ஆண்டாள் வரலாறு எழுதும் ஆஸ்திரேலியா தம்பதி





ஆண்டாளைப் பற்றிப் பேசினால் நெகிழ்ந்து போகிறார் ஹெலன். விழிகளில் கண்ணீர் பூக்கிறது. ஆண்டாள் சந்நிதி முன்பு மணிக்கணக்கில் நின்று தியானிக்கிறார். திருப்பாவையும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எப்போதும் கைகளில் இருக்கிறது. அவரது கணவர் பீட்டர் ஒரு குறிப்பேட்டோடு சுற்றுகிறார். ஆண்டாள் பற்றியும், கோயில் பற்றியும் சொல்லப்படும் எல்லா செய்திகளையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

54 வயது ஹெலனும், 63 வயது பீட்டரும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர்கள். பீட்டர், பொறியாளர். அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள், தற்செயலாக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்கள். ஆண்டாளின் கதை அவர்களை ஆட்கொண்டு விட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உற்சவ காலங்களில் ஆண்டாள் சந்நதியில் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள். இப்போது அவர்களின் இலக்கு, ஆண்டாளின் கதையை உலகம் முழுதும் கொண்டு செல்வது.  



ஹெலன் பேசும் பிள்ளைத்தமிழைக் கேட்கவே இனிக்கிறது. ‘‘எனக்கு இந்தியாவைப் பத்தி எதுவும் தெரியாது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அதுல கொஞ்சம் மன வருத்தம் உண்டு. பீட்டருக்கு பென்ஷன் வருது. நிலங்கள், வீடுகள், கடைகள் இருக்கு. போதுமான அளவுக்கு பணம் கிடைக்குது. நிம்மதி? தத்துவங்கள், சமயங்கள், கோயில் கலைகள் பத்தி தெரிஞ்சுக்கிறதுல ரெண்டு பேருக்குமே ஆர்வம் உண்டு. பல நாடுகளுக்குப் போயிருக்கோம். இந்தியாவோட சமய நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மட்டும் தெய்வத்துக்கு நெருக்கமா இருக்கறதை உணர்ந்தோம். அதிலயும் ஆண்டாள் அளவுக்கு எங்களை உலுக்கி எடுத்தது யாருமில்லை. அவ முகத்தைப் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கணும் போலிருக்கு. அவளோட முகத்துல இருக்கிற அந்த புன்னகையிலேயே, நம்ம எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு. எல்லோருக்குமே கடவுளை சரணாகதி அடையுறதுதான் லட்சியமா இருக்கு. சாதாரண மனிதரும் உறுதியான பக்தி இருந்தா கடவுளை அடையலாம்ங்கிற உண்மையை ஆண்டாள் எங்களுக்கு உணர்த்துனா.

முதல்முறை நாங்க வந்தபோது ஆடிப்பூர உற்சவம் நடந்துச்சு.. சாதாரணமா கோயிலைச் சுத்திப் பாத்துட்டு, மணவாள மாமுனிகள் சந்நதியின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளைப் போய் பாத்தோம். ‘ஆண்டாள் காலடியில உக்காந்து என்ன கேக்குறியோ அது கிடைக்கும்’னு சொன்னார். ஆண்டாளோட கதையை அப்போதான் கேட்டோம். தெய்வமா மட்டுமில்லாம தாயா, மகளா மனசுக்குள்ள உக்காந்திட்டா. அன்னைக்கு இரவு தூங்கவே முடியல. கண்ணை மூடினா, ‘சீக்கிரம் வா... சீக்கிரம் வா...’ன்னு ஆண்டாள் கூப்பிடுற மாதிரி இருக்கு. இப்படியொரு சக்தியை இதுக்கு முன்பு நான் உணர்ந்ததில்லை. எனக்கு நேர்ந்ததுதான் பீட்டருக்கும்’’ என்கிறார் ஹெலன். நெற்றியில் நீளமான குங்குமப் பொட்டும், காலில் மிஞ்சியும், கண்களில் பக்தியும் அவரின் அந்நியத்தன்மையை நீக்கி, மனசுக்கு நெருக்கமாக்குகிறது.

பீட்டர் யோசித்து யோசித்துப் பேசுகிறார். ‘‘திருப்பாவை ஆங்கில டிரான்ஸ்லேஷன் புத்தகம் கொடுத்தார் சுவாமிஜி. இறைவனோட ஐக்கியமாகி, உருகி உருகிக் காதலிக்கிறா ஆண்டாள். ஒவ்வொரு வரியும் உள்ளுக்குள்ளே உக்காந்து உருக்குது. வருஷத்தில பத்துநாள் ஆண்டாளோட நிழல்ல இருக்கணும்னு முடிவு பண்ணிட்டோம். திருப்பாவையை ஆஸ்திரேலியாவுல எங்க நண்பர்கள் எல்லாருக்கும் கொடுத்திருக்கோம். வாரத்துல ஒருநாள் எங்க வீட்டுல எல்லோரையும் அழைச்சு ஆண்டாள் கதையை சொல்லிக் கொடுக்கிறோம். நிறைய பேர் ஆண்டாளோட பக்தியைக் கேட்டுத் திகைச்சுப் போயிட்டாங்க. கலாசாரம், வாழ்க்கை முறை எல்லாம் வேற வேறயா இருந்தாலும், சரணாகதி ஒண்ணுதானே... எங்க நாட்டுல ஆண்டாள் பேர்ல ஒரு தெய்வீக அமைப்பை உருவாக்கறது பத்தி யோசிக்கிறோம். அதுக்காகத்தான் ஆண்டாளோட வரலாற்றை புத்தகமா எழுத முடிவெடுத்திருக்கோம்’’ என்கிறார் பீட்டர்.

திருப்பாவை, நாச்சியார் திருமொழி முடித்து, இப்போது திவ்ய பிரபந்தத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இருவரும். அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஆண்டாளை வழிபடுவது... பின்னர் கோயிலைச் சுற்றி வந்து பக்தர்களிடம் பேசுவது... அவர்கள் சொல்லும் விபரங்களை குறிப்பெடுப்பது... ராஜகோபுரம் தொடங்கி, கருவறை வரையிலுமான கட்டுமானக் கலையை ஆய்வு செய்வது என அவர்களின் அன்றாடங்கள் நீள்கின்றன. இடையிடையே ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் என்று கோயில்களுக்கும் பயணிக்கிறார்கள். ஆண்டாள் பற்றிய புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.
‘‘வாழ்க்கை முழுக்க எங்கே சுத்தித் திரிஞ்சாலும், உண்மையான பக்தி உள்ளவங்க இறுதியில இறைவனோட காலடியில வந்து சேருவாங்கன்னு ஜீயர் சுவாமிகள் சொன்னார். அது உண்மைதான்... இலக்கே இல்லாம வாழ்ந்துக்கிட்டிருந்த எங்களுக்கு இப்போதான் இலக்கு தெரிஞ்சிருக்கு. நாங்க தேடியலைஞ்சது ஆண்டாளைத்தான். அவளோட நிழல்லயே வாழுற பாக்கியத்தை எங்களுக்கு அவ கொடுக்கணும்’’ என்று நெகிழ்வோடு ஆண்டாளின் திசையில் கைகூப்புகிறார் ஹெலன்.
அழகிய புன்முறுவலோடு அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆண்டாள்.  
- வெ.நீலகண்டன்
படங்கள்: எம்.ஜெயராஜ்