டெலிவரி





மாங்காய் ஊறுகாயையும் அப்பளத்தையும் பத்திரமாக பேக் செய்து பையில் போட்ட மங்களம், தன் மகனைக் கூப்பிட்டு, ‘‘குமார்... இதைக் கொண்டு போய், அடுத்த தெரு வனஜா வீட்டுல கொடுத்துட்டு வாடா!’’ என்றாள்.

‘‘போம்மா... இந்த ஊறுகாய், அப்பள பிசினஸ எல்லாம் உன்னோடயே வச்சுக்கோ. இந்த டெலிவரி வேலைக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதே. என்னால முடியாது’’ என்றான் குமார்.
படித்துவிட்டு வீடு வீடாகச் சென்று அப்பளமும் ஊறுகாயும் விற்க கூச்சம் ப்ளஸ் ஈகோ அவனுக்கு.
சிறு வயதிலேயே கணவனை இழந்த மங்களம் இப்படி அப்பளம், ஊறுகாய் விற்றுத்தான் குமாரைப் படிக்க வைத்தாள். அவள் கைப்பக்குவம் குடும்ப வண்டியை சுலபமாக ஓட வைத்தது. குமாரும் பிளஸ் டூ படித்துவிட்டு, அவன் தகுதிக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் கிடைத்த ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டான்.
கடைசியில் வனஜாவே பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, குமார் பைக்கில் வேலைக்குக் கிளம்பினான்.
போனதுமே அவனை மேனேஜர் கூப்பிட்டார். ‘‘என்ன குமார் இன்னைக்கு இவ்வளவு லேட்? ஏகப்பட்ட ஆர்டர் காத்திருக்கு. அவசரமான ஆர்டர்களை முதல்ல பாரு. இந்த அட்ரஸ்ல பதினைந்து பீட்ஸா வேணுமாம். எல்லாம் தயாரா இருக்கு. சீக்கிரம் போய் கொடுத்துட்டு வந்துடு’’ என ஆங்கிலத்தில் அவசரப்படுத்தினார் மேனேஜர்.
மின்னல் வேகத்தில் டெலிவரி கொடுக்க, பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பினான் டெலிவரி பாய் குமார்.