என்ன நடக்கிறது நம் பள்ளிக் கூடங்களில்?





குருவை தெய்வமாக பூஜித்து, பாதபூஜை செய்து வழிபட்டு, சேவகம் செய்து, குருகுலக் கல்வி பயின்ற சமூகம் நம்முடையது. இதே சமூகத்தில்தான், இன்று வகுப்பறை வன்முறை பெரும் விவகாரமாக வெடித்திருக்கிறது. பிஞ்சுகளை சிதைக்கும் பாலியல் வன்முறை, சிறுநீரை குடிக்கச் சொல்லி அடிப்பது, முடியை வெட்டி அவமானப்படுத்துவது... என கொடுஞ்சிறையையும்விட மோசமான இடமாகியிருக்கிறது பள்ளிக்கூடம். இப்படி கடந்த ஆறு மாதங்களில் 40க்கும் மேற்பட்ட சம்பவங்கள்.

இன்னொருபுறம் ஆசிரியையும் மாணவனும் ஓடிப்போகிறார்கள். சாவகாசமாக கத்தியெடுத்து வந்து ஆசிரியையைக் குத்துகிறான் ஒரு மாணவன். 
களிமண்ணாக வரும் குழந்தைகளை வடிவம் கொடுத்து வார்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்கள் ஏன் வன்மமாக மாறுகிறார்கள்?
ஆசிரியரின் பாதம்பணிந்து பயில வேண்டிய மாணவர்கள் ஏன் அவர்களை வெறுக்கிறார்கள்..?

‘‘எல்லாவற்றுக்கும் காரணம் நம் கல்விமுறைதான்’’ என்று அழுத்தமாக குற்றம் சாட்டுகிறார் கல்வியாளரும், எழுத்தாளருமான ‘ஆயிஷா’ நடராஜன். ‘‘நம் கல்விமுறைக்கு ‘வங்கிக்கல்வி முறை’ என்று பெயர். பையனின் மூளையைத் திறந்து அறிவைப் போட்டு நிரப்புவதுதான் இதன் நோக்கம். இதுதான் ஆசிரியரையும், மாணவரையும் எதிரெதிர் திசையில் நிறுத்துகிறது...’’ என்கிற நடராஜன், ‘‘வகுப்பறையில் மாணவர்கள் வெறும் பார்வையாளர்களாக அமர வைக்கப்படுகிறார்கள். ஆசிரியர் பேசிக்கொண்டே இருக்கிறார். மாணவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும்போதுகூட பிடிக்கவில்லை என்றால் வேறு சேனலுக்கு மாறுகிற சுதந்திரம் இருக்கிறது. ஆனால் மாணவன் பிடிக்காவிட்டாலும் ஆசிரியரின் பேச்சைக் கேட்க வேண்டியிருக்கிறது. பாடம் புரியாதபோது ஆசிரியர் மீது கோபம் வருகிறது. ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் பாடத்தின் மீது கோபம் திரும்புகிறது. இன்றைக்கு ஆசிரியரும், மாணவரும் விவாதிப்பதற்கான சூழலே இல்லை. 

வகுப்பறை யாருடையது..? நிச்சயமாக ஆசிரியருடையது அல்ல; மாணவனுடையது! மாணவன் பாடத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்காகவே ஆசிரியர் வகுப்பறைக்குச் செல்கிறார். எனவே கல்வி என்பது மாணவனிடமிருந்துதான் தொடங்கவேண்டும். ஆனால் மாணவனின் உணர்வுக்கு வகுப்பறையில் எந்த மரியாதையும் இல்லை. மேலதிகாரிகள் சொல்வதை மாவட்ட அதிகாரிகள் கேட்கிறார்கள். மாவட்ட அதிகாரிகள் சொல்வதை தலைமை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். தலைமையாசிரியர் சொல்வதை ஆசிரியர் கேட்கிறார். ஆசிரியர் சொல்வதை மாணவன் கேட்கிறான். மாணவன் சொல்வதைக் கேட்கத்தான் இங்கு ஆளில்லை. மாணவர்களைக் கையாளும் உளவியல் பயிற்சி இன்றைக்கு எந்த ஆசிரியருக்குமே இல்லை. பாடப்புத்தகத்தைத் தாண்டி அவர்கள் நகர்வதே இல்லை.



இன்றைக்கு ஒழுக்கத்தின் இலக்கணத்தை சினிமாவும், சீரியல்களும் போதிக்கின்றன. மாணவர்களும், ஆசிரியர்களும் அதையே சுமக்கிறார்கள். அதனால்தான் மாணவிகளை தங்கள் குழந்தைகளாக பாவிப்பதற்கு பதில் ‘உடலாக’ பார்க்கிறார்கள். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுகளை விட உளவியல் பயிற்சிகள்தான் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும்’’ என்கிறார் நடராஜன்.

கல்வியாளர் பாலாஜி சம்பத், ‘‘கல்வி நுகர்வுப் பொருளானதே இந்த சீர்குலைவுக்குக் காரணம்’’ என்கிறார். ‘‘அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆசிரியர் பணியின் மீதான மதிப்பீடுகள் சுக்குநூறாக நொறுங்கிவிட்டன. கல்வி ஒரு சான்றிதழுக்குள் அடங்கிவிடுகிறது. அந்த சான்றிதழை நிரப்பித் தருகிற நபராக மட்டுமே ஆசிரியர் இருக்கிறார். கல்வி ஒரு நுகர்வுப் பண்டமாக மாறியிருக்கிறது. அதனால் மாணவர்கள் ஆசிரியரை கல்வியை விற்கும் ஒரு விற்பனையாளராகப் பார்க்கிறார்கள். அதனால் உணர்வுபூர்வமான நெருக்கம் தளர்ந்துவிட்டது.

சமூகத்தில் எல்லாம் மாறிவிட்டதைப் போல கல்வியும், ஆசிரியர்களும் மாறிவிட்டார்கள். ‘நான் பாடம் நடத்துவேன்... புரிஞ்சுக்கிறதும், புரிஞ்சுக்காததும் உன்னோட தலையெழுத்து’ என் பதுதான் ஆசிரியர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆசிரியருக்கு கண்டிக்கிற உரிமை தேவைதான். ஆனால் நட்புணர்வு, அர்ப்பணிப்பு, அன்பும் வேண்டும். அவை இல்லாவிட்டால் மாணவர்களை தங்கள் குழந்தைகளாக ஆசிரியர்களால் பாவிக்க முடியாது’’ என்கிறார் பாலாஜி சம்பத்.

இன்று நகர்ப்புறத்து மாணவர்களிடையே ‘ஹான்ஸ்’ போன்ற போதைப் பாக்குகள் போடும் பழக்கம் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். 13 வயதிலேயே மாணவர்கள் குடிக்கு அடிமையாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட் பிடிப்பது பள்ளி வயது ஹீரோயிசமாகி விட்டது. பிடிக்காத ஆசிரியரை கத்தி எடுத்துக் குத்தும் அளவுக்கு மனதளவில் பெரிய மனிதர்களாக மாறுகிறார்கள் மாணவர்கள்.

‘‘மாணவர்களின் மன உளைச்சல், அழுத்தம் போன்றவற்றை பெற்றோரை விட ஆசிரியரே அவதானிக்க முடியும். அந்த வகையில் மாணவனின் போக்கை மாற்றும் முழுப்பொறுப்பும் ஆசிரியருக்கே உள்ளது’’ என்கிறார் மனநல மருத்துவர் இக்பால்.

‘‘இன்று தனிக்குடித்தன வாழ்க்கைமுறை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்லவும் நேர்கிறது. பல பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அமர்ந்து மனம்விட்டுப் பேசுவது கூட கிடையாது. பள்ளியிலும் மாணவனின் பேச்சைக் கேட்க ஆளில்லை; வீட்டிலும் இல்லை. அதனால் அவர்கள் மூர்க்கமாகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் சமூகத்தின் மீதான கேள்விகள்தான்.

மாணவர்கள் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டி அடைந்தாலும் சரி, தவறுகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் போதாது. தவறுகளை சரிகளாகக் கருதி விடுகிறார்கள். புத்திமதி சொல்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. அதனால் ஆசிரியர்களை வெறுக்கிறார்கள். அதேபோல ஆசிரியர் தரப்பிலும் அர்ப்பணிப்பு குறைந்து விட்டது. மாணவர்களின் இயல்பான செயல்பாடுகளை அவமதிப்பாகக் கருதுகிறார்கள். ‘நான் பெரியவனா... நீ பெரியவனா?’ என்ற போட்டிக்களமாக வகுப்பறை மாறிவிடுகிறபோதுதான் பிரச்னை வருகிறது. முதலில் ஆசிரியர்களுக்குத்தான் பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. அவர்களின் அணுகுமுறை மாறும்போது மாணவர்கள் மாறிவிடுவார்கள்...’’ என்கிறார் இக்பால்.

இதுபற்றி நம் கேள்விகளுக்குப் பதிலளித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பெ.இளங்கோவன், ‘‘எங்கோ ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த கல்வித்துறை மீதே கறையைப் பூசுவது மிகப்பெரும் கவலை அளிக்கிறது’’ என்று வருந்துகிறார். ‘‘எல்லோருமே மாணவர்கள் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தை அணுகுகிறார்கள். அது சரியே என்றாலும் ஆசிரியர்களுக்கு உள்ள நெருக்கடிகளையும் பார்க்க வேண்டும். மதிப்பெண்தான் பள்ளிக் கூடத்தின் தரத்தையும், ஆசிரியரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. நம் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து மாணவனுக்கு கல்வி போதிக்க, நம் கல்விமுறையில் இடமில்லை. பாடத்திட்டத்தைத் தாண்டி ஒரு அங்குலம் நகரமுடியாது. மதிப்பெண் குறைந்தால் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு ஆசிரியர், மாணவனை தன் சொந்தப் பிள்ளைகளாகவே கருதுவதை கல்விமுறை தடுக்கிறது. என் பிள்ளை தவறு செய்கிறான் என்கிறபோது கண்டிக்கிற உரிமை எனக்கு இருக்கிறது. ஆனால் மாணவனைக் கண்டித்தால் போலீஸ் வந்து பள்ளிக்கூடத்தில் நிற்கிறது. சுதந்திரமாக ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. போதைப்பாக்கு போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் வரும் மாணவனை அடித்துத்தான் கண்டிக்க முடியும். அதற்காக மூன்று ஆசிரியர்கள் பணியிழந்து சிறைக்குச் செல்கிறார்கள். நான் தவறு செய்யும் ஆசிரியர்களை நியாயப்படுத்தவில்லை. புனிதமான இந்தப்பணியை கொச்சைப்படுத்துபவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உள்ளாகத்தான் வேண்டும். ஆனால் நம் சமூகம் அந்தத் தவறுகளை பொதுத்தன்மையோடு அணுகி, பிற ஆசிரியர்களையும் அச்சத்துக்கு உள்ளாக்குகிறது. எவ்வளவோ ஆசிரியர்கள் உணவு, உறக்கம் மறந்து மாணவர்களின் நலனுக்காக உருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யாரும் ஒரு வரி எழுதுவதில்லை.
அதிகாரிகள் சுமத்துகிற மன அழுத்தம் ஒருபுறம், பாடத்திட்ட நெருக்கடி ஒரு புறம், எப்போது போலீஸ் வருமோ என்ற அச்சம் ஒருபுறம்... ஒரு ஆசிரியருக்கு இவ்வளவு நெருக்கடிகளை சுமத்திவிட்டு, அவரது செயல்பாடுகளை குறை கூறுவது என்ன நியாயம்..?’’ எனக் குமுறுகிறார் இளங்கோவன். 

கல்வி முறையை மாற்றாமல் ஆசிரியர்களை சிறைச்சாலைக்கும், மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் அவை நிரம்பி வழியும் என்பதே யதார்த்தம்.
- வெ.நீலகண்டன்