சுட்ட கதை சுடாத நீதி



எண்பது வயதைத் தாண்டிய அந்த முதியவர், நீதி மன்றத்தின் சாட்சிக் கூண்டில் நின்றிருந்தார். தளர்ந்த நடையோடு வந்து நின்றாலும், அவர் கண்களில் உறுதி தெரிந்தது. குரலில் முதுமையின் நடுக்கம் இருந்தாலும், பேச்சில் தெளிவு இருந்தது. முதியவரின் பக்கத்து வீட்டில் ஒரு திருட்டு நடந்தது. நள்ளிரவில் சத்தம் கேட்டு விழித்த முதியவர், திருடனைப் பார்த்ததும் கூச்சல் போட்டு தெருவை எழுப்பி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்துவிட்டார். அந்த வழக்கில் சாட்சி சொல்லவே இப்போது அவர் கூண்டில் நிற்கிறார்.
திருடனை எப்படியும் காப்பாற்றிவிடுவது என தீர்மானம் எடுத்துக்கொண்ட ஒரு பிரபல வழக்கறிஞர் அவரை குறுக்குக் கேள்விகள் கேட்கிறார்.

‘‘பெரியவரே... நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க! இதோ குற்றவாளிக் கூண்டுல நிக்கற என் கட்சிக்காரர்தான் உங்க பக்கத்து வீட்ல திருடினாரா?’’
‘‘ஆமாம்...’’
‘‘நீங்க பார்த்தீங்களா..?’’
‘‘என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்!’’
‘‘நல்லா யோசிச்சு சொல்லுங்க... திருட்டு நடந்ததோ ராத்திரி ரெண்டு மணிக்கு. தெருவே இருட்டா இருந்தது. உங்க வீட்ல இருந்து பக்கத்து வீடு கொஞ்சம் தள்ளி இருக்குது. உங்களுக்கு வயசு எண்பதைத் தாண்டியாச்சு. எப்படியும் பார்வை தெளிவா இருக்க வாய்ப்பில்லை. பொய் சொல்லாதீங்க!’’
‘‘நான் பார்த்தேன்... அவன்தான் திருடினான்!’’
முதியவரை புத்திசாலித்தனமாக மடக்க நினைத்த வழக்கறிஞர் கேட்டார்... ‘‘ராத்திரியில எவ்வளவு தூரத்துல இருக்கற பொருளை உங்களால பார்க்க முடியும்?’’
கிழவர் நிதானமாகச் சொன்னார்... ‘‘நிலாவையே பார்க்க முடியும். நிலா எவ்ளோ தூரத்துல இருக்கு?’’
சிக்கலான கேள்விகள் கேட்டால், கேட்பவர்தான் சிக்கிக் கொள்வார்!