புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்





வெற்றியின் பாதையில் தங்களை திருப்பிவிட்ட தருணங்களை, ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்

‘‘தப்பான பாதையில் போயிட்டிருக்கோம்னு தெரிஞ்ச வினாடியில் திரும்பிடணும். அங்கிருந்தே புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். ‘இவ்ளோ தூரம் வந்துட்டோம்; இதே பாதையில் போயிடலாம்’னு போயிட்டே இருந்தா வாழ்ந்த திருப்தி இருக்காது. கிடைச்சதை அமைதியா ஏத்துக்கிட்டு வாழாம, பிடிச்சதுக்காக போராடி வாழும்போது கிடைக்கிற மனநிறைவுக்கு விலையே இல்லை. அப்படி ஒரு திருப்தியோடு வாழ்வதால், இதை உறுதியா சொல்றேன்!’’

- அனுபவங்கள் வார்த்தைகளாகும்போது, அர்த்தங்கள் எளிமையாகிவிடுகின்றன. மேஜை மீது கிடக்கிற புகழ்பெற்ற பத்திரிகைகளின் அட்டைகளை அலங்கரிக்கின்றன ஜி.வெங்கட்ராமின் புகைப்படங்கள். ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் உள்ள அழகை புதையலை எடுப்பதுபோல அள்ளி வருகிறது அவரின் கேமரா.

‘‘நினைத்தது உடனே நடந்துவிட்டால், அதன் அருமை தெரியாமல் போய்விடும். விருப்பங்களைத் துரத்திப் பிடித்தபிறகு விடுகிற பெருமூச்சில், கிடைத்ததை விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொள்ளும் மந்திரம் ஒளிந்திருக்கிறது. . கேமரா எடுத்துவிட்டால் ஒளிப்பதிவாளராகிவிடலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு. ஒரு போட்டோகிராபருக்கு கேமரா மட்டும் தெரிந்தால் போதாது. ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம் என மற்ற துறைகள் பற்றிய அறிவும் அவசியம். எல்லா கலைகளுக்கும் இது பொருந்தும்

‘பருத்தி வீரன்’ படத்திற்கான போட்டோ ஷூட். கதை நடக்கும் தேனி பகுதிகளில் போட்டோ எடுக்க முடிவு செய்தோம். பருத்தி வீரனின் முரட்டுத் தோற்றத்திற்கு வறண்ட பகுதிகளின் பின்னணி நல்லா இருக்கும் என்ற கற்பனையோடு போனேன். மழைக்காலம் தொடங்கி, எங்கு பார்த்தாலும் பசுமையாக தேனி ஏமாற்றியது. செம்மண் நிலத்தில், வானத்தின் நீலமும் கலக்கிற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, எந்தப் பின்னணியும் இல்லாமல் போட்டோ ஷூட் செஞ்சேன். பாராட்டுகள் கிடைத்தன. கார்த்தி, லுங்கியை முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டிக்கொண்டு, கையில் அரிவாளைப் பிடிப்பது போல, இயக்குனர் அமீர் நுணுக்கங்களை தெளிவாக சொல்லிக் கொடுத்தார். எனக்குத் தெரிந்த சில விஷயங்களையும் இணைத்தேன். வன்முறை வாழ்க்கை உடையவர்கள் எந்த மாதிரி லுங்கியை ஏற்றிக் கட்டுவார்கள் என சொல்லி சரி செய்தேன். ‘அரிவாளை கட்டைவிரல் அழுத்த, மற்ற விரல்கள் கைப்பிடியைச் சுற்றி வந்தால் பிடி வேற மாதிரி இருக்கும்’ என்று சொன்னதும் மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். வட சென்னையில் இருக்கும் வன்முறை நிறைந்த மனிதர்களோடு வளர்ந்திருக்கேன். மனிதர்களைக் கவனிப்பதில் இருந்துதான் இப்படியான போட்டோக்களை எடுக்க முடியும்.



லயோலா கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முதலாக மீடியா பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ டிகிரியைக் கொண்டுவந்தார்கள். ஓவியம், டிசைனிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங், போட்டோ, வீடியோ, விளம்பரங்கள் என மீடியா தொடர்பான அனைத்துப் பாடங்களோடும் வடிவமைக்கப்பட்டிருந்தது டிகிரி. தாகத்தோடு சுற்றித் திரிந்த எனக்கு, அருவியை அடைந்த சந்தோஷம். விண்ணப்பம் வாங்க நானும் என் அப்பாவும் கல்லூரிக்குள் போகிறோம். என் பள்ளி நண்பர்கள் பலர், டிகிரி முடித்த சான்றிதழோடு வெளியே வந்தார்கள். ‘இப்பதான் முதல் வருஷமா’ என்று அவர்கள் கேட்டதும், அப்பாவுக்கு தர்மசங்கடத்தைவிட அதிகமாக என் எதிர்காலம் பற்றிய பயம் வந்தது.

மூன்று ஆண்டுகள் வீணானதை நினைத்துக் கவலைப்படாமல், ‘பிற்காலத்தில் எனக்கு அடையாளம் தரப்போகிற துறையைக் கண்டுபிடிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது’ என பாசிட்டிவாக எடுத்துக்கொண்டேன். ஸ்டில் கேமரா என்னை ஈர்க்க ஆரம்பித்தது. ஆனால், சினிமாவில் ஒளிப்பதிவாளரானால் மட்டுமே அது வெற்றி. அத்தனை பேரின் இலக்கும் அதுவாகவே இருந்தது. ‘நான் சிறந்த போட்டோகிராபராக வரவேண்டும்’ என்று எடுத்த முடிவுதான், பல திருப்பங்களை வாழ்வில் ஏற்படுத்தியது.

ஒளிப்பதிவாளர் வாய்ப்பு கிடைக்காத திறமை குறைந்தவர்களே போட்டோகிராபர் ஆவார்கள் என்பது சமூகத்தில் மற்றவர்களின் கணிப்பு. அடுத்தவர்களின் கருத்துகளுக்காக வாழ முடியாது. ‘எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இதுல என்ன உயரமோ, அதை நான் நிச்சயம் தொடுவேன்’ என்று உறுதியா நின்னேன். போட்டோகிராபராக இந்திய அளவில் பெயரெடுத்த இக்பால், ‘ரசிக்கற விஷயம் எதையும் நம்பி பண்ணா, வளர்ச்சி இருக்கும்’ என்று நம்பிக்கை தந்தார். என் போட்டோக்களைப் பார்த்துவிட்டு, சென்னையில் இருந்த சிறந்த புகைப்படக் கலைஞர் சரத் ஹக்சரிடம் உதவியாளனாக சேரச் சொன்னார் இக்பால். எனக்கு இக்பாலிடம் சேர ஆசை. அவரிடம் சேர்ந்திருந்தால், பத்து பேரில் ஒருவனாக இருந்திருப்பேன். மிகச்சிறந்த போட்டோகிராபரான சரத் ஹக்சரிடம் ஆரம்பத்தில் இருந்த ஒரே உதவியாளன் நான் மட்டுமே. சின்ன இடத்தில் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்கிற தெளிவு எனக்கு அங்குதான் கிடைத்தது. சில ஆண்டுகளில் தனியாக போட்டோ ஷூட் செய்ய ஆரம்பித்தேன்.

திறமைக்கு முதல் வாய்ப்பு கிடைத்துவிடும். உழைப்பிற்கே இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். விளம்பரப் படங்கள், போர்ட்போலியோ என்று மெதுவாக ஆரம்பித்தது என்னுடைய பயணம். பணம் கிடைக்கிறது என எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்ளாமல், என்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை மட்டும் எடுத்துக்கொண்டேன். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு சிவாஜி கணேசன் அவர்களை அட்டைப் படமாக எடுத்துத் தரவேண்டும் என்று கேட்டார்கள். அந்த நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், நின்ற இடத்திலிருந்து இரண்டு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்ளச் சொன்னார் அவர் உதவியாளர். சிவாஜி மிடுக்கோடு வந்து நின்றார். ஆனால், அவர் நின்ற இடத்தில் லைட் போதுமானதாக இல்லை. மாடியில் நல்ல ஃப்ரேம் கிடைக்கும் என்று தோன்றியது. ‘கொஞ்சம் மாடிக்கு போக முடியுமா?’ என நான் கேட்டதும், பார்வையால் என்னை அளந்துகொண்டே படிகளில் ஏறினார் சிவாஜி. அந்தப் படம் பார்த்துவிட்டு, நிறைய பாராட்டுகள்.



சிரஞ்சீவியை படம் எடுப்பது இரண்டாவது வாய்ப்பு. அவரை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சி பற்றிய கட்டுரை அது. ஆனால் சிரஞ்சீவி, பாட்டுக்காக டான்ஸ் ஆடும் பளபளா காஸ்ட்யூமில் இருந்தார். என்னுடன் வந்த நிருபர் அவருடைய ரசிகர். அவரைப் பார்த்ததும் குழைந்து பேசி, ‘சீக்கிரம் படம் எடுக்க வேண்டும்’ என்று அவசரப்படுத்தினார். ‘அரசியல் தொடர்பான கட்டுரைக்கு இந்த உடை பொருத்தமாக இருக்காது’ என்று சொல்லி போட்டோ எடுக்க மறுத்துவிட்டேன். ‘இனிமேல் அவருடைய நேரம் கிடைக்காது’ என்று சொன்னார்கள். அந்த நிருபர் அவரிடம் குழைந்து நின்றது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை. நாம் பார்க்கிற வேலை பற்றிய கம்பீரம் நமக்கு இருக்க வேண்டும். இறங்கிப்போய் குழைகிறவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்பது என் கருத்து.

சில நாட்களில் நேரம் ஒதுக்கி என்னை வரச்சொன்னார் சிரஞ்சீவி. ‘என்னை போட்டோ எடுக்க முடியாதுன்னு போயிட்டீங்க’ என சிரித்தபடி சொன்னார். ‘சிரஞ்சீவி கோபத்தில் இருக்கிறார்’ என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், தன் வேலையை நேசிக்கிற ஒருவரை அவர் சரியாகவே புரிந்துகொண்டார் என்பது சில மாதங்களில் தெரிந்தது. அவருடைய தம்பி பவன் கல்யாண் சினிமாவில் அறிமுகமான படத்திற்கு போட்டோ ஷூட் செய்யும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அவருடைய குடும்பத்தில் அல்லு அர்ஜுன், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா போன்றவர்கள் சினிமாவில் அறிமுகம் ஆகும்போதும் நானே அவர்களை போட்டோ ஷூட் செய்தேன். அன்று மட்டும் நான் ‘முடியாது’ என்று சொல்லாமல் போயிருந்தால், அதோடு எனக்கும் சிரஞ்சீவிக்குமான தொடர்பு இல்லாமல் போயிருக்கும். குழைந்து பேசிய நிருபரைவிட, கண் பார்த்து உண்மை பேசிய நான் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். உண்மையாக இருந்துவிட்டால், வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை.  

அழகானவர்களை அழகாகக் காட்டுவது திறமை இல்லை. ஒவ்வொன்றிலும் ஒரு அழகு உண்டு. ‘எந்தக் கோணத்தில் பார்த்தால் அந்த அழகு வெளிப்படும்’ என்பதைக் கண்டறிவதுதான் சவால். ஒவ்வொரு முறை ‘க்ளிக்’ செய்யும்போதும், ‘அதன் அழகு வெளிப்படும் கோணம் அதுதான்’ என்று எனக்குத் தோன்றவேண்டும். புதிய கோணங்களைத் தேடுகிற நேரங்களில் மட்டுமே என்னை நான் கண்டுபிடிக்கிறேன்.  

அமிதாப் பச்சன் அவர்களை போட்டோ எடுத்த இரண்டாவது நாள், வாய்ப்பு தேடுகிற ஒரு பெண்ணுக்கும் போட்டோ ஷூட் செய்தேன். நண்பர் ஒருவர், ‘இதுல என்ன கிடைக்குது’ என்று கேட்டார். பிரபலமானதும் சின்ன வேலைகளை மறுத்துவிடுவோம். அதில் நிறைய நேரம் செலவாகும்; பணமும் குறைவாகக் கிடைக்கும். ஆனால் அதில்தான், ‘அதுவரை யாரும் அறியாத முகத்தின் மேல், மற்றவர்களின் கவனம் பதிய வைக்கிற சவால்’ நமக்குக் காத்திருக்கும். அதுதான் எனக்கு ரொம்ப பிடித்தது. ‘நீங்க போட்டோ எடுத்தா, எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும்’ என நம்பி வருகிற யாருக்கும் நான் ‘முடியாது’ என்று சொன்னதில்லை.

சின்னச் சின்ன சந்தர்ப்பங்களில், நாம கத்துக்க வேண்டிய பெரிய விஷயங்கள் அடங்கி இருக்கும். ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுத்த என்னுடைய ஸ்டுடியோவில், திடீரென்று ஜன்னல் வழியே புதிய லைட்டிங் வருகிறது. அருமையான லைட்டிங். புதிதாக அது எப்படி உருவானது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று நாள் தேடலுக்குப் பிறகு பதில் கிடைத்தது. தினம் தினம் தேடித்தேடிக் கற்றுக்கொள்ள இந்த ஒரு வாழ்க்கை போதாது’’ என்கிற வெங்கட்ராம் இன்னும் மாணவராகவே இருக்கிறார்.

காலத்தின் ஒரு வினாடியை புகைப்படமாக நிறுத்திவிடுகிற புகைப்படக் கலைஞர், நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே அவர் எங்கும் தேங்கி நின்றுவிடுவதில்லை. ஓடத் தயாராக இருப்பவர்களுக்கு, எல்லா இலக்குகளுமே அருகில் இருக்கின்றன.
(திருப்பங்கள் தொடரும்..)