
புத்தகம்
தமிழ் இலக்கியச் சூழலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பாளியாக, விமர்சகராக, இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தியாக இயங்கிவருபவர் ‘தி.க.சி.’ என்று அன்பொழுக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன். சாகித்ய அகாடமி விருது பெற்ற தி.க.சி., கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என எழுத்தின் அத்தனை பரிமாணங்களிலும் ஆழங்கால் பட்டவர். ‘கணையாழி’ இதழில் இவர் எழுதிய கட்டுரைகளை அழகுறத் தொகுத்திருக்கிறார் வே.முத்துக்குமார். புதுமைப்பித்தன், கல்கி, சி.சு.செல்லப்பா, வெ.சாமிநாத சர்மா, கே.சி.எஸ்.அருணாசலம், டி.எஸ்.சொக்கலிங்கம், கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாச ஆச்சார்யா, சரஸ்வதி ராம்நாத், சிவத்தம்பி, வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட படைப்பாளிகளுடனான தன் அனுபவங்கள், அவர்களின் படைப்புகள் சார்ந்த விமர்சனங்களை தனக்கே உரிய எளிய மொழிநடையில் எழுதியிருக்கிறார் தி.க.சி. இந்த 63 பக்க நூல், அறுபதாண்டு கால தி.க.சியின் அனுபவங்களை கடைந்தெடுத்துத் தருகிறது.
குறுந்தகடு
முத்தான மூன்று பாடல்கள், ஏழு தீம் மியூசிக்குடன் வெளிவந்திருக்கிறது ‘முகமூடி’ இசைத்தகடு. கார்க்கி எழுதி ஆலாப் ராஜு பாடியிருக்கும் ‘வாய மூடி சும்மா இருடா...’ பாடலை வித்தியாசமாக கம்போஸ் செய்துள்ளார் இசையமைப்பாளர். கே. மிஷ்கின் எழுதிப் பாடியிருக்கும் குடிவாழ்த்துப் பாடலில், ‘தூக்கம் இல்லாம போனா குவாட்டரு டாக்டருதான்... சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இதுதாண்டா திருவாரூர் தேரு...’ போன்ற வரிகளில் ஆல்கஹால் வார்த்தைகளால் போதையேற்றுகிறார். அதே பாடலின் இடையே ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே...’ பாடலை வயலினால் வாசித்திருப்பதை ரசிக்க முடிகிறது. சின்மயி பாடியுள்ள ‘மாயாவி...’ பாடலில் இசைக்குழுவினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. புல்லாங்குழல் வழியே வழிந்தோடும் ‘மாயாவி’ தீம் மியூசிக்கும் வசீகரிக்கிறது.
இதழ்
அன்பு பாலம்
உதவுவோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படும் இந்த இதழ், சமூகசேவையில் தனித்தன்மையோடு இயங்கும் ‘பாலம்’ அமைப்பிலிருந்து வெளிவருகிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் இதன் சிறப்பாசிரியர். ஜூலை இதழ், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பிதழாக வந்திருக்கிறது. ஆனந்தின் பேட்டி, அவர் பற்றிய சுவையான தகவல்கள் இதழ் முழுதும் விரவிக் கிடப்பதோடு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையையும் முன்வைக்கிறது. ஜெயகாந்தனின் ‘சுயரூபம்’ சிறுகதை, மன உணர்ச்சிகளைச் சீண்டுகிறது. சுதந்திரப் போராளி டாக்டர் வரதராஜுலு நாயுடு பற்றிய கல்பனாதாசனின் கட்டுரையும் முக்கியமானது. இந்த இதழ் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் கல்விப்பணிக்கே செலவிடுகிறார்கள். சேவையாகக் கருதியே இந்த இதழை வாங்கிப் படிக்கலாம்.
(ஆசிரியர்: பாலம் கலியாணசுந்தரம், தனி இதழ்: ரூ.15/-, ஆண்டுச் சந்தா: ரூ.200/-, முகவரி: எண்.1, 4வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20. பேச: 044-24402524.)
வலை
tamiltutor
நம் குழந்தைகள் ‘ஆனா, ஆவன்னா’ என்று தமிழ் கற்க இன்று விலையுயர்ந்த குறுந்தகடுகள் பல வருகின்றன. ஆனால், அதை மிக எளிமையாக, இலவசமாகத் தரும் ஆன்லைன் தமிழாசிரியர்தான் www.tamiltutor.com. எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முழுத்திரையில் தோன்ற, பின்னணியில் அந்த எழுத்தை ஒரு குரல் தெளிவாக உச்சரிப்பது பல சி.டிக்களில் உள்ள அம்சம்தான். அதைத் தாண்டி, வீடு, பூங்கா, பள்ளி, பறவைகள் என்று நம்மைச் சுற்றியுள்ளவற்றையும் கார்ட்டூன் போட்டு விளக்குவது இந்தத் தளத்தின் தனிச்சிறப்பு. இது தவிர, நீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று குழந்தைகளுக்குப் பிடித்த பலவற்றையும் படக்கதைகளாகத் தந்திருக்கிறார்கள். இந்தத் தளத்தின் சேவைகளை அனுபவிக்க முதலில் நம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்றாலும், அது இலவசப் பதிவுதான்.