நிழல்கள் நடந்த பாதை





ஆடைகளால் வருமா ஆபத்து?
‘‘பொம்பள பிள்ளைங்க அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணணும்; இல்லைன்னா நாலு பேர் இப்படி கையைப் பிடிச்சு இழுக்கத்தான் செய்வாங்க!’’

- சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் பொறுக்கிகளால் நடுவீதியில் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி மம்தா சர்மா வெளிப்படுத்திய கருத்தை மேலே அதன் உட்பொருளோடு மொழிபெயர்த்திருக்கிறேன். அவர் ‘மேல்நாட்டுக் கலாசாரம்... அது... இது...’ என்றெல்லாம் பேசினாலும், அடிப்படை விஷயம் இதுதான்.

சில மாதங்களுக்கு முன்பு இதே அம்மணி இதைவிட பயங்கரமான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ‘‘பசங்க பொண்ணுங்களைப் பார்த்து ‘நீங்க செக்ஸியா இருக்கீங்க’ன்னு சொன்னா அதை ஜாலியா எடுத்துக்கணும். இந்தக் காலத்துப் பசங்க ரொம்ப உற்சாகமானவங்க. நீங்க அழகா இருக்கீங்கங்கிறதைத்தான் அப்படிச் சொல்றாங்க’’ என்பதுதான் அந்தக் கருத்து. நல்லவேளை, ஏதாவது பாலியல் பலாத்காரம் நடக்கும்போது, ‘‘அதில் வன்முறையை மட்டும் பார்க்கக் கூடாது. அதில் உள்ள பாலியல் இன்பத்தையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று அவர் இன்னும் கருத்துச் சொல்லவில்லை.

கவுகாத்தியில் ஒரு இளம்பெண் நடுத்தெருவில் பாலியல் வன்முறைக்கு ஆளானதை ஒட்டிச் சொல்லப்படும் பல கருத்துகள், அந்தப் பாலியல் வன்முறையை விட பயங்கரமானதாக இருக்கின்றன. ‘அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைதான் வன்முறைக்குக் காரணம்’ என்பது, கிட்டத்தட்ட இந்தக் குற்றத்திற்கான பழியை அந்தப் பெண்ணின் மீதே சுமத்துவதற்குச் சமமானது. அதுமட்டுமல்ல... ‘‘பெண்கள் ஏன் ‘பப்’பிற்குப் போக வேண்டும்? அதனால்தானே இதெல் லாம் நடக்கிறது’’ என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது புதி தல்ல... கொஞ்ச நாளைக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு ‘பப்’பில் ஸ்ரீராம் சேனா குண்டர்கள் அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியபோது அதை விசாரிக்கச் சென்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ், ‘‘இதுபோன்ற இடங்களில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு கிடையாது. எனவே அவர்கள் தங்களைத் தாங்களேதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாக்கப்பட்ட பெண்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை என்றால், வெளிப்படையாக வந்து ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டியதுதானே?’’ என்றார்.

இவை யாவும் ஒன்றைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. ‘பெண்கள் பாதிக்கப்படும்போது அதற்கான முழுப் பொறுப்பையும் பெண்கள்தான் ஏற்க வேண்டும்’ என்பதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த மனோபாவத்திற்கும் சமீபத்தில் உ.பி.யில் அசாரா என்ற கிராமத்தின் பஞ்சாயத்தில், அந்தக் கிராமப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளைகளுக்கும் (திகாத்) எந்த வித்தியாசமும் கிடையாது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தலையில் முக்காடு போட்டுச் செல்ல வேண்டும். கிராமத்தைச் சேர்ந்த யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது. 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள், கடைகள், மார்க்கெட்டுக்கு தனியாகச் செல்லக் கூடாது. செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல உத்தரவுகள், கட்டுப்பாடுகள் அந்தப் பஞ்சாயத்தால் விதிக்கப்பட்டன.

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழகத்தில் ‘ஆசிரியைகள் சுடிதார் போன்ற ஆபாசமான(!) உடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது’ என்று கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எல்லோருமே பெண்களின் நன்மைக்காக, பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் இதையெல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள்.

சமீபத்தில் இந்தூரில் ஒரு ஆள், தன் மனைவியின் கற்பைப் பாதுகாப்பதற்காக அவளது பிறப்பு உறுப்பைச் சுற்றி கற்புக் கவசம் (நீலீணீstவீtஹ் தீமீறீt)   செய்து ஐந்து வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த செய்தியைப் படித்தேன். அந்த ஆளை மனநோயாளி என்று ஒதுக்கி விடலாம். ஒரு தேசமே கிட்டத்தட்ட இந்த மாதிரியான மனநோயில் மூழ்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கும் வன்முறைக்கும் ஆளாகும்போது அவளின் நடத்தையைப் பற்றியும் அவளது ஆடைகளைப் பற்றியும் கேள்வி எழுப்பியபடி அவளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பவர்களுக்கும் சேஸ்டிடி பெல்ட் போடுபவர்களுக்கும் இடையே எனக்கு எந்த வித்தியாசமும் கண்டு பிடிக்க முடியவில்லை.


மூன்று வயதுக் குழந்தையிலிருந்து 70 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு நாட்டில், பெண்கள் அணியும் ஆடைகள்தான் அவர்கள் மீதான வன்முறைக்குக் காரணம் என்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? ‘பப்’ மட்டுமல்ல... கோயில், தியேட்டர், பேருந்துகள், சொந்த வீடுகள் எல்லாமே பெண்களுக்கு ஆபத்தான இடங்கள்தான்!

இந்தியா இரண்டு யுகங்களுக்கு இடையிலான மோதலில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. பெண்கள் இன்று கலாசார ரீதியாக, பொருளாதார ரீதியாக, உடல் ரீதியாக, மன ரீதியாக யுகம் யுகமாய் தங்கள் மேல் சுமத்தப்பட்ட வன்முறைகளை ஒவ்வொன்றாக உடைத்தெறிகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் அவர்களது ஆடை, அணிகலன்களில் வந்த மாற்றம். ஆண்களின் இடங்கள் என்று சொல்லப்படும் அனைத்து இடங்களுக்கும் இன்று பெண்களும் செல்வது என்பது, பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு உலகத்தை அவர்கள் வென்றெடுப்பது என்பதுதான். இதைக் கண்டுதான் பழமைவாதிகள் உள்ளூர நடுங்குகிறார்கள். பெண்கள் தாக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ‘அது அவர்களின் சுதந்திரத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை’ என்று சொல்ல விரும்புகிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்லாத, செல்போன்களைப் பயன்படுத்தாத, மிகவும் ‘கண்ணியமாக’ ஆடை அணியும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ன? ஆடைகள்தான் பாலியல் வன் முறைக்குக் காரணம் என்றால், நமது ஊடகங்கள் தினமும் நம் முன் காட்டும் நிர்வாணப் பாலியல் காட்சிகளால் இந்தச் சமூகம் ஒரே நாளில் பைத்தியம் பிடித்து வன்முறையில் அழிந்து போய்விடாதா?
பெண்களின் மீதான வன் முறைக்கு அவர்களது உடையையும் அவர்களது நடத்தையையும் காரணமாக்குபவர்கள் தான் உண்மையிலேயே நமது சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் பெண்களின் ஆடைகளை எதிர்க்கவில்லை. அதன் வழியே வெளிப்படும் அவர்களது புதிய அடையாளத்தையும் அந்தஸ்தையும்தான் எதிர்க்கிறார்கள்.
ஆடித் தள்ளுபடி...

முன்பெல்லாம் ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்றார்கள். விவசாயம் அழிந்தபிறகு, இப்போது வியாபாரிகளுக்கு மட்டும்தான் ஆடிப் பட்டம்.

சில தினங்களுக்கு முன்பு நான் வழக்கமாகச் செல்லும் பிரபல வணிக வளாகத்தில் (ஷாப்பிங் மால்) ஒரு ஆயத்த ஆடைக் கடையில் (ரெடிமேட் ஷாப்) இரண்டு கொசுவுச் சட்டைகள் (டி ஷர்ட்ஸ்) வாங்கினேன். தமிழ்நாட்டையே பிடித்தாட்டும் ஆடித் தள்ளுபடி ஜுரம் அந்த வணிக வளாகம் முழுக்கப் பரவி இருந்தது. 40 சதவீதம் தள்ளுபடி போட்டிருந்த பிரிவில் ரொம்ப நேரம் தேடி அந்த இரண்டு சட்டைகளைத் தேர்வு செய்தேன். ஒரு சட்டையைத் தள்ளுபடியில் கொடுத்தவர்கள், இன்னொன்றுக்குத் தள்ளுபடி கிடையாது என்றார்கள். ஏனென்றால் அது சமீபத்தில் வந்த டிசைனாம். போன வருடமும் இதேதான் நடந்தது.

விளையாட்டு சாமான்கள் கடையில் நான் வழக்கமாகப் பார்க்கும் எல்லாப் பொருட்களும் திடீரென விலை உயர்ந்து தள்ளுபடியில் இருந்தன. ஒரே ஒரு பொருள் மட்டும் எழுபது சதவீதத் தள்ளுபடியில் இருந்தது. இதை வாங்கலாமா என்று என் குழந்தைகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் என்னைக் கேட்ட கேள்வியை இங்கே எழுத முடியாது. அது குழந்தைகள் ‘ஆய்’ போகப் பயன்படும் ஜீஷீttஹ். மலிவாகவும் இலவசமாகவும் கிடைக்கிறது என்றால் நாம் இதை மட்டுமா வாங்குவோம்?
மொட்டைக் கடுதாசி...

‘விசித்திரமான எண்ணங்கள் உதிக்கும் இடத்தை யாரால் கண்டுபிடிக்க முடியும்?’ என்று எழுதினார் புதுமைப்பித்தன். ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பாலியல் தொல்லைகள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்களது அலுவலக வாசலில் போலீசார் ஒரு புகார்ப் பெட்டி வைக்கப் போகிறார்களாம். அதில் தங்களுடைய பெயர், அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பெண்கள் புகார்கள் எழுதிப் போடலாமாம்.

மொட்டை பெட்டிஷன்கள்மீது போலீசார் சட்டப்படி எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்படுபவர்கள் விஷமிகளுக்கு பயப்படுவது போலவே போலீசிற்குப் போகவும் பயப்படுகிறார்கள் என்பதன் அடையாளம்தான் இந்த மொட்டைக் கடுதாசி பெட்டிகள். அநேகமாக இந்தப் பெட்டியில் பெண்களைத் தொந்தரவு செய்யும் விஷமிகள், அந்தப் பெண்களுக்கு எதிராகவே எழுதிப் போடுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
(இன்னும் நடக்கலாம்...)