்ச்சியோட அழகையும், ஒடிஷா காடுகளோட மஞ்சள் நிறப் பூக்களையும் தன் ஒளிப்பதிவுல சுருட்டிக்கிட்டு வந்திருக்கார் சுகுமார். ஜோக் ஃபால்ஸ்ல, மேலே அணை திறக்கிற பத்து நாளுக்குத்தான் முழுக்க தண்ணீர் வரும். அதேபோல ஒடிஷாவில அந்த மஞ்சள் பூக்கள் 20 நாள்தான் மலரும். இதுக்காகக் காத்திருந்து, அந்தக் காலக்கட்டத்துக்குள்ள படம் பிடிச்சது புது அனுபவம். ‘மைனா’வுல நானும், இமானும் சேர்ந்த காம்பினேஷனுக்கு புது எதிர்பார்ப்பு ஏற்பட்டதால, படத்துல வர்ற ஆறு பாடல்களுக்கு மட்டும் ஆறு மாதம் உக்காந்து வேலை பார்த்திருக்கோம்.

யானை தெருவில வரும்போதும் சரி, காதல் வரும்போதும் சரி... இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி கிடைக்குமில்லையா? அது ஒன்றுசேர்ந்து ‘கும்கி’யைப் பார்க்கும்போதும் கிடைக்கும்..!’’
- வேணுஜி