புத்திசாலி





மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். இன்னும் பத்து நாட்களே இருப்பதால், தனித்தனியாகப் போய் எல்லோருக்கும் தந்து முடிக்கத் திட்டமிட்டார்கள். ஒவ்வொருவரும் தினம் இருபது உறவினர்களுக்குத் தருவது என்று கணக்கிட்டு மணிமாறனும் அவர் மனைவி அமலாவும் வேறு வேறு இடங்களுக்கு புறப்பட்டுப் போனார்கள்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் அமலா இருபது வீடுகளுக்கும் அழைப்பிதழ் தந்துவிட்டு வீடு திரும்பியிருந்தாள். ஆனால் மணிமாறனால் அது முடியவில்லை. வெறும் 12 அழைப்பிதழ் கொடுக்கவே இருட்டிவிட்டது.

அமலாவைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம். உறவுக்காரர்கள் வீடுகளில் இவள் பேசத் துவங்கினால் குறைந்தது அரை மணி நேரம் ஓடிவிடும். இன்று எப்படி இவ்வளவு சீக்கிரம் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வர அவளால் முடிந்தது?  
''உண்மைய சொல்லு, எல்லார் வீட்டுக்கும் நேர்ல போய் கொடுத்தியா? இல்ல, கூரியர்ல போட்டுட்டு போன்ல சொல்லிட்டியா?’’ - சந்தேகமாகவே கேட்டார் மணிமாறன்.

‘‘சேச்சே... பொதுவாவே சொந்தக்காரங்க சந்திச்சுக்கிட்டா, அடுத்தவங்களைப் பத்தி கிண்டலாத்தான் பேச்சை ஆரம்பிப்போம். கேக்கிறவங்களும் கூடவே பேசி சிரிச்சி நேரம் போறதே தெரியாது. ஆனா, இப்ப மத்தவங்களோட நல்ல விஷயங்களை மட்டுமே பேச ஆரம்பிச்சேன். அதை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? அதான் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சீக்கிரமா புறப்பட முடிஞ்சது’’ என்றாள் அமலா.
மனைவியின் புத்திசாலித்தனம் மணிமாறனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.