குங்குமம் ஜங்ஷன்



வெற்றிலை ஜோசியம்!
பாலியல் முறைகேடு, பணமோசடி என என்னதான் தில்லுமுல்லுகள் செய்தாலும் சாமியார்கள் மீதுள்ள மயக்கம் நம் பெண்களுக்குப் போகாது போலிருக்கிறது. போலிச் சாமியார்கள் வரிசையில் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் வெற்றிலைச் சாமியார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த அனில்குமார்தான் அந்த வெற்றிலை ஆசாமி. இவர் ஆட்டோ டிரைவராக இருந்தவர். திடீர் சக்தி (?) மூலம் ஜோதிடர் ஆகிவிட்டார். வெற்றிலையில் மையைத் தடவி கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் எல்லாவற்றையும் புட்டுப்புட்டு வைப்பாராம்! இவரிடம் வியக்க வைக்கும் இன்னொரு சக்தியும் உண்டாம். குறி கேட்டு வரும் பெண்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளின் நிறங்களை சரியாகச் சொல்லி அசத்துவாராம். அண்மையில், 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்து, நகை, பணத்தை பறித்து மோசடி செய்தததாக வெற்றிலை ஜோதிடரை அள்ளிக்கொண்டு போய் ‘பூஜை’ செய்தது காவல்துறை. பூனைக்கு மணிகட்ட முடியாமல் தவித்த பல பெண்கள், புகார்களோடு வரிசைகட்டத் தொடங்கி விட்டார்கள்!


சிறைப்பறவை படம்!
மியான்மரின் ஜனநாயக தேவதையான, சமீபத்தில் சிறைக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆங் சான் சூ கியி வாழ்க்கை ஹாலிவுட் படமாகிறது. இதில் சூ கியி வேடத்தில் நடிக்கப்போவது மலேசிய நடிகை மிச்செல்லி இயோ. பார்க்க இளம்வயது சூ கியி போலவே இருக்கும் இயோ, கடந்த வாரம் மியான்மர் சென்று சூ கியியுடன் ஒருநாள் இருந்து அவரது மேனரிசங்களை கற்றுவந்திருக்கிறார்.

வெற்றி!
சினிமா, மாடலிங் வேலைகளை விட்டுவிட்டு கடந்த சில வாரங்களாகவே கோர்ட் படியேறிக் கொண்டிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அவர் பங்குதாரராக இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியதில் ஆரம்பித்தது சர்ச்சை. வழக்கு போட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிய பிறகே அவர் முகத்தில் டிரேட்மார்க் புன்னகை. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸும் இடைக்காலத் தடை வாங்கியிருக்க, அடுத்த சீஸன் ஐ.பி.எல். போட்டிகளில் 10 அணிகள் ஆடும் போலிருக்கிறது.

ஒன் மேன் ஆர்மி!
3 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டிகளில் அதிரடி காட்டினாலும், இந்திய அணிக்குத் தேர்வானபிறகு சொதப்பியவர் யூசுப் பதான். ‘இவரைத் தப்பாகக் கணித்துவிட்டோமோ’ என தேர்வாளர்கள் சந்தேகப்படும் அளவுக்கு, சொற்ப ரன்களில் அவுட்டாகிக் கொண்டிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூர் ஒன்டே மேட்ச்சில் 7 சிக்ஸர்களுடன் தன் முதல் செஞ்சுரியை அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். ‘ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அடிக்க தோதான பந்துகளை மட்டும் அடித்தேன்’ என்று வெற்றி ரகசியம் சொல்கிறார் பதான்.

நிலவில் நிலம்!
‘எனக்கு மட்டும் பறக்கும் சக்தியிருந்தால் வானத்தில் ஏறி அந்த நிலவையே பிடித்துத் தந்துவிடுவேன்’ என்று மொக்கை போட்டு ரொமான்ஸ் செய்பவர்கள் மத்தியில், நிலவில் 3 ஏக்கர் நிலத்தையே வாங்கி அன்புமனைவிக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கி திக்குமுக்காட வைத்துவிட்டார் சித்தூரைச் சேர்ந்த முரளிமோகன். இந்தோனேஷியாவில் பேராசிரியராக பணிபுரியும் முரளிமோகன், மனைவி வசுமதி மீதான தீராக்
காதலை உணர்த்த ஓர் அபூர்வப் பரிசு கொடுக்க விரும்பினார். அப்போதுதான் நியூயார்க்கில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டி பற்றி தெரியவந்தது. பல ஆண்டுகளாகவே இந்நிறுவனம் நிலவைக் கூறுபோட்டு விற்பனை செய்கிறது. அந்நிறுவனத்திடம் 70 டாலர் கொடுத்து 3 ஏக்கர் நிலத்தை மனைவி பெயரில் பதிவு செய்து, பட்டாவையும் (?) வாங்கி விட்டார்.