ஆழ்ந்த பொறாமைகள்





தன் சொகுசுக்காக இயற்கையை சிதைத்த மனித குலம் இன்று அதன் அபாய விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது என்பதை ‘குறையும் பருவமழை’ கட்டுரை உணர்த்தியது.
- மகேந்திரன், சென்னை.

மணிரத்னத்தின் ‘கடல்’ பட ஜோடி கௌதம் - துளசி செம க்யூட்! சும்மா சொல்லக் கூடாது, இந்த காக்டெயில் பேட்டி டீட்டெய்லான ‘இனிப்புக் கடல்’தாங்க!
- எஸ்.சாந்தி, கல்புதூர்.

என்னது, அழகு ஏஞ்சல் அஞ்சலி தெலுங்கில்தான் கவனம் செலுத்துகிறாரா? அதுவும் கிளாமரில் பிச்சு உதறுகிறாரா? டப்பும் டபுள் மடங்கா? ஆந்திரா மண்ணுக்கு எங்கள் ஆழ்ந்த பொறாமைகள்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

காலம் அறிந்து செய்யும் மனக்கட்டுப்பாடே போதும் கருத்தடைக்கு. இதை விடுத்து முதலைச் சாணம் முதற்கொண்டு பாதரசக் கலவை வரை என்னவெல்லாம் செய்து பார்த்திருக்கிறான் மனிதன்! எல்லா சோதனைகளுமே பெண்(எலி?)களின் மேல்தான்!
- கரு.பாலகிருஷ்ணன், மதுரை-20.

விளையாட்டு வீரர்களை மாய உலகில் தள்ளிய ஊக்க மருந்தை இப்போது இளைஞர்களும் பயன்படுத்துவது அதிர்ச்சித் தகவல். இதயத்தையே நிறுத்திவிடும் இந்த மருந்தைப் பற்றி தக்க சமயத்தில் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

சர்க்கஸ் கலைஞர்களின் இன்றைய நிலை மனதைத் தொட்டது. அன்று கோலோச்சிய சாகசக் கலைஞர்களின் வாழ்க்கை இன்று சங்கடத்தில். நாம் புதுமையை வரவேற்கின்ற அதே நேரத்தில், பழைய நல்ல விஷயங்களையும் தக்க வைத்துக் கொள்வோமாக.
- என்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

‘லேண்ட்ஸ்கேப்’ புகைப்படக் கலைஞர் ரமணனின் மலைக்காட்சி புகைப்படங்கள் சூப்பர்ப். குங்குமத்தில் வழிந்த அழகாக அவை எங்களைக் குளிர வைத்தன.
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

மூன்று பட விமர்சனங்களும் முக்கனிகளுக்கு சவால் விட்டன. படங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, ‘இதுதாண்டா விமர்சனம்’ என்று சொன்ன தாங்கள் ஒரு ‘விமர்சனத் திலகம்’தான்!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

பீட்ஸா, ப்ரூட் சாலட், பப்பாளி எனப் பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான த்ரிஷாவை, ‘கொத்து பரோட்டா’ என அட்டையில் எழுதிய உம்ம ஏரியாவில், 24 மணிநேரம் பவர்கட்டாகக் கடவது!
- ரேவதிப்ரியன், ஈரோடு.

ஒரு பெயருக்காக பெரிய போரையே சுப்ரீம் கோர்ட் சென்று நடத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கும் ஐஸ்லாந்து நாட்டுச் சட்டம் சரியான அக்கப்போராக இருக்கிறதே!
- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி; ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.