கன்னி என்கிற கண்ணி



‘‘ஏஞ்சலினா ஜோலி என்றாலே அழகு. அழகு  என்றாலே ஆபத்து...’’ & இதுதான் அவர் கதாநாயகியாகும் படங்களின் திரைக் கதாசிரியர்கள் எடுத்துக்கொள்ளும் லைன். அல்லது அவர்கள் எழுதும் கதை ஆபத்தான ஒரு அழகியைப்பற்றி அமைந்துவிட்டால், அந்தப்பட இயக்குநர்களின் ஒரே சாய்ஸ் ஏஞ்சலினாவாகத்தான் இருப்பார். ஜோலிக்கான அடுத்த ஜோலி சோனி பிக்சர்ஸ் உலகெங்கும் வெளியிடும் ‘தி டூரிஸ்ட்’டில் அமைந்திருக்கிறது. உடனே அவர்தான் எங்கோ ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். டூரிஸ்ட்டாக அமெரிக்காவிலிருந்து இத்தாலி வருபவர் ஹீரோ ஜானி டெப். ஏற்கனவே சுக்காக உடைந்த இதயத்தைப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு காற்றுவாக்காக வெனிஸ் வருபவர், அங்கே இயற்கை அழகில் மனதைப் பறிகொடுக்கிறார். போதாத குறைக்கு ஜோலி அவர் பாதையில் கிராஸ் ஆக, ‘மனிதன் படைச்சதிலேயே உருப்படியான விஷயம்...’ என்று எந்திரத்தனமாக கற்பனை செய்துகொண்டு ஜாலியாகிறார்.

சும்மா போகிற ஜோலியைத் தொடர்ந்து போனாலே ஆபத்து என்ற சினிமா சித்தாந்தம் இருக்க, வலிய வந்து கரம் பற்றிக்கொள்ளும் ஜோலி மீது கொஞ்சமாவது சந்தேகக் கண் வைத்திருக்கலாம் ஜானி டெப். ரூம் போடுகிற அளவுக்கு டெப்பின் காதல் டீப்பாகப் போக, அங்கே வருகிறது வினை. ஏகப்பட்ட துரத்தல்களுக்கு நடுவே பதினான்கு நாடுகளில் தேடப்படும் குற்றவாளி, ஒரு தாதா, ஒரு காவல் அதிகாரி எல்லாம் குறுக்கே வருகிறார்கள். முதல்பாதி படம் பார்த்தவர்கள் இத்தாலி, ஜோலியின் அழகியல்களில் மயங்கி, இடைவேளைக்குப் பின் படம் ஆக்ஷன் த்ரில்லர் ரூட்டுக்குப் போகும் என்று கற்பனை செய்வது கடினம்.

ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா, எம்மி அவார்டுகளைக் குவித்திருக்கும் ஜோலிக்கு இந்தப்படமும் ஏதாவது அவார்டைத் தூக்கிக் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் படத்தை இயக்கியிருப்பவர் ‘லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஃப்ளோரியன் ஹெங்கல் வான் டோன்னர்ஸ்மார்க். ஜெர்மனியில் பிறந்து கிட்டத்தட்ட பாதி உலகில் வளர்ந்த இவருக்கு இங்கிலீஷ்,
ஜெர்மன், ரஷ்யன், ஃப்ரெஞ்ச், இத்தாலியன் என்று ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. அதனாலேயே அமெரிக்காவிலிருந்து இத்தாலியில் நகரும் கதை என்றதும் பேடு, பேப்பரோடு கிறிஸ்டபர் மெக்காரி, ஜூலியன் ஃபெல்லோவஸுடன் ஸ்கிரீன்பிளே எழுத உட்கார்ந்துவிட்டார்.

ஜோலியைத் தாண்டி இத்தாலியின் வனப்பையும் தவறவிடாமல் ஜான் சீலின் கேமரா அள்ளிக்கொள்ள, அழகியலுக்கும், த்ரில் மற்றும் துரத்தல்களுக்குமான உணர்வுகளை ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்டின் இசை தூக்கிப் பிடிக்க, ஒரு த்ரில்லிங்கான டூரிஸ அனுபவத்துக்கு நாம் தயாராகலாம். பாஸ்போர்ட் வாங்காமல், விஸா எடுக்காமல் இத்தாலியைச் சுற்றிவந்து, தமிழ்பேசும் ஜோலியின் சாகஸங்களைக் காணும் அனுபவம் நமக்கு இந்த டிசம்பரிலேயே வாய்க்கப்போகிறது.
 ஜி