நிழல்கள் நடந்த பாதைகள்





ஆயுதங்களும் சொற்களும்
ஒரு விவாதத்தின் இடையே யார் முதலில் ஆயுதத்தைத் தூக்குகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்களாக நமது சமூகத்தில் கருதப்படுகிறார்கள். இந்த ஆயுதங்கள் நேரடியாக ரத்தம் சிந்த வைக்கும் கொலைக் கருவிகளாக இருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. அதைவிடக் கொடூரமான, தந்திரமான தாக்குதல் உத்திகளை ஒருவர் வெறுமனே சொற்களின் வழியே பயன்படுத்த முடியும். அந்த ஆயுதங்கள் மிகவும் எளிமையானவை. பிறப்பு, பொருளாதாரம், உடல் குறைபாடுகள், சாதி, கடந்த காலத் தவறுகள், பலவீனங்கள் சார்ந்து ஒரு மனிதனுக்கு நேரக்கூடிய எந்த ஒரு வீழ்ச்சியின்மீதும் ஒரு அம்பைக் குறி பார்த்து எறிவது. எதிராளி அப்போது ஒரு கணம் தடுமாறிப் போகிறான். அவன் தன்னை யார் என்று நம்பி யுத்த களத்தில் நின்றுகொண்டிருக்கிறானோ, அது அவனுக்கு சட்டென மறந்து போகிறது. அவன் எதைக் கடந்து வர விரும்புகிறானோ, அதன் முன்னால் அவனைக் கொண்டுபோய் நிறுத்துவதன் வழியாக அவனை யுத்த களத்திலிருந்து வெளியேற்றி விடலாம்தானே.

யுத்த நெறிமுறைகள் ஏதுமற்ற இந்த யுத்தத்தில் எனது நண்பர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; எனது உறவினர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; எனது சக எழுத்தாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். எனது எதிரிகள் எப்போதும் அதைச் செய்திருக்கிறார்கள். சில சமயம் நானும் அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறேன்.

ஒருவருடன் நீங்கள் அந்தரங்க நெருக்கத்தோடு இருந்தபோது அவர் தன்னைப் பற்றி பகிர்ந்துகொண்ட ரகசியத்தை, அவருடன் விரோதித்துக்கொண்ட நாளில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம்தான். ஆனால் அப்போது நீங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு ஆளாக மாறிவிடுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு கணம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். ஆனால் என்றென்றைக்கும் திரும்ப அடைய முடியாதபடி மனிதனின் ஒரு ஆதாரத் தகுதியை நிரந்தரமாக இழக்கிறீர்கள். இந்த இழப்பின் மதிப்பு உங்களுக்குத் தெரிவதே இல்லை. ஒரு சிறிய வெற்றிக்காக, நாம் நம்மளவில் அடையும் மாபெரும் தோல்வி அது.

நண்பர்களுக்காகச் செலவிட்ட பணத்திற்கு கணக்கு வைத்துக்கொண்டிருந்து, பின்னர் அதை ஞாபகமாகச் சுட்டிக்காட்டியவர்களை எனக்குத் தெரியும். ஒரு முறை ஒரு ஆள் விரோதியாக மாறிவிட்ட நண்பர் ஒருவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதினார். தற்செயலாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து அதிர்ந்து போனேன். ‘அந்த நண்பருக்கு எப்போதெல்லாம் காபி வாங்கிக் கொடுத்தேன், தோசை வாங்கிக் கொடுத்தேன்’ என்று ஒரு பில் தயார் செய்து, அதை பின் இணைப்பாகக் கொடுத்திருந்தார்.

இறந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட ஆபாசக் குறிப்புகளை தமிழில் படித்த அளவு நான் வேறு எதைப் பற்றியும் படித்ததில்லை. இறந்துபோன ஒருவனைப் பற்றி, அவன் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கும்போது சொல்லப்படும் பொய்கள், சிறுமையான சித்திரங்கள் என்னை மனம் கசந்துபோகச் செய்திருக்கின்றன. இறந்தவர்களின் கண்கள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதைப் பலர் உணர்வதே இல்லை. அவர்களைப் பற்றி பொய்யுரைக்கும்போது கையறு நிலையில் அந்தக் கண்கள் நம்மையே உற்று நோக்குகின்றன.

பிறரை அவமதிக்க வேண்டும் என்று விரும்புவது ஒரு மனிதனுடைய அகங்காரத்தின் இடையறாத விருப்பம். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவமானத்திற்குப் பழகிவிட்ட மனிதர்களிடம் அவர்கள் புதுப் புது உத்திகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அவமானங்களைத் தாங்கும் சக்தி படைத்தவர்களிடம் அவர்கள் புதிய கருவிகளை பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.

தனி மனிதர்கள் தங்களது சொந்த சிறுமைகள் சார்ந்து செய்யும் இந்தத் தாக்குதல்களைவிட பலமடங்கு கொடூரமானது ஒரு நம்பிக்கை சார்ந்து, ஒரு கருத்தியல் சார்ந்து, ஒரு இயக்கம் சார்ந்து செய்யப்படும் தாக்குதல்கள். நான் இதை என் வாழ்நாள் நெடுக சந்தித்து வந்திருக்கிறேன். இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் சக்தி, அளவு கடந்ததாகிவிடுகிறது. அது எங்கிருந்தோ உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது. ஒரு பொது நோக்கத்திற்காக, புனித நோக்கத்திற்காகப் போரிடுகிறோம் என்று நம்பும் ஒருவன், தனது வன்முறை சார்ந்து அடையக்கூடிய எல்லா குற்றவுணர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டு விடுகிறான். எல்லா பொது நாகரிகங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறான்.

உண்மையில் அமைப்புகளும் நம்பிக்கைகளும் தம்மை எல்லாவற்றிற்கும் மேலானவையாகக் கருதுகின்றன. எல்லாவற்றின் மீதும் ஒருதரப்பான தீர்ப்பை எழுதும் தன்னம்பிக்கையைத் தருகின்றன. ஒரு அமைப்பின், அல்லது நம்பிக்கையின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவன் எழுதுவதுபோன்ற எந்த சந்தேகமும் இல்லாத தீர்ப்புகளை, ஒரு தனிமனிதனால் எழுதவே முடியாது. அதனால்தான் மனிதர்கள் அமைப்புகளோடும் நம்பிக்கைகளோடும் தங்களை இவ்வளவு கூட்டம் கூட்டமாக இணைத்துக்கொள்கிறார்கள். அவற்றின் தூய இறுதி லட்சியத்திற்காக யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பலியிடத் தயாராக இருக்கிறார்கள்.

சமீபத்தில் ரிஸ்வானா என்ற ஒரு இலங்கை பணிப்பெண்ணிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து எழுதியிருந்தேன். மரண தண்டனைக்கு எதிராக இருபது ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருபவன் என்ற முறையில் நான் எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். ஆனால் மரண தண்டனையை நான் விமர்சித்ததை, இஸ்லாத்தை விமர்சித்ததாகச் சொல்லி என்மீது தொடுக்கப்பட்ட அர்ச்சனைகளை இங்கு விவரிப்பது கடினம். ஒரு இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் என்னைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளைப் படித்தபோது, அவர்கள் கையில் உடனடியாக ஆயுதங்கள் இல்லாததாலோ, அல்லது தாக்கப்பட வேண்டிய நபர் தங்கள் அருகில் இல்லாததாலோ வேறு வழியின்றி அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ‘அவர்களிடம் பொது விவாதத்தில் ஈடுபட நான் வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்த அழைப்பின் நேரடி அர்த்தம், அவர்களுடைய கோர்ட்டில் வந்து நான் ஆஜராக வேண்டும் என்பதுதான். ஒரு எழுத்தாளனின் எழுத்துகள்தான் அவனது விவாத மொழி. நான் அதன் வழியாகத்தான் அவர்களோடு மட்டுமல்ல... உங்களோடும் உரையாடுகிறேன். ஆனால் அவர்கள் என்னை ஏன் நேரில் அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இது ஒரு தந்திரம். ஒருவனை எங்காவது ஒரு பலவீனமான பொறியில் சிக்க வைக்க முடியுமா என்று சோதிக்கும் தந்திரம். அவன் ஆஜராக மறுத்துவிட்டால், அவனை கோழை என்று அறிவித்து தங்கள் வெற்றியை தாங்களே கொண்டாடிக்கொள்ளலாம். விவாதிப்பது என்பது ஒருவனுடைய தேர்வு. யாரிடம் விவாதிப்பது என்பதும் அவனுடைய தேர்வுதான். ஒருவரை விவாதத்திலிருந்து புறக்கணிப்பது, அந்த நபரை விவாதத்திற்கு தகுதியற்ற நபர் என்று நேரடியாகச் சொல்வது என்பதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

நமது அந்தரங்கமான விருப்பு வெறுப்புகளுக்கான எதிர்வினைகளாகட்டும், அரசியல் நம்பிக்கைகளுக்கான எதிர்வினைகளாகட்டும், விவாதிப்பது அல்லது விமர்சிப்பது என்பது ஒரு உயரிய கலாசார வடிவம். ஆனால் இங்கே விமர்சனம் என்பதும் விவாதம் என்பதும் பல சமயங்களில் ஒருவரை அடித்து வீழ்த்துவதற்கான எளிய தந்திரம் என்பதற்கு மேல் அதில் எந்த நெறிமுறைகளும் இருப்பதில்லை.

மம்தாவின் அடுத்த அடி
மம்தா பானர்ஜி பிரதமரை அடிப்பேன் என்று சொன்னாரா இல்லையா என்பதுதான் இப்போது அடுத்த தேசிய பிரச்னை. ‘அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கச் சொன்னால் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறார். இதற்காக அவரை என்ன அடிக்கவா முடியும்?’ என்றுதான் கேட்டார் மம்தா.

இந்தியப் பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் அளவிற்கு அடிவாங்கிய இன்னொரு பிரதமர் இல்லை. இந்தச் சூழலில் ‘பிரதமரை அடிக்க முடியாது’ என்ற தொனியில் மம்தா சொன்னார் என்பதைவிட, ‘அவரை அடித்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
மன்மோகன் சிங்கிற்கு கோபம் உண்டாக்குவது அவ்வளவு எளிதல்ல.

ஆட்டோகிராப்
சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் அமர்ந்திருந்தபோது ஒருவர் ராமகிருஷ்ணனின் புத்தகத்தை என்னிடம் தந்து, ‘‘இதில் எஸ்.ராவைப் புகழ்ந்து இரண்டு வரி எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்’’ என்றார். அதேபோல அவரிடமும் எனது ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ‘‘மனுஷ்ய புத்திரனைப் புகழ்ந்து இரண்டு வரி எழுதுங்கள்’’ என்றார்.

நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இரண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு இடையே எப்படி பிரச்னை உண்டு பண்ண வேண்டும் என்று அந்த ஆள் ஒரு தெளிவான திட்டத்துடன் வந்திருப்பது தெரிந்தது.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல் விமலாதித்த மாமல்லன்

சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்து விட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்கு வெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில வாரங்கள் வெகுஜன ஊடகங்களுக்கு பெரும் தீனியாக மாறின. அந்த விவாதங்களைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவர் விமலாதித்த மாமல்லன். இணைய ஆபாசம் என்ற எளிய புள்ளியில் தொடங்கிய இந்த சர்ச்சை, தமிழ் தேசிய அரசியல், சாதிய அரசியல் என விரிவடைந்த விதத்தை இந்த நூல் சுவாரசியமாகத் தொகுக்கிறது.

சமூக வலைத்தளத்தில் நடந்த ஒரு விவாதம் இவ்வாறு தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற வகையில் மாமல்லன் ஒரு முன்னோடியின் இடத்தைப் பெறுகிறார். விரைவில் இதுபோன்ற பல தொகுப்பு நூல்கள் வர வாய்ப்பிருக்கிறது. (விலை: ரூ.120/-, வெளியீடு: சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD   (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை-600090.)

எனக்குப் பிடித்த கவிதை

இடறி விழுந்ததை
காலணி அறுந்ததை
தாவணி கிழிந்ததை
ஒரு காகம் எச்சமிட்டதை
ஒரு நீர்க்குமிழி உடைந்ததை
எண்ணி எண்ணி சிரிக்க
ஏராளம் இருந்தது
- சபீதா

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்

அடுத்த ஜென்மத்துல யாரா வேண்டுமானாலும் பொறக்கலாம். ஆனா கமல்ஹாசனா மட்டும் பொறந்துடக் கூடாது... என்னடா வாழ்க்கை இது!