காணமல் போகிறதா காஞ்சிபுரம் பட்டுப்புடவை?



‘காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சு தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்!’ ‘வயசுப் பொண்ணு’ படத்தில் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் நிதர்சனம். மாடர்ன் உடைகளிலேயே எப்போதும் வலம்வரும் இந்தக்கால பெண்கள்கூட திருமணத்தின்போது மட்டுமாவது உடுத்த ஆசைப்படும் புடவை, காஞ்சிப்பட்டு! இப்படி பெண்களை தேவதைகளாகக் காட்டிக் கொண்டிருந்த காஞ்சிப் பட்டுக்கு ஆபத்து என்கின்றன தகவல்கள். காஞ்சிபுரம் போனால் பட்டு எடுக்கலாம். ஆனால் ‘காஞ்சிபுரம் பட்டு’ எடுக்க முடியுமா? காஞ்சிப்பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கும் இந்தவேளையில் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்கிறது...‘‘காஞ்சிபுரம் பட்டுன்னா அவ்வளவு பேரு. தமிழ்நாட்டுல எல்லா மூலையில இருந்தும் விசேஷங்களுக்கு இங்க வந்து எடுத்துட்டுப் போவாங்க. வடக்க டெல்லி வரைக்கும் சர்வசாதாரணமா போகும். ரெண்டு இழையை முறுக்கி நெய்ற அந்த நேர்த்தி, கோர்வை, பிட்னி முதலான வேலைப்பாடுகள்தான் மவுசுக்குக் காரணம். சுத்தமான ஜரிகை இன்னொரு ஸ்பெஷாலிட்டி. இன்னிக்கும் காஞ்சிபுரத்துல தெருவுக்குத் தெரு ஜவுளிக்கடைகள் இருக்கு. எல்லாமே பட்டு யாவாரம்தான். மக்களும் ‘காஞ்சிபுரத்துல போய் எடுத்துட்டு வர்றோம்’னு இந்த ஜவுளிக்கடைகள்ல வாங்கிட்டுப் போறாங்க. ஆனா அவங்க எடுத்துட்டுப் போறது உண்மையான காஞ்சிபுரம் பட்டு இல்லைங்கிறதை அவங்களாலயே நம்ப முடிய மாட்டேங்குது. அந்தளவுக்கு ஆளாளுக்கு புகுந்து காஞ்சிபுரம் பட்டைச் சிதைச்சுட்டாங்க’’ என்கிறார் காஞ்சிபுரம் கவுன்சிலர் ஆறுமுகம்.

பட்டுத் தொழிலை மேம்படுத்தவும், நெசவில் ஈடுபடும் குடும்பங்களுக்கு சீரான வேலைவாய்ப்பைத் தரவும், மக்களுக்குத் தரமான பட்டு கிடைக்கச் செய்யவும்தான் கூட்டுறவு சொசைட்டிகளை உருவாக்கியது அரசு. பல்வேறு பெயர்களில் இருபதுக்கும் மேற்பட்ட சொசைட்டிகள் காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையில் ஈடுபடுகின்றன. கோ ஆப் டெக்ஸ் மட்டும் இந்த சொசைட்டிகளில் இருந்து கொள்முதல் செய்கிறது. மற்றபடி சில்லறை வணிகத்தில் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றன சொசைட்டிகள்.
இவை தவிர்த்து தனியார் சிலரும் பட்டு உற்பத்தி,
விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல ஜவுளி நிறுவனங்கள் இவர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
மூன்றாவதாக ஒரு பிரிவினர். ஆரணி, கும்பகோணம், தர்மாவரம் என மற்ற இடங்களிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு புடவைகளை வாங்கிவந்து, ‘காஞ்சிபுரம் பட்டு’ எனச் சொல்லி ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய்க்கு கடைபோட்டே விற்கிறார்கள். சொசைட்டிகளாலும், பாரம்பரிய பட்டு உற்பத்தியாளர்களாலும், ‘போலிகளைப் புழங்க விடுபவர்கள்’ என கைகாட்டப்படுபவர்கள் இவர்கள்தான்.இந்த மூன்று பிரிவினரில் 21 கூட்டுறவு சொசைட்டிகளுக்கும், தனியாரில் பத்து நிறுவனங்களுக்கும்தான் ‘காஞ்சிபுரம் பட்டு’க்கான ‘புவிசார் குறியீடு’ பயன்படுத்த அனுமதி கிடைத்திருக்கிறது. (கோர்வை, பிட்னி வேலைப்பாடுகளுடன் சுத்தமான குறிப்பிட்ட விகிதாசார ஜரிகையுடன் காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுகளையே ‘காஞ்சிப் பட்டு’ என்கிறது புவிசார் குறியீடு.)

ஆனால் கூட்டுறவு சொசைட்டிகளிலேயே சுத்த ஜரிகை, கோர்வை, பிட்னி இல்லாத புடவைகள்தான் அதிகமாகக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க டிசைனர் சிதம்பரத்திடம் இது குறித்துக் கேட்டோம்.‘‘பார்டர் ஒரு கலராகவும், உடல் இன்னொரு கலராகவும் இருக்கிற புடவையில ரெண்டு கலர் நூலையும் கோர்க்கிற டெக்னிக்தான் கோர்வைன்னு சொல்லப்படுது. பார்டரோட கலரை முந்தியிலயும் ஏத்தறதுக்கு பிட்னி ஏத்தறதுன்னு சொல்வாங்க. இந்த ரெண்டுமே நுட்பமான வேலை. தங்கள் வீட்டு சிறுவர்களுக்கு தொழில் கத்துத் தர நினைக்கிற நெசவாளர் குடும்பங்கள், முதல்ல இந்த வேலைகளைத்தான் அவங்ககிட்ட கொடுக்கும். இந்தக் கைத்தறி வேலைப்பாடு அந்தக் காலத்துல எல்லாப் புடவையிலயும் தவறாம இருக்கும். ஒருகட்டத்துல குழந்தைத் தொழிலாளர் முறைக்கு தடை வந்ததும், பிள்ளைங்க இதைப் பண்றதில்லை. பெரியவங்களுக்கும் இதைப் பண்றதுக்கு நேரமும் பொறுமையும் இல்லாமப் போயிடுச்சு. விசைத்தறி வருகைக்குப் பின்னாடி செல்ஃப் டிசைன் புடவைகளுக்கு வரவேற்பு கிடைக்க, மக்களும் கோர்வை, பிட்னின்னு கேக்கறதை விட்டுட்டாங்க. பழைய ஆளுங்க சிலர்தான் இப்பவும் கோர்வை பட்டு வேணும்னு வர்றாங்க. ஆனா நாங்க எந்தப்புடவைங்கிறதை சொல்லித்தான் வாடிக்கையாளர்கிட்ட விக்குறோம். ஜரிகையைப் பொறுத்தவரைக்கும் காஞ்சிப் பட்டுல அரசு வச்சிருக்கிற விகிதாசாரம் (.6% தங்கம் மற்றும் 57% வெள்ளி) இருக்கும். செல்ஃப் டிசைன் பட்டுகள்ல ‘பாதி ஜாரி’ங்கிறதை புடவையிலேயே குறிப்பிட்டிருப்போம்’’ என்கிற சிதம்பரம், சுத்த ஜரிகை பயன்படுத்த முடியாததற்கு தங்கத்தின் விலையேற்றத்தைக் காரணமாகக் குறிப்பிடுகிறார்.‘‘கோர்வையை விடுங்கள்... காஞ்சிபுரம் பட்டு என்றால் ஜரிகையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த ஜரிகையை டெஸ்ட் பண்ணுவதற்கென்றே ‘ஜரி சோதனை நிலையங்களை’ அரசு அமைத்திருக்கிறது. அங்கு போனால் இருபது ரூபாய் செலவில் டெஸ்ட் பண்ணி ‘காஞ்சிபுரம் பட்டு’தானா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்’’ என்கிறார் அண்ணா சொசைட்டியின் விற்பனையாளர் மோகன்.

மக்கள் ஏமாறுவதெல்லாம் பிற இடங்களின் புடவைகளை விற்கும் அந்த மூன்றாம் நபர்களிடம்தான். இவர்கள் விற்கும் புடவைகளில் உள்ள ஜரிகை முழுக்க போலி. சில நேரங்களில் இந்தப் போலி விற்பனையாளர்கள் ஜரி டெஸ்டிங் சென்டர்களிடம் ரகசியக் கூட்டு வைத்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. டிராவல்ஸ் டிரைவர்கள்தான் பெரும்பாலும் இவர்களுக்கு வாடிக்கையாளர் பிடித்துத்தரும் இடைத்தரகர்கள்.தனியார் கைத்தறிப் பட்டு உற்பத்தியாளர் சங்க தலைவர் நாராயணசாமியிடம் பேசியபோது, ‘‘பழைய பட்டு மவுசு திரும்ப வருமான்னு தெரியலை. ஆனா இந்தப் போலிகளை வாடிக்கையாளர்கள் நினைச்சாத்தான் ஒழிக்க முடியும். தொழில்ல ரொம்ப வருஷமா ஈடுபடுற கடைகளுக்குத்தான் போகணும், ஜரிகையை டெஸ்ட் பண்ணணும். எல்லாத்துக்கும் மேல, ரெண்டாயிரம் ரூபாய்க்கெல்லாம் காஞ்சிப்பட்டு கிடைக்குங்கிறதை நம்பக்கூடாது’’ என்பதை வலியுறுத்துகிறார்.‘‘காஞ்சிபுரம் பட்டு என்கிற பாரம்பரியத்துக்குத்தான் புவிசார் குறியீடு. மக்கள் புடவை எடுக்கும்போது, புவிசார் குறியீடு இருக்கான்னு கேட்டு எடுக்கணும். புவிசார் குறியீடு பயன்படுத்துபவர்களிடம் ஒரு சான்றிதழ் இருக்கும். அதைக்கேட்டு வாங்கிப் பார்க்கலாம். அந்தச் சான்றிதழ்லயே குறியீடைப் பயன்படுத்தறதுக்கான நிபந்தனைகள் இருக்கும். அதன்படி புடவை இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம். ஜரிகையை டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம். இதையெல்லாம் முறையா கவனிச்சா போலிகள்கிட்ட ஏமாற வேண்டியதில்லை’’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட்.ஒருபுறம் ‘நெய்ய ஆளில்லை’ என்கிற மாதிரியான சூழல் காரணிகளாலும் இன்னொருபுறம் போலிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது ‘காஞ்சிப்பட்டு’!
 அய்யனார் ராஜன் படங்கள்: புதூர் சரவணன்