வரி உயர்வால் எகிறுது தங்கம் விலை!





இந்தியர்களின் திருமண உறவுகள் தங்கத்தோடு தான் துவங்குகின்றன. பசிக்கு சோறு இல்லாவிட்டாலும், தாலிக்கு அரைக்குன்றுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்பது சென்டிமென்ட். அதனால்தான் உலகில் அதிகம் தங்கம் நுகர்வு செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. ஒருபக்கம், தங்கத்தின் மீதான மோகம் அதிகரிக்க, இன்னொரு பக்கம் விலையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 1981ல் வெறும் 181 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் இப்போது 3000 ரூபாய். இப்போது மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தி, மேலும் விலையேற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது. இந்த விலையேற்றமும் அப்பாவி இந்தியர்களின் திருமண பட்ஜெட்டை எகிற வைத்திருக்கிறது.

ஏன் இந்த வரி விதிப்பு?
கடந்த நிதியாண்டில் நாம் இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பு, 6 லட்சம் கோடி ரூபாய். ஒரு நாடு அதிகம் ஏற்றுமதி செய்தால், அந்நியச் செலாவணி பெருமளவு உள்ளே வரும். இறக்குமதி செய்தால், உள்ளே இருக்கும் அந்நியச் செலாவணி வெளியேறிவிடும். அதன் காரணமாக பணமதிப்பு குறையும். பணத்தின் மதிப்பு குறைவதால் பொருளாதாரமே குலைந்துவிடும். அதிகம் தங்கம் இறக்குமதி செய்வதால், ரூபாய் மதிப்பு பலவீனமாகிறது. வரியை அதிகரித்தால் விலை உயரும். மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்துவார்கள். இறக்குமதி தானாகக் குறைந்துவிடும். அந்நியச் செலாவணி வெளியில் செல்லாது. இதுதான் அரசின் நோக்கம். வரிவிதிப்பு அமலான அடுத்த நிமிடத்திலேயே 1 சவரன் தங்கத்தின் விலை 424 ரூபாய் அதிகரித்து விட்டது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, ‘‘இந்த வரி உயர்வால் தங்கக் கடத்தலும், ஹவாலா பரிமாற்றமும் அதிகரிக்கும்’’ என்கிறார்.
‘‘அந்நியச் செலாவணியை அதிகரிக்க, உள்நாட்டு வருவாயைப் பெருக்கவேண்டும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தொழில்களை மேம்படுத்த வேண்டும். அதையெல்லாம் செய்யாமல், தங்கத்தின் இறக்குமதி வரியை உயர்த்துவது வேடிக்கை. இந்த வரி உயர்வால், வெளிச்சந்தைகளில் இந்தியாவை விட கிலோவுக்கு 2 லட்சம் ரூபாய் விலை குறைவாக தங்கம் வாங்கமுடியும். 10 கிலோ கொண்டு வந்தால் ரூ.20 லட்சம் கிடைக்கும் என்பதால் கடத்தல் அதிகரிக்கும். கடத்தல் தங்கத்துக்கான பணத்தை சட்டபூர்வமாக அனுப்பமுடியாது. ஹவாலா பரிமாற்றம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி 1 சவரனுக்கு இறக்குமதி வரி 1440 ரூபாய், விற்பனை வரி 240 ரூபாய் என 1680 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. மக்களுக்கு கூடுதல் சுமையைத்தான் அரசு ஏற்றியிருக்கிறது’’ என்கிறார் சலானி.

‘‘இந்த வரியால் நகைத்தொழிலாளர்கள் மேலும் சிக்கலுக்கு உள்ளாவார்கள்’’ என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு அனைத்து தங்கநகைத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.பி.பாண்டியன்.
‘‘தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் நகைத்தொழிலாளர்கள் இருக்கிறோம். சிறிய நகைக்கடைக் காரர்கள் தரும் வேலையை நம்பியே எங்களின் ஜீவனம் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நகைத்தொழிலில் நுழைந்தபிறகு, சிறிய கடைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதனால் வேலை கிடைக்காமல் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார்கள். போதாக்குறைக்கு இப்போது வரி உயர்வு. அந்நியச்செலாவணியை அதிகரிக்க நினைக்கிற அரசு, இறக்குமதியைக் குறைப்பதற்கு பதிலாக ஆபரண ஏற்றுமதியை அதிகரிக்கலாம். அதன்மூலம் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும்’’ என்கிறார் பாண்டியன்.



‘‘தங்கம் என்பதே ஒரு மாயை. மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒருவித போதை வஸ்து. கொஞ்சம் பணம் கிடைத்தாலும் தங்கத்தில் முதலீடு செய்து வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் வங்கி டெபாசிட்டில் கிடைக்கும் லாபம் கூட தங்கத்தில் செய்யும் முதலீட்டுக்குக் கிடைப்பதில்லை’’ என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.   

“கச்சா எண்ணெயால் நாட்டில் உற்பத்தி அதிகமாகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். எனவே அதை அதிகமாக இறக்குமதி செய்வதில் லாபம் இருக்கிறது. தங்கம் எதற்கும் பயன்படாது. பண பரிவர்த்தனையும், பொருளாதாரமும் முடங்கவே செய்யும். அத்தியாவசியப் பொருளான தீப்பெட்டிக்கு பலவிதங்களில் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்கிறோம். தங்கத்துக்கு 2 சதவீதம் கூடுதலாக விதித்தால் போராடுகிறோம்.  



இந்த வரிவிதிப்பால் கடத்தல் அதிகமாகும் என்பதும் சரியல்ல. இன்று டிரெண்ட் மாறிவிட்டது. 30 வருடத்துக்கு முன்பு 2 சதவீதம் லாபம் கிடைத்தால்கூட போதும் என்று கடத்தலில் ஈடுபட்டார்கள். இப்போது அதற்கெல்லாம் யாரும் ரிஸ்க் எடுப்பதில்லை’’ என்கிற நாகப்பன், எல்லோருக்கும் ஒரு செய்தியை முன்வைக்கிறார்.
‘‘தங்கத்தை வியாபாரம் செய்வது மட்டுமே லாபகரமானது. தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதல்ல!’’  
நீங்கள் முதலீட்டாளரா... வியாபாரியா..?
- வெ.நீலகண்டன்