அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் ஜால்ரா



தமிழர் இசைக்கருவிகளை அதன் தயாரிப்பு மற்றும் இசைக்கும் விதத்தின் அடிப்படையில், தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என 4 விதமாக வகைப்படுத்துகிறார்கள். விலங்குகளின் தோலில் தயாரிக்கப்படுபவை தோற்கருவிகள். காற்றை வாங்கி நாதம் எழுப்புவன துளைக்கருவிகள். சுருதிக்கு அடிப்படையாக விளங்குபவை நரம்புக்கருவிகள். உலோகங்களால் வார்க்கப்படுபவை கஞ்சக்கருவிகள். ஜால்ரா, சிங்கி, மணி, ஜாலர் என பல பெயர்களால் அழைக்கப்படும் தாளம், கஞ்சக்கருவிகள் வகையைச் சேர்ந்தது. இசைப்பாளர்கள் வேறு தொழில் நாடிவருவதால், இக்கருவி அழிவின் விளிம்பில் இருக்கிறது.

இசையின் கால அளவுகளை சீர்படுத்தி நேர்கோட்டில் பயணிக்கச் செய்வதே தாளம். இசையும் தாளமும் உடலும் உயிரும் போன்றது. பிரித்தால் இரண்டுமே இறந்துபோகும். நாதஸ்வரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் உள்ளிட்ட எல்லா லய வாத்தியங்களையும் தாளம்தான் கட்டுப்படுத்துகிறது. இசையில் பிசிறு தட்டாமல் இருக்க வாய்ப்பாட்டுக்காரர்களும் வாத்தியக்காரர்களும் தங்கள் தொடைகளை கைகளால் தட்டி கைத்தாளம் கட்டுவார்கள். பழங்குடி மக்களின் நாட்டியத்தில் இருந்தே தாளம் பிறந்ததாகச் சொல்கிறார்கள் இசையறிஞர்கள். வேட்டையாடிக் கிளர்ந்த மகிழ்வு அதிர அவர்கள் ஆடும் நடனத்தில், பாடலுக்குத் தகுந்தவாறு பாதங்களைக் கொண்டு செய்த கணக்கீடே 'தாளம்’ என்றானதாம். அந்தக் காலத்தில் கோயில்களில் நாட்டியமாடும் தெய்வ மகளிர்கள் தங்கள் பாதங்களிலேயே தாளத்தைக் கணக்கிட்டு அபிநயம் புரிவார்கள். தற்கால பரதத்திலும் அது ஒரு அடிப்படையாக கடைப்
பிடிக்கப்படுகிறது.

காலப்போக்கில், தாளத்திற்கென ஒரு இசைக்கருவி வடிவமைக்கப்பட்டது. இரண்டு உலோகத் துண்டுகள் அல்லது கட்டைகளே முதலில் தாளமாக பயன்படுத்தப்பட்டன. அதன்பின் இலக்கண சுத்தியோடு நவீன தாளக்கருவிகள் வந்தன. இலைதாளம், குழிதாளம் என தரத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப பெயர்களும் உருவாயின.  ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக்கருவியை பயன்படுத்தினார்கள். கோலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகங்கள் போன்றவற்றிலும் இது முதன்மை பெற்றிருந்தது. திரிபுடை தாளம் முழங்க, நாதஸ்வரக்காரர் இசைக்கும் மல்லாரி ராகத்தை வைத்தே பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வசிக்கும் மக்கள், சுவாமி வீதியுலா தொடங்கியதை தெரிந்து கொள்வா£¢கள். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்சார இசைக்கருவிகள் வந்துவிட்டதால், மரபுரீதியான இந்த நிகழ்வுகள் மறைந்து விட்டன.

தொடக்கத்தில், கோயில் மணிகளில் பயன்படும் முறி என்ற உலோகத்தை இளநீரில் பக்குவப்படுத்தி தாளக்கருவி செய்யப்பட்டது. இப்போது செம்பு மற்றும் வெள்ளீய கலவையால் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. ஆதிகால தாளத்தில் 108 வகைகள் உண்டு. இப்போது 35 வகை தாளங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தாளம் இசைக்க பண் அறிவும் லய ஞானமும் அதிபுத்திசாலித்தனமும் தேவை. தாளக்காரர் கணநொடி தவறு செய்தாலும் இசை வேறொரு திசைக்கு இழுத்துக்கொண்டு போய்விடும்.
ஒரு காலத்தில் தாளக்காரர்கள் இல்லாத இசை நிகழ்ச்சிகளே இல்லை. இப்போது நாதஸ்வர நிகழ்ச்சிகளில் கூட தாளக்காரர்களை பார்க்க முடிவதில்லை. காரணம், எவ்வித அங்கீகாரமும் இவர்களுக்கு இல்லை.

‘‘கலைஞன் என்ற மதிப்புகூட கிடைக்காது. பாடகர்களின் வீட்டிலேயே இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். ஏதாவது செலவுக்குக் கொடுப்பார்களே தவிர, கலைக்கு மதிப்பளித்து கூலி தரமாட்டார்கள். இதனால் தாளக்கலைஞர்கள் அருகிப்போனார்கள்’’ என்கிறார் திருக்கருகாவூரைச் சேர்ந்த தாளக்கலைஞர் துரைராஜ்.நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். ‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார்கோவிலைச் சேர்ந்த குமரேசன்.

2 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்கது தமிழர் இசையும் இசைக்கருவிகளும் என்று சொல்லும்போது நமக்கு நா இனிக்கிறது. அந்த இசையை வளர்த்தெடுத்து, வாய்ப்பில்லாமல் வாடும் கலைஞர்களுக்கு வாழ்வளித்து மீட்காமல், அந்தப் பழம்பெருமையை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.
வெ.நீலகண்டன்