நயம்படபேசு





From: கிரதீபா பாட்டில்@பழையஜனாதிபதி.காம்
Sent: Wednesday, July 25, 2012 2:12 PM
To: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: வாழ்த்துகள்


மதிப்பிற்குரிய முரணாப் ஐயாவிற்கு, வாழ்த்துகள். ஜெயலலிதாஜி பேச்ச கேட்டு சங்மா ஊரூரா லேகியம் விக்கப் போகும்போதே எனக்குத் தெரியும்... நீங்கதான் அடுத்த ஜனாதிபதின்னு! எப்படியோ இன்னும் அஞ்சு வருஷத்துக்கு ஜாலியா நீங்க இருக்கலாம். ராஷ்டிரபதி பவன்ல பால் காய்ச்சீட்டீங்களா? ரெண்டு லட்சம் சதுர அடியில, மூணு மாடி கட்டிடம் பெரிசா இருக்கே, சுத்திப் பார்க்கலாம்னு தனியா எங்கயும் போயிடாதீங்க. வந்த புதுசுல நான் அப்படி வாக்கிங் கிளம்பி, திரும்பி என் அறைக்கு வர்றதுக்கு வழி தெரியாம தவிச்சுட்டேன். கறுப்புப் பூனைங்க கூட உதவிக்கு வரல; கரப்பான் பூச்சியைப் பார்த்து பயந்து ஓடிவந்தப்ப யதேச்சையா என் ரூமைக் கண்டுபிடிச்சிட்டேன்.

உங்களுக்கு ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் சொல்றேன். நல்ல விஷயம் என்னான்னா, ராஷ்டிரபதி பவன்ல மொத்தம் 340 ரூம்கள் இருக்கு. கெட்ட விஷயம் என்னான்னா, நான் வெளிநாடு டூர் போனப்ப அதுல 339 ரூம் சாவிங்கள தொலைச்சுட்டேன். இருந்தாலும் கொஞ்சம் ரூம்களுக்கு டூப்ளிகேட் சாவி போட்டு வச்சிருக்கோம்.

ஐயா, சமையல்கட்டு தண்ணி பைப்பு கொஞ்சம் லூசு; சரியா மூடலைன்னா தண்ணி ஒழுகிட்டே இருக்கும். ஹால் டியூப்லைட் சுவிட்சு கொஞ்சம் எர்த் அடிக்கும்... கவனமா இருங்க! பெட்ரூம்ல இருக்கிற அட்டாச்டு பாத்ரூம்ல பாசி அதிகம்; வழுக்கி விட்டுரும்... பார்த்துக்கோங்க! பாத்ரூம் ஹீட்டர்ல தண்ணி சூடாக கொஞ்சம் லேட்டாகும்.

வேடிக்கை பார்க்கறேன்னு மாடி பால்கனியில ரொம்ப நேரம் நிக்காதீங்க. நேரா மேல குருவி கூடு கட்டி இருக்கு. அப்பப்ப அசிங்கம் பண்ணிடும். ஹால்ல இருக்கிற டி.வி கொஞ்சம் ரிப்பேர். மேல ரெண்டு தட்டு தட்டினா சரியா ஓடும். ஹால்ல தனியா உக்காராதீங்க; ‘சந்திரமுகி’ பேய் பங்களா மாதிரி பயத்துல நடுங்கிடுவீங்க! மனு கொடுக்க கும்பல் கும்பலா வர்ற கட்சிக்காரங்களை ரொம்ப நேரம் உக்கார வச்சுப் பேசுங்க. பேய் பயம் போயி, நாட்டைப் பத்தின பயம் வந்துடும்.

இவ்ளோ பிரச்னைகளோட இந்த மாளிகையில வாழ வேண்டியிருக்கேன்ற கவலையிலதான், அடிக்கடி வெளிநாடு போயிடுவேன். அது புரியாம பத்திரிகைக் காரங்க என்னென்னமோ எழுதறாங்க! ஐயா, சொல்ல மறந்துட்டேன்... வெளிநாடு போறப்ப எடுத்த போட்டோக்களை எல்லாம் ரெண்டு மூட்டையா கட்டி வச்சிருக்கேன். எடுத்துட்டு வர மறந்துட்டேன். டவாலி சைக்கிள்ல கட்டி எனக்கு அனுப்பி விடுங்க. அப்படியே காலி சிலிண்டர் ரெண்டு இருந்தா கொடுங்க, அடுத்த வாரம் திருப்பித் தந்துடுறேன். மன்மோகன் சிங் அங்க வந்தாருன்னா, சமையல்காரங்கள விட்டு அவருக்குப் புடிச்ச அதிரசம் செஞ்சு கொடுக்கச் சொல்லுங்க. உங்களுக்குத் தெரியாததா... பாவம் அவரு, அது சாப்பிட மட்டும்தான் வாய தொறப்பாரு.
மற்றவை நேரில்... அன்புச் சகோதரி, கிரதீபா

From:   முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Sent: Thursday, July 26, 2012 12:19 PM
To: கிரதீபா பாட்டில்@பழையஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: RE வாழ்த்துகள்
மதிப்பிற்குரிய கிரதீபா சகோதரிக்கு,


உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். புது இடம் பயமா இருக்கும்னு வந்தேன். உங்கள் தகவல்கள் உதவிகரமா இருந்தது. இருந்தாலும் நீங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி இருக்கறதைச் சொல்லல. அப்புறம் சமையல்கட்டுல பெருச்சாளி இருக்கறதையும் சொல்லல. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். இன்னொரு உதவி பண்ணுங்க, எந்தெந்த வெளிநாடு போகலாம், எந்தெந்த சீசன்ல போகலாம், என்ன கொண்டு போகலாம், எங்க தங்கலாம், என்ன வாங்கி வரலாம்னு சொன்னீங்கன்னா, இன்னும் உதவிகரமா இருக்கும்.

நன்றிகளுடன்,
முரணாப்
பின்குறிப்பு: காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், அத்துடன் பாக்கு குத்தும் உரலையும் டவாலியிடம் கொடுத்து விட்டிருக்கிறேன். கிடைத்தவுடன் தெரிவிக்கவும்.

From கிரதீபா பாட்டில்@பழையஜனாதிபதி.காம்
Sent: Friday, July 27, 2012 18.36 PM
To: முரணாப்_முகர்ஜி@புது ஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: Re: Re: வாழ்த்துகள்

மதிப்பிற்குரிய முரணாப் ஐயா,
காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், பாக்கு இடிப்பதையும் அனுப்பியதற்கு நன்றிகள். ரம்ஜான் மாதத்தில் சவூதி அரேபியா, துபாய், அபுதாபி போக வேண்டாம். பாவம் அவங்களே ஒரு வேளை சோறுதான் சாப்பிடுவாங்க. ஹோட்டல்கள் மூடி இருக்கும். சீனா பக்கம் போகாம முடிஞ்சளவு தவிர்த்துடுங்க. ஏன்னா, அங்க நண்டு, ஆமை ஓட்டுலதான் சோறே பொங்குவாங்க. பாரிஸ் பக்கம் போனா பீட்சா சாப்பிட்டுடாதீங்க... வயிறு கட்டிக்கும்.

அமெரிக்காவுக்கு கிறிஸ்துமஸ் சமயம் போங்க, ஒரே கலர்புல்லா இருக்கும். ரஷ்யாவுக்கு டிசம்பர்ல போகாதீங்க, பனி ஓவர்! போன தடவை போனப்ப போட்டோ புடிக்கிற கேமரா துரு புடிச்சுக்கிச்சு. ஆப்ரிக்கா பக்கம் சுத்தமா போக வேண்டாம், ‘போதுமான நல்லுறவு நீடிக்குது’ன்னு கதை விட்டுடுங்க. இத்தாலி பிரச்னை இல்ல, நீங்க போனவுடனே டிபன் கேரியர்ல காலையில இட்லியும், மதியம் சாதமும் வந்திடும். நைட்டுக்கு 2 சப்பாத்தியும் கொடுத்துடுவாங்க. அடிக்கடி பாகிஸ்தான்தான் போக வேண்டி இருக்கும். அவங்கள நம்பாதீங்க. எதுக்கும் அங்க போகும்போது நம்மூர் அக்கமாலா, கப்சி எடுத்துப் போகவும்!
அன்புச் சகோதரி,
கிரதீபா