என் பூக்களின் வேரோ இவன்...





ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு கதை இருக்கும்’னு சொன்னார் சுஜாதா. சொன்னது முழு உண்மை. இன்ஃபாக்ட், இருக்கிற ஒரே உண்மை அதுதான். சினிமாவுக்கு வர்றதுக்கு ரொம்ப முன்னாடி யோசிச்சு வச்ச எதையும் யாருக்கும் விற்க முடியலை. அடடா, மாத்திக்குவோம்னு நினைச்சு இன்னும் கொஞ்சம் கமர்ஷியல் சேர்த்து பண்ணினதுதான் ‘பொல்லாதவன்’. நான் முதல் படமா நினைச்சது ‘தேசிய நெடுஞ்சாலை’தான். இடையில அந்தப் பெயரை ‘பவர் ஸ்டார்’னு ஒருத்தர் பதிவு பண்ணி வச்சுட்டு, டென்ஷன் பண்ணிட்டார். அதான் இப்ப அதைப் பயன்படுத்த முடியாமல் ‘உதயம் ழிபி4’ன்னு ஆரம்பிச்சிட்டோம். எட்டாம் வகுப்பிலிருந்து என்னோட படிச்ச, கூட இருந்த இந்த மணிமாறன்தான்   படத்தை   டைரக்ட் பண்றான். நான் நினைச்சதை எடுக்கிற தகுதி படைத்தவன். என் கண்ணால் பார்த்து, மனதால் நினைச்சதை எடுத்திருக்கான்’’ எனத் தட்டிக்கொடுக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன். தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர் மணிமாறன்.
‘‘பயணம் பத்தின படமா இது?’’

‘‘பயணமும் இருக்கு. மாணவர்களைப் பத்தின படம். லவ் ஸ்டோரியை த்ரில்லரா பார்த்தா எப்படியிருக்கும்? அப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். கதைன்னு ஒண்ணும் சொல்லிட முடியாது. கதையே இல்லைன்னு வேணும்னா சொல்லலாம். அனுபவங்களின் சாயல்கள் நிறைய இருக்கும். உணர்வுபூர்வமான படமா செய்ய முடிஞ்சிருக்கு. மதியம் 12 மணிக்கு ஆரம்பிச்சு, இரவு 12 மணிக்கு கதை முடிஞ்சிடும். இடைப்பட்ட சம்பவங்கள்தான் படமா நிற்குது. பெங்களூருவுல ஆரம்பிச்சு சென்னை வரைக்கும் இருக்கும் பயணத்தின் சுவாரஸ்ய அடுக்குகள்தான் இந்த சினிமா. புதுசா படம் எடுக்கிறவங்களுக்கு கேமராமேன் வேல்ராஜ் பெரிய வரம். ‘பொல்லாதவன்’, ‘எங்கேயும் எப்போதும்’னு டைரக்டர்களோடு கலந்து நிற்பார். பயணம் நமக்குத் தருகிற படிப்பினைகள் இருக்கே... அது ரொம்பப் பெரிசு. நாம் தவறவிட்ட கணங்களின், அல்லது அனுபவித்த நேரங்களின் சாரம் இதில் இருக்கு. ‘அது ஒரு கனாக்காலம்’ போதுதான் தனுஷ்கிட்ட இந்தக் கதையை வெற்றி சொன்னார். உடனே தனுஷே ஆசை ஆசையா சொந்த புரொடக்ஷன்ல ஆரம்பிச்ச படம் இது. வேற வேற காரணங்களால அது தொடர முடியாம போச்சு. தாமதமானாலும் தரமான சினிமாவா வந்திருப்பதில் மகிழ்ச்சி!’’



‘‘சித்தார்த்தை எப்படி இந்த புராஜெக்டில் கொண்டு வந்தீங்க?’’

‘‘வெற்றிமாறன்னா அவருக்குப் பெரிய மரியாதை. அவரோட ஸ்கிரிப்ட் என்றதும் உடனே முன் வந்தார். ‘சிட்டி சப்ஜெக்ட்னா பண்ண வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா, கதைச் சூழலும் தன்மையும் எனக்கு ரொம்பப் பொருந்தியிருக்கு. இமேஜ், ஹீரோன்னு பெரிய சுமை தூக்காத மாதிரியும் படம் இருக்கு. அதனால பண்றேன்’னு சொன்னார். மணிரத்னம் சார் கிட்ட வேலை செய்தவர், பெரிய பெரிய டைரக்டர்ஸ் படங்களில் நடிச்சவர்னு எந்த பந்தாவும் கிடையாது. ‘சித்தார்த் நடிக்கும்... உதயம் ழிபி4’ன்னு டிசைன் பண்ணி காண்பிச்சா, ‘எதுக்கு சார் பேரு? அதான் மூஞ்சி தெரியுதே. வேண்டாம் எடுத்துடுங்க’ன்னு சொல்ற அளவுக்கு அநியாய எளிமை. பளிச் ஹீரோவா ஒவ்வொரு காட்சியிலும் நிற்க நினைக்காம, கதையின் இயல்பான ஓட்டத்திற்கு துணை நிற்கிற மனசுதான் அவருக்குப் பெரிய விஷயம். ஒரு காலேஜ் பையனோட பருவத்துக்கும் வயசுக்கும் பக்குவத்துக்கும் இறங்கி வந்து நுணுக்கமான விஷயங்களையும் கவனிச்சு செய்திருக்கிறார்.’’
‘‘யார் இந்த அஷ்ரித்தா ஷெட்டி? சித்தார்த்துக்கு புதுசு புதுசா அமையுதே!’’

‘‘கண்ணு வைக்காதீங்க சார். அதுசரி, உங்களை மாதிரியானவங்க கண்ணு வச்சாதானே படத்திற்கு பப்ளிசிட்டி. கர்நாடக அழகிப் போட்டியில முதல் பரிசைத் தட்டின பொண்ணு. 18 வயசுக்கு மேல் சொல்லவே முடியாது. தமிழ் ரொம்ப கொஞ்சமும், நல்ல ஆங்கிலமும், சொந்த மொழி துளுவும் தெரிஞ்ச பொண்ணு. அதுவே தகுதியாச்சே. சித்தார்த்துக்கும், அஷ்ரித்தாவுக்கும் திரைமொழியில் அவ்வளவு பொருத்தம்.



வெற்றிமாறன் ஸ்கிரிப்ட்டை இவர் நல்லா பண்ணுவாரான்னு எல்லோருக்கும் அடிமனசில் ஒரு சந்தேகம் இருந்திருக்கும். ஏன்னா வந்த ஜோரிலேயே வெற்றி சம்பாதிச்ச இடம், மரியாதை அப்படி. எனக்கு நான் எடுத்தது எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெற்றிக்கும் இருக்கணுமே... ஏன்னா அவர் குழந்தையை இல்லையா நான் வயித்தில வச்சு பெத்துக்கப்போறேன். பாத்துட்டு ‘அப்படியே நான் நினைச்சதை பண்ணியிருக்கே’ன்னு சொன்னார். நண்பன்தான். ஆனால் ஏனோ அப்பா சொன்னது மாதிரி இருந்தது.’’
‘‘எப்போதும் வெற்றியின் படங்களில் ஜி.வி.பிரகாஷ் பேசப்படுவார்...’’

‘‘இதிலும் கூடத்தான். சொல்லப்போனால் அவர்தான் இதில் செகண்ட் ஹீரோ. ‘யாரோ இவன்/யாரோ இவள்/ என் பூக்களின் வேரோ இவன்’னு நா.முத்துகுமார் எழுதி ஒரு பாட்டு போட்டிருக்கிறார். 2013ன் பரவச தாலாட்டு இதுதான். தரமான படம் கொடுத்தா, இப்போ நிச்சயமா மக்கள் மரியாதை கொடுக்கிறாங்க. அதை அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டுத்தான் இந்த முயற்சி. தமிழில் புது ரத்தம் பாய்ஞ்சுக்கிட்டே இருக்கு. தமிழ் சினிமாவில் இப்படியொரு காதல், பயணமா சொல்லப்பட்டிருக்கான்னு எனக்குள் ஒரு கேள்வி வரும். அதற்கு நேர்மையான பதில்தான் உதயம்
- நா.கதிர்வேலன்