கிலி கிளப்புது காலரா!





‘(நான்) ஈ’க்கு ரசிகர் மன்றம் வைக்காத குறையாக மக்கள் கொண்டாடி வரும் நிலையில், வில்லன் அவதாரம் எடுத்துவிட்டன ஈக்கள். ‘காலரா’ பீதியில் நடுங்குகிறது தமிழகம். சென்னையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், காலரா அறிகுறிகளோடு ஏராளம் பேர் மருத்துவமனைகளில் குவிகிறார்கள். திருச்சி, தஞ்சை பகுதிகளிலும் காலரா அச்சம் பரவி வருகிறது.

காலரா எதனால் பரவுகிறது..? அதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரனிடம் கேட்டோம்.

‘‘விப்ரியோ காலரா என்ற வைரஸ் மூலமாகவே காலரா வருகிறது. இது ஒரு கொள்ளை நோய். ஒரு காலத்தில் இந்நோய் பற்றி ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் இருந்தன. கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிபோனது. இப்போது தடுப்பூசி, சிகிச்சை எல்லாம் வந்துவிட்டது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் ஓரிரு நாட்களில் குணமாகி விடலாம். ஆனால் இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது.

மனிதக் குடலிலிருந்து மலம் மூலமாக இந்த வைரஸ் வெளியேறுகிறது. ஈக்கள் அதை சுமந்துசென்று உணவுப்பொருட்கள் மீது ஒட்டுகின்றன. அந்த உணவை சாப்பிடுவதால் காலரா ஏற்படும். வெப்பம் மிகுந்த நேரத்தில் மழை பெய்யும்போது, இந்த வைரஸ் தண்ணீரில் தங்கிக் கொள்ளும். அந்தத் தண்ணீரை உபயோகிக்கும்போதும் காலரா வரலாம்.

வைரஸ் உள்ளே சென்று தன்னை தகவமைத்துக் கொண்டதும், திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்படும். சோற்றுக் கஞ்சிபோல வெளியேறும். வாந்தியும் வரும். நீர்ச்சத்து முற்றிலும் குறைந்து போகும். நாக்கு வறண்டு, உடல் சோர்வு ஏற்பட்டு மயக்கமும் வரலாம். கண்கள் உள்ளே சென்றுவிடும். பி.பி அதிகரிக்கும். சரியான நேரத்தில் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்காத பட்சத்தில் சிறுநீர் வெளியேறாது. சிறுநீரகம் செயலிழந்து விடும். டயாலிசிஸ் செய்ய நேரிடும். மரணம் நிகழவும் வாய்ப்புண்டு.

 வயிற்றுப்போக்கு ஏற்பட்ட உடனேயே மருத்துவரை நாட வேண்டும். மருத்துவர் தரும் உப்பு-சர்க்கரைக் கரைசலை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த மாத்திரைகள் உண்டு.

சிலநாள் சிகிச்சையிலேயே குணமடைந்து வீடு திரும்பலாம். நெருக்கம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. நோய் பாதித்தவர்களை குணமாகும் வரை தனிமைப்படுத்துவது நல்லது’’ என்கிறார் ராஜேந்திரன்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: வேணு,வெற்றி



அறிகுறிகள்

*  இடைவிடாத வயிற்றுப்போக்கு
*  வாந்தி
*  சிறுநீர் குறைவு
*  தோல் வெளுப்பு
*  கால்களில் தசைப்பிடிப்பு
வந்தால்பயப்படத் தேவையில்லை. உப்பு - சர்க்கரைக் கரைசல் அல்லது மருந்தகங்களில் கிடைக்கும் எலெக்ட்ரால் பவுடரைக் கரைத்து முடிந்தவரை குடிக்க வேண்டும். உடனடியாக மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடி சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்தலாம். வராமல் தடுக்க

*  தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
*  தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்.
*  சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரியுங்கள்.
*  அசுத்தமான சூழலில் விற்கப்படும் உணவு   களைத் தவிர்த்துவிடுங்கள்.
*  கழிவறைகளை சுகாதாரமாக வைத்திருப்பதுடன், ஒவ்வொருமுறையும் சோப்பு போட்டு
    கைகளைக் கழுவுங்கள்.
* நோய் தாக்கியவர் பயன்படுத்தியகழிவறை,பிற பொருட்களைத் தொடாதீர்கள்.
*  பாத்திரங்களை சுடுநீரில் கழுவிப் பயன்    படுத்துங்கள்.
*  இறைச்சி போன்ற உணவுகளை நன்கு     வேக வைத்து சாப்பிடுங்கள்.
*  பழங்களை தோல் நீக்கிச் சாப்பிடுவது நல்லது.


சென்னையில் 831 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் அளவு குறைக்கப்பட்டதே சென்னையில் காலரா உருவாகக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் ஈக்கள் அதிகமாகி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். பல பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதாகவும் புகார்கள் உண்டு. கூவம் நதிக் கரையோரத்தில் வாழும் மக்களே இப்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.