தேர்தல் போர்க்களத்துக்கு ரெடி!





அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டன தேசியக் கட்சிகள் இரண்டும். ‘துணைத் தலைவர்’ என்ற புதிய பொறுப்போடு, காங்கிரஸ் கட்சியின் ‘அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர்’ ஆகியிருக்கிறார் ராகுல் காந்தி. சர்ச்சைகளில் சிக்கிய நிதின் கட்கரியை ஓரங்கட்டிவிட்டு சீனியர் தலைவர் ராஜ்நாத் சிங்கை தலைவர் ஆக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. தேர்தலுக்கு இவர்கள் தளபதிகள். படை எப்படி இருக்கிறது?

ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராகுலுக்கு மகுடம் சூட்டினார்கள். எமோஷனலான உரை நிகழ்த்தி கட்சியினரை நெகிழ வைத்தார். சோனியாவை அழ வைத்தார். படித்த இளைஞர்களும், மிடில் கிளாஸ் மக்களும் ஏன் அரசியலையும் அரசியல்வாதிகளையும் வெறுக்கிறார்கள் என்பதைச் சொன்னார். ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டார். டெல்லிக்கு வந்ததும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். ‘‘எப்போதும் நாம் நமக்குள் மோதிக் கொள்கிறோம். போதும் இந்த வெறுப்பு அரசியல். இனிமேல் பாசிட்டிவ் பாலிடிக்ஸ்தான். யாரையும் எதையும் பற்றி எதிராகப் பேசப் போவதில்லை’’ என்றார்.

இது எல்லாமே பாரதிய ஜனதாவை தடுமாற வைத்திருக்கிறது. நிஜத்தில் எதிர்க்கட்சிகள் சொல்ல வேண்டிய முழக்கங்கள் இவை. 



இதுவரை ராகுல் மீது ஒரு விமர்சனம் உண்டு. திடீரென வெளிச்சத்துக்கு வருவார்; நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுவார். முக்கியமான பிரச்னைகளின்போது கருத்து கேட்க தேடினால் அகப்பட மாட்டார். உ.பி, குஜராத், பஞ்சாப் தேர்தல் தோல்விகளின் விழுப்புண்களைத் தாங்கியபடி இனி அவர் எப்போதும் களத்தில் இருந்தாக வேண்டும்.
காங்கிரஸின் இந்தப் புதுப் பாய்ச்சல் பாரதிய ஜனதாவை யோசிக்க வைத்திருக்கும். ஊழல் சர்ச்சைகளில் சிக்கிய நிதின் கட்கரி இரண்டாவது முறை தலைவர் ஆவார் என கடைசி நிமிடம் வரை நம்பிக்கையில் இருந்தார். அத்வானி தலையிட்டு அதைத் தடுத்ததாகத் தெரிகிறது. வட மாநில விவசாயிகளிடம் செல்வாக்குமிக்க ராஜ்நாத் சிங் இப்போது தலைவர். ஊழலை மையமாக வைத்தே கட்சியின் பிரசாரம் அமையும் என்பது இதன்மூலம் தெரிகிறது. உ.பியில் கட்சியை புனர்ஜென்மம் எடுக்க வைக்க அவர் உதவுவார் என கட்சி நம்புகிறது. ஆனால், ‘பிரதமர் வேட்பாளர் யார்’ என்ற கேள்விக்குத்தான் அவர்களிடம் விடை இல்லை. மோடியை கூட்டணிக் கட்சிகள் ஏற்கும்வரை இந்த சங்கடத்தை பா.ஜ.க சந்திக்க நேரும்.
- அகஸ்டஸ்