காதல் பரீட்சை



இங்கே பாரு புவனா... நான் ஏற்கனவே காதல்ல தோற்றவன். தெரிஞ்சுமா என்னைக் காதலிக்கிறேன்னு சொல்றே?’’ & கேட்டான் ஆகாஷ். ‘‘தெரிஞ்சுக்கிட்டுதான் என் காதலைச் சொல்றேன். உங்களை விரும்பாத ஆளை காதலிப்பதைவிட, உங்களை விரும்புற என்னைக் காதலிக்கக் கூடாதா?’’ & ஆர்வத்தோடு கேட்டாள் புவனா. ‘‘சரி... ஒரு நாள் டைம் கொடு... யோசிச்சு சொல்றேன்!’’  அடுத்த நாள்...‘‘என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ஆகாஷ்?’’ & ஆர்வத்தோடு கேட்டாள் புவனா.‘‘யோசிச்சுப் பார்த்தேன் புவனா. நான் மாலினியை உயிருக்குயிரா காதலிச்சேன்.

அவளும் என் காதலை பல விதத்திலும் சோதிச்சாள். அவள் வச்ச எல்லா டெஸ்ட்டிலும் பாஸாகிட்டேன். இருந்தும் என்னை ஏத்துக்க மறுக்கறா... அதனால நான் ஒரு முடிவுபண்ணிட்டேன். அவளை மறந்திட்டு உன்னையே காதலிக்கலாம்னு..’’ ஆகாஷின் வார்த்தைகளைக் கேட்டு புன்னகை புரிந்த புவனா சொன்னாள்... ‘‘சாரி மிஸ்டர் ஆகாஷ். மாலினி வச்ச எல்லா டெஸ்ட்டிலும் பாஸான நீங்க, அவ வச்ச கடைசி டெஸ்ட்ல ஃபெயிலாகிட்டீங்க... அவள் என் நெருங்கிய தோழி. அவள் சொல்லித்தான் இந்த இறுதி டெஸ்ட்டுக்கு நான் சம்மதிச்சேன்.’’புவனா கூறியதைக் கேட்டு ஆகாஷ் திருதிருவென்று முழித்தான்.