மகராசி





தலைப் பிரசவத்திற்காக தாய் வீடு போனவள் வித்யா. சிசேரியன். ஆண் குழந்தை.
‘‘பச்சை உடம்பு என்பதால்... ஆறு மாதம் இருக்கட்டும்’’ என்றனர். ‘‘சரி’’ என்றான் கணவன் ஹரி.
மேலும் மூன்று மாதங்களாகியும் வித்யா வரவில்லை.
‘‘மாப்பிள்ளைக்கு நேரங் காலம் இல்லாம உழைக்கற வேலை. அங்க போனா வித்யா தனியா கஷ்டப்படணும். குழந்தையை யார் கவனிச்சுப்பாங்க? இன்னும் மூன்று மாதம் ஆகட்டும்’’ என்றனர் அவள் வீட்டில்.
வெறுத்துப் போனான் ஹரி.
அப்போதுதான் வேலைக்காரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மகள் சரசாவை வேலைக்கு அனுப்பினாள். கறுப்புதான் என்றாலும் சரசா கவர்ச்சியாக, இளமையாக இருந்தாள். தனிமை ஹரியின் போக்கை மாற்றியது. ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. அவளிடம் விருப்பத்தைச் சொன்னான்.
‘‘நாளைக்கு வரைக்கும் பொறுங்க’’ என்றாள் சரசா.
சாயந்திரமே குழந்தையுடன் வந்துவிட்டாள் வித்யா. ஹரிக்கு அதிர்ச்சி.
நேராக சமையலறைக்குப் போன வித்யா, வேலைக்காரி சரசாவைப் பிடித்து இழுத்து, ‘‘வெளியே போ’’ என்றாள்.
‘‘வந்ததும் வராததுமா ஏம்மா என்னை வெளியே போகச் சொல்றீங்க?’’ என்றாள் சரசா.
‘‘நீ என் வீட்டுக்காரரை மயக்கினதை யாரோ ஒரு மகராசி போன் பண்ணி எனக்குச் சொல்லிட்டா!’’
‘‘உங்க வீட்டுக்காரர் தப்பான வழிக்குப் போயிடக்கூடாதுன்னு உங்களுக்கு போன் பண்ணினதே நான்தான்’’ என்று சொன்னபடியே கிளம்பிப் போனாள் சரசா.
‘நீ மகராசிதான்’ என்றாள் வித்யா மனசுக்குள்!