பயம்




‘‘ஏய்... சொன்னா கேளும்மா செல்லம்! தொடாதே... அது சுட்டுடும். அப்புறம் புண்ணாகி, கை வலிக்கும்’’ என்று குழந்தை அஸ்மிதாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் வினிஷா.  
இப்போதெல்லாம் அடிக்கடி கரன்ட் கட் ஆகிவிடுகிறது இந்த ஏரியாவில். ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் வர வாய்ப்பில்லாத வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வெளிச்சமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. உருகும் மெழுகின் அழகு, இரண்டு வயதுக் குழந்தை அஸ்மிதாவை ஈர்க்க, அவள் மெழுகுவர்த்தியைத் தொட்டு விளையாட முயற்சிக்கிறாள். அவளைத் தடுப்பதும், கொஞ்சுவதுமாகவே நேரம் கழிகிறது வினிஷாவுக்கு. அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டு மாமி, ‘‘இப்படி கொஞ்சினா வேலைக்கு ஆகாது வினிஷா.

அவளை விடு... சும்மா தொடட்டும். அப்பதான் ‘நெருப்பு சுடும்’னு அவ புரிஞ்சுக்குவா... அனுபவப்பட்டு பயந்துவிட்டால் பின் நெருப்பில் விளையாட மாட்டாள்’’ எனக் கூறியபடி வேண்டுமென்றே குழந்தையின் அருகே மெழுகுவர்த்தியைக் கொண்டு போனதும் சொன்னாள். ‘‘இனிமே பார்... பயம் வந்துவிடும்.’’இரண்டு நாட்கள் கழித்து வினிஷாவைப் பார்த்த மாமி, ‘‘என் ட்ரீட்மென்ட் எப்படி? குழந்தை பயந்து விட்டாளா’’ என்று கேட்டாள்.‘‘ஆமாம் மாமி, ரொம்ப பயப்படுகிறாள். மெழுகுவர்த்தியைப் பார்த்து அல்ல; உங்களைப் பார்த்து’’ என வினிஷா சொல்ல, மாமி திகைத்து நின்றாள்.