கேள்வி பதில்கள்



 மழைக்காலங்களில் மின்சார வயர்கள் அறுந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மின்கம்பிகள் அறுந்துவிழுந்தால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா? சில இடங்களில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட மின்கேபிள்கள் வெளியில் வந்து விடுகின்றன. இவ்வளவு ஆழத்தில்தான் மின்கம்பிகளைப் புதைக்க வேண்டும் என்று விதிமுறைகள் ஏதும் உள்ளதா? மழைக்காலத்தில் மின்விபத்துக்கள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?எஸ்.ராஜராஜன், காட்டாங்கொளத்தூர்.

பதில் சொல்கிறார் மின்வாரிய அமலாக்கப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் எம்.பழனியப்பன் பொதுவாக, துணை மின் நிலையங்களில் இருந்து 11 ஆயிரம் வோல்ட்டாக (11 கே.வி) வெளிவருகிற மின்சாரம், டிரான்ஸ்ஃபார்மர்கள் வழியாகக் குறைக்கப்பட்டு, 415 வோல்ட்டாக மாற்றி வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. 11 கே.வி. மின்கம்பிகள், கேபிள்கள் அறுந்தால் சம்பந்தப்பட்ட துணை மின்நிலையத்தில் உள்ள சுற்றுத்திறப்பான் கருவி தானாகவே மின்சாரத்தைத் துண்டித்து விடும். இந்த கம்பிகள் அறுந்து விழ அவ்வளவாக வாய்ப்பில்லை. இதை 415 வோல்ட்டாக மாற்றிக்கொடுக்கும் டிரான்ஸ்ஃபார்மர்களில், ஃப்யூஸ் கேரியர்கள் இருக்கும். டிரான்ஸ்ஃபார்மர்களில் இருந்து பிரிந்துசெல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுகிறபோது பெரும்பாலும் அந்த ஃப்யூஸ் எரிந்து மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால், குறிப்பிட்ட ஆம்பியர் மின்சாரத்துக்கு மேல் தாக்கினால் மட்டுமே எரியும் அளவுக்கு இந்த ஃப்யூஸ்கள் போடப்பட்டிருக்கும். சில நேரங்களில் அறுந்துவிழும் மின்கம்பிகளில் பாயும் மின்சாரத்தின் அளவு குறைந்த ஆம்பியராக இருக்க வாய்ப்புண்டு. அப்போது ஃப்யூஸில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால் மின்சாரம் தடைப்படாமல் போகக்கூடும்.
பூமிக்கு அடியில் மின் கேபிள்களைப் புதைப்பதற்கு பல விதிமுறைகள் உண்டு. ஆழம், பாயும் மின்சாரத்தின் அளவு, அந்தப் பகுதியின் புவியியல் சூழல், பயன்பாடு என எல்லாவற்றையும் கணக்கிட்டு, எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு துல்லியமாகத்தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. வேறு துறையினரோ, நுகர்வோரோ தங்கள் பணிகளுக்காக பூமியைத் தோண்டும்போது கவனக்குறைவாக மின்கேபிள்களை வெளியில் எடுத்துவிட வாய்ப்புண்டு. இதுபற்றிய புகார்கள் வந்தால் உடனடியாக பராமரிப்புப்பணிகளை மேற்கொள்வோம்.
மழைக்காலங்களில் மின்பொருட்களை கையாளுவதில் கூடுதல் கவனம் தேவை. ஈரத்தோடு எந்த மின்பொருளையும் தொடக்கூடாது. தெருவில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக அப்பகுதியில் உள்ள உதவிப்பொறியாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசினாலும் உடனடியாக புகார் செய்ய வேண்டும். ஊழியர்களே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வந்து மரக்கிளைகளை வெட்டிவிடுவார்கள்.
  
 பிரசவத்துக்குப்பின் 45 நாட்கள் வயிறு கட்டியிருந்தும்கூட, 5 மாதங்களுக்குப் பிறகும் தொப்பை போல தெரிகிறது. யோகா மூலம் வயிற்றை பழைய நிலைக்குக் கொண்டுவர வாய்ப்பிருக்கிறதா?ஆர்.ராஜேஸ்வரி, மதுரை14.

பதில் சொல்கிறார் யோகா பயிற்சியாளர் சுகந்தி
சூரிய நமஸ்காரம், தனுராசனம், சலபாசனம், நல்காசனம் மற்றும் சில பிராணாயாமப் பயிற்சிகள் செய்தால் பலன் கிடைக்கும். சுகப்பிரசவம் என்றால் 40 நாட்களுக்குப் பிறகு இப்பயிற்சி
களைத் தொடங்கலாம். சிசேரியனாக இருந்தால் 6 மாதங்களுக்கு எந்தப் பயிற்சியும் கூடாது. டிவி அல்லது புத்தகத்தில் பார்த்துச் செய்யாமல், முறையாக யோகா பயிற்சியாளரிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்யும்போது அதிக கலோரி செலவாகி, களைப்பு ஏற்படும். அதை ஈடுகட்டுவதற்காக புரத உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம்.