ஓற்றைத் தோடு





கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்தியனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்தியனின் மடியில் பூமணி இருந்தாள். அவளின் பார்வை அந்தக் கருணை இல்லத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த அவள் வயதொத்த பிள்ளைகள் மீது கிடந்தது. சத்தியன் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, ‘இவர்களோடுதான் பூமணி இருக்கப்போகிறாள்’ என நினைத்தான். ஆனால் அந்த நினைவை அவன் நெஞ்சுக்குள் ஒலித்த ஒரு குரல் கலைத்தது.
‘‘பிள்ளைய கவனமா பாருங்கோ... அது எனக்கு போதும்...’’ - அது சாகுந்தறுவாயில் பூரணி சொன்ன வார்த்தைகள். அவை இப்போது அவனை உலுக்கின. ஆனால் அதையும் மீறித்தான் அங்கே வந்திருக்கிறான். இதைத் தவிர அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
உள்மனப் போராட்டத்தில் இருந்த சத்தியனின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

முல்லைத்தீவை ஒட்டிய சிறிய காணியோடு கூடிய ஓலைக்குடிசையில் ஆடு, மாடு, கோழி என வாய் பேசாத உயிர்களோடு வாழ்ந்த இன்பமான வாழ்க்கை அது. தினமும் அந்த ஓலைக்குடிசையில் விடிவது ஒரு கவிதை போல இருக்கும். வீட்டுச் சேவல்கள் சிறகடித்து சூரிய வருகையை வாழ்த்தும். குடிசையைச் சுற்றி நிற்கின்ற மரங்களில் கூடுகட்டி வாழும் குருவிகள் விடிந்ததைப் பற்றி பேசும். பட்டியில் கட்டியிருக்கிற ‘பாக்யா’ பசு கத்தும், சத்தியனின் அம்மா பாக்கியத்தம்மாள் ஆசையாய் வளர்த்த பசுவின் கன்று. அவள் நினைவாக வைத்த பெயர். அது பிறக்கும்போது அம்மா உயிரோடில்லை.
காய்ந்த மரக்குச்சிகளால் அடுப்பெரிய வைத்து பிளேன் டீ (கறுப்பு சாய டீ) போட்டு ஒரு கிளாஸில் எடுத்துக்கொண்டு, படுத்திருக்கின்ற சத்தியனை எழுப்புவாள் பூரணி. அவன், ‘‘பல்ல தீட்டாமல் (விலக்காமல்) ரீ குடிக்கிறதோ?’’ என்று சிணுங்குவான்.

அதற்கு அவள், ‘‘வாயக் கழுவிப் போட்டு குடிங்கோ...! வேந்து பல்ல தீட்டலாம்’’ என்பாள். இது தன்னை படுக்கையை விட்டு எழுப்பச் செய்கிற யுக்தி என்பது அவனுக்குத் தெரியும்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் மின்சாரமே இல்லாமல் எண்ணெய் விளக்குகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை இன்பமாக்கியவள். விவசாயம் செய்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்றிருந்த அப்பாவின் மனதை மாற்றி, சத்தியனை திருமணம் செய்தவள். பூமியைப் போல் பொறுமையான குணம் அவளுக்கு. உள்ளத்தாலும் வார்த்தையாலும் சத்தியனுக்குச் சுகமளித்த பூரணி தன் உடலாலும் அதே சுகத்தை அள்ளிக் கொடுத்தாள். யுத்தத்தின் எல்லை விரிந்து, கிராமத்தை அவ்வப்போது ஆக்கிரமிக்கிறபோதெல்லாம் காட்டுக்குள் ஓடி ஒளிந்து, ராணுவம் போன பிறகு திரும்பி வந்து வாழ்வதை இயல்பாக ஏற்றுக்கொண்டாள். அது சத்தியனை யோசிக்க வைத்தது. எந்தத் துன்பத்தையும் துரும்பாகப் பார்க்கிற அவளின் இயல்பைப் புரிந்துகொண்டான். ஆனால் இறுதி யுத்தம் என்ற முழக்கத்தோடு வந்த யுத்தம் அவர்களின் மகிழ்ச்சியை, நிம்மதியை அள்ளிக்கொண்டு போயிற்று.

கொடிய யுத்த வாகனங்களின் கோரப்பற்கள் நிலத்தை ஒவ்வொரு அங்குலமாய்க் கடித்துக் குதறி மக்களைத் துரத்தின. சீறிப்பாய்ந்து வரும் ஷெல்களினால் குடியிருப்புகள் சிதறின. அவர்களின் குடிசை தீயில் எரிந்தது. எதை எடுப்பது என யோசிக்கும்போதே ஆகாயத்திலிருந்து விமானங்கள் கக்கித் தள்ளும் குண்டு வீச்சுகளால், ‘பாக்யா’வை மட்டும் இழுத்துக்கொண்டு காட்டுக்குள் அவர்கள் ஓடினார்கள். அவர்கள் வாழ்ந்த கிராமத்தை ராணுவம் பிடித்தது. உயிர் பிழைத்தால் போதுமென எல்லோரும் ஓடிவிட்டார்கள். அவர்களோடு வாழ்ந்த ஆடு, மாடுகளுக்கு என்னாயிற்றோ தெரியவில்லை.
மரங்கள் அடர்ந்த காட்டினுள்ளே மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள். விமானங்கள் அந்தக் காட்டினுள்ளேயும் குண்டுகளைக் கொட்டின. அவற்றிலிருந்து தப்பித்தான் முகாம் போக வேண்டும். பூரணியும் சத்தியனும் ஒரு மரத்தடிக்கு வந்தார்கள். அந்த மரத்தோடு ஒட்டிய ஒரு பக்கம், மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். மறுபக்கம், பெய்த மழையில் தேங்கிய தண்ணீர் இருந்தது. அந்தத் தண்ணீர் கண்ணாடிபோல் தெளிவாக இருந்தது. அந்தப் பாதையில் நடப்பவர்களில் சிலர் கைகளால் அந்தத் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டுப் போனார்கள். சாப்பிட எதுவும் இல்லாத சத்தியன் அந்தத் தண்ணீரை அள்ளிக் குடித்தான். பூரணி தண்ணீர் குடித்துவிட்டு பூமணிக்குத் தண்ணீர் பருக்கும்போது, ‘‘என்ர குஞ்சுக்கு சோறை ஊட்டாம தண்ணிய பருக்க வைச்சிட்டானே நல்லூரான்’’ என்று அழுதாள்.
விமான குண்டுவீச்சுக்கான அறிகுறி தெரியாத ஒரு மௌனம் நிலவியது. சத்தியன் பூமணியைத் தூக்கிக் கொண்டும், பூரணி ‘பாக்யா’வை இழுத்துக் கொண்டும் நடந்தார்கள். பாக்யா ஏனோ ‘மே’ என்று கத்திக்கொண்டே நடந்தது. அதன் கத்தல் பலருக்குப் பிடிக்கவில்லை. அந்த சத்தம் கேட்டு ராணுவம் வந்துவிடுமோ என்று பயந்தார்கள் சிலர். ஆனால் எவரும் எதுவும் பேசவில்லை. பேசுகிற நேரமா அது?

‘‘பொம்பர்(BOMBER)  வர்ற சத்தம் கேக்குது. கவனமா போங்கோ’’ என்று அபாயச் சங்கு ஊதினான் ஒருத்தன்.
‘‘எல்லாத்தயும் விட்டுட்டு போற எங்கட மேலயே குண்டு வீசுறாங்களே, முகாமுக்கு அப்ப எப்படி போறது?’’ என்று கலங்கினாள் பூரணி.
‘‘எப்படியோ போகவேணும். பார்த்து நடவும்’’ என்றான் சத்தியன். ஆனால், பாக்யா மெதுவாக நடந்ததால் பூரணி மெதுவாக நடந்தாள். சத்தியனுக்கும் அவளுக்கும் இடைவெளி உருவானது. விமான குண்டுகள் விழத்தொடங்கின. எல்லோரும் அங்கும் இங்குமாக ஓடினார்கள். பூரணி பாக்யாவை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடினாள். அப்போது ஆகாயத்திலிருந்து குண்டுகள் கீழே விழுந்து வெடித்தன. ஒரு குண்டு வெடித்ததில் பாக்யா சிதைந்து போனாள். ‘மே’ என்ற சத்தம் காற்றில் கரைந்தது...
‘‘அய்யோ பாக்யா...’’ என்று கதறிய பூரணி, சிதைந்து போன பாக்யாவைப் பார்த்தவாறு அழுதாள். அப்போது வானில் இருந்து இன்னொரு குண்டு விழுந்து வெடிக்க... பூரணி உருக்குலைந்து விழுந்தாள்.

‘‘கடவுளே! இப்படி செய்து போட்டியே’’ என்று கதறினான் சத்தியன். பூமணி ‘‘அம்மா’’ என்று அழுதாள்.
பூரணி அரை உயிராய் இருந்தாள். உலகமே இடிந்து விழுந்தது போன்று உணர்ந்தான் சத்தியன்.
‘‘நான் பிழைக்க மாட்டன். பிள்ளைய பத்திரமா பாருங்கோ’’ என்று பேச முடியாமல் பேசினாள். சத்தியனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குண்டுகள் விழுந்து வெடிக்கிற சத்தம் தொடர்ந்து கேட்டது. பூரணி மெதுமெதுவாக ஒரு கையால் காதைப் பிடித்து, மறுகையால் காதிலிருந்த தோட்டைக் கழற்றி பூமணியிடம் கொடுத்துவிட்டு மெதுவாக சொன்னாள்...
‘‘உது பெறுமதியானது. பத்திரமா வைச்சுக்கொள். என்ற குஞ்சுக்கு அம்மா குடுக்கிற சீதனம்...’’

பூமணி ‘‘அம்மா’’ என்று அழுதுகொண்டே அந்த ஒற்றைத்தோட்டை வாங்கினாள். அந்தத் தோட்டில் ரத்தம் படிந்திருந்தது.
பூரணி மற்ற தோட்டையும் காதிலிருந்து கழற்ற முயன்றபோது மறுபடியும் அந்தப் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. அந்த சத்தத்தில் பூரணியின் உயிர் பிரிந்ததைக் காட்டுவதைப்போல் அவள் கைகள் சரிந்தன. சத்தியன் கதறினான்... ‘‘அய்யோ... என்ற மனுசிய பாருங்கோ...’’ என்ற அவன் கூக்குரலுக்கு எவரும் வரவில்லை. அவரவர் உயிர் அவரவர்க்குப் பெரிது. உயிரைக் காப்பாற்ற ஓடுபவர்கள் செத்ததையா பார்க்க வருவார்கள்?
‘‘அய்யோ பூரணி...’’
பூரணியின் உடலருகே இருந்தவாறு சத்தியன் போட்ட அலறல் ஓங்கி ஒலித்துக் கரைந்தது. அப்போது ஒருவர் அவனருகே ஓடிவந்தார். ஐம்பதுக்கு மேல் வயதிருக்கும். முகத்தில் வெள்ளையும் கறுப்புமாய் தாடி மீசை. அவரைக் கண்டதும் சத்தியன், ‘‘என்ர மனுசிய பாருங்கோ’’ என்று அழுதான்.
பூரணியின் கையைப் பிடித்துப் பார்த்த அவர், ‘‘மூச்சு நின்டுட்டுது’’ என்று சொல்லிவிட்டு, சத்தியனின் முதுகைத் தடவினார். அவனோ, ‘‘அய்யோ பூரணி...’’ என்று அழுதான்.
‘‘தம்பி... இனி அழுது ஒண்டும் ஆகாது. பிள்ளைய காப்பாத்த நடவும்’’ என்றார் அந்த தாடிக்காரர்.
‘‘மனுசிய இப்படியே விட்டுட்டுப் போறதோ?’’

‘‘தம்பி... வேற வழியில்லை. என்ன செய்ய முடியும்? பொம்பர் குண்டு போட்டுக்கொண்டே இருக்கு. நீர் பிள்ளைய காப்பாத்திர வழிய பாரும்’’ என்றார் அவர். சத்தியன் அசைவது போல் தெரியவில்லை. பூரணியை எப்படி அனாதைப் பிணமாக விட்டுப் போவது? இந்த உடலால் குடும்பத்திற்காக எவ்வளவோ உழைத்திருக்கிறாள்.
தாடிக்காரர் அவனருகே உட்கார்ந்து பேசினார்... ‘‘என்ர பேர் நாகலிங்கம். என்ர மனுசியும் ஷெல்லில அடிபட்டு செத்திட்டா. ஒரே மகன். அவன் எங்கெண்டு தெரியாது. நான் மட்டும்தான் உயிரோட இருக்கிறன். வர்ற வழியில் பலர் பொம்பர் குண்டுல அடிபட்டு செத்துக் கிடக்கிறாங்கள்... அவங்கள அப்படியே விட்டுட்டு தங்கட உயிர காப்பாத்த மத்தவங்கள் போயிட்டாங்கள். அத குத்தமெண்டு சொல்ல முடியாது. உது யுத்தம் நடக்கிற பூமி. உங்க சடங்கு சம்பிரதாயம் உதவாது. உயிரக் காப்பாத்திர ஒண்டுதான் முக்கியம். உம்மட மனுசிய காப்பாத்த முடியாம போனாலும் மகளயாவது காப்பாத்தப் பாரும்...’’

சத்தியன் பூரணியைப் பார்த்தான். அவள் கண்களை மூடித் தூங்குவது போல் இருந்தது. அவளின் ஒரு காது தோடு கண்ணில் பட்டது. ஒரு நொடி, ‘அந்தத் தங்கத்தோட்டைக் கழற்றினால் என்ன’ என்ற எண்ணம் நெஞ்சுக்குள் மின்னலாய் வெட்டியது. அந்தத் தோட்டைக் கழற்றித் தரத்தானே பூரணி நினைத்தாள். ஆனால் மறுவிநாடி பூரணியே போய்விட்டாள். அவள் தோட்டைக் கழற்றி என்ன செய்ய? அவளைவிட தோடு பெரிதா என உள்மனது பேச, பூரணியைப் பார்த்துக்கொண்டிருந்தான். தாடிக்காரர் பூமணியைத் தூக்கிக்கொண்டு, ‘‘உங்க நிண்டு ஒண்டும் நடவாது. நடவும்’’ என்றபோது அவரையே பார்த்தான். எத்தனையோ பேர் அங்கே நடந்து போனபோது இவர் மட்டும்தானே வாஞ்சையுடன் வந்து பேசினார். பூரணியைக் கடைசியாக ஒரு தடவை பார்த்து விட்டு நடந்தான்.
அகதி முகாமுக்கு வந்தும் சத்தியன் அழுவதை நிறுத்தவில்லை. அவன் அழுவதைப் பார்த்து பூமணியும் அழுதாள். நாகலிங்கம்தான் ஆறுதல் சொன்னார்.

‘‘தம்பி, உனக்கு மட்டும்தான் எண்டு நினையாதே. உந்த முகாமில் இருக்கிறவங்கள்ல பாதிப்பேர் தங்கட சொந்த நிலத்தை குண்டுவீச்சாலும் ஷெல் அடியாலயும் பறிகுடுத்தவங்கள்தான். அவங்களும் உன்ன மாதிரி அழுதால் இது அழுகை முகாமாக இருக்கும். இனி அழுது ஆகப் போறது ஒண்டும் இல்லை. நீர் அழுதால் புள்ளையும் அழும். முதலில் அழுகையை நிறுத்தும்.’’
தன்னை எவரும் திரும்பிப் பார்க்காதபோது தானாக வந்து பேசிய நாகலிங்கத்தைப் பார்த்தான் சத்தியன்.

‘‘தம்பி, நீர் ஒண்ணும் யோசிக்காதே... முகாமை விட்டு வெளியே வந்ததும் நீர் என்னோட உதவியா வாரும். வவுனியாவுல எனக்கு தெரிஞ்ச பேக்கரி இருக்கு... பேக்கரி முதலாளி எனக்கு சொந்தக்காரன். நிச்சயமா வேல தருவார். இரவில பான் (ஙிஸிணிகிஞி)    போடுர வேல. பகல்ல பேக்கரியில தங்கலாம். ஆனால்...’’ என்று இழுத்தார் நாகலிங்கம்.
சத்தியன் ஒருவித பய உணர்வோடு, ‘என்ன’ என்பது போல் பார்த்தான். நாகலிங்கம் மெதுவாய்ச் சொன்னார். ‘‘பூமணிய பார்க்கிறதுதான் பிரச்னை. இரவில் உமக்கு வேலை, பகல்ல தூக்கம். பிள்ளைய என்ன செய்யிறது?’’
ராணுவத்துக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடி, விமானத் தாக்குதலில் பூரணியைப் பறிகொடுத்து, பூமணிக்காக வாழ வேண்டிய நிலையில், அவளை என்ன செய்ய முடியும்?
‘‘எனக்கு ஒண்டும் தெரியாது... நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேணும்’’ என்றான் சத்தியன்.

‘‘கொஞ்ச நாளைக்கி பூமணியை சிறுவர் காப்பகத்தில் விடுவம். நீர் சரியெண்டால் பூமணிய விடலாம். நீரும் ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் அவளை பார்க்கலாம்.’’
சத்தியன் யோசித்தான். கையில் காசில்லை... கால் ஊன்றி நிற்க இடமில்லை... பூமணியும் தானும் சேர்ந்து வாழ வழியில்லை. இந்நிலையில் நாகலிங்கம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ஆனால் பூமணி சிறுவர் காப்பகத்திற்குப் போவாளா?
பூமணியிடம் புரியுமாப் போல் பேசினான். முதலில் மறுத்தாள். ‘‘அப்படியெண்டால் நானும் நீரும் முகாமிலேயே இருக்க வேண்டியதுதான். வெளிய போனா ரோட்டில படுத்து பிச்சை எடுத்து வாழ வேண்டும். முல்லைத்தீவு வீட்டுக்குப் போக விடமாட்டாங்கள் குஞ்சு’’ என்று சொன்னதும் சம்மதித்தாள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு விசாரணை முடிந்ததும் சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போகிறவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களை அந்த முள்வேலி முகாமிலிருந்து வெளியே போகவிட்டார்கள். நாகலிங்கம் சத்தியனையும் பூமணியையும் அழைத்துக்கொண்டு வவுனியாவுக்கு வந்தார்.

‘‘உங்களை சாமி அய்யா வரட்டாம்’’ என்று எவரோ சொல்ல, நெஞ்சுக்குள் திரைப்படமாய் விரிந்த நினைவுகளை அறுத்துவிட்டு நடந்தான் சத்தியன். அவன் பின்னே பூமணியோடு நடந்தார் நாகலிங்கம். அவர்கள் காப்பகத்தின் உள்ளே போனார்கள். உள்ளே ஒரு அறையில் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்த மேஜையின் ஒரு பக்கம் அவர்களை எதிர்பார்த்து ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். சாமியார் என்றதும் காவி உடுப்போடு இருப்பார் என்று நினைத்து சத்தியன் அவரைப் பார்த்தான். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். நெற்றியில் விபூதிக்குறிகள். வெள்ளை நிற வேட்டி, சட்டை.
அவர் மெல்லிய குரலில் கேட்டார்... ‘‘என்ன விசயமா வந்தனீங்கள்?’’
அவரை ஏக்கத்தோடு பார்த்தபோது பூமணிக்கு அம்மாவின் அப்பா ஞாபகம் நெஞ்சில் நின்றது. அம்மப்பா எவ்வளவு ஆசையாகத் தன்னைக் கொஞ்சுவார்? ‘குஞ்சு... குஞ்சு...’ என்று ஒரு நாளைக்கு நூறு தடவை பேசுவாரே! அவரும் இல்லை... அம்மாவும் இல்லை...

பூரணி செத்ததையும் அவள் உடலை காட்டிலேயே விட்டு வந்து விட்டதையும் சொல்லி அழுத சத்தியன், பிறகு “எனக்கு இப்ப வீடு வாசல் இல்லை.. நான் நிக்கவே இடம் இல்லை... உந்த பிள்ளைய மட்டும் கொஞ்ச நாளைக்கி உங்களோட நிக்கட்டும் அய்யா’’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதான்.
அவன் அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்த அந்த இல்லப் பொறுப்பாளர், ‘‘தம்பி... உமக்கு மட்டுமில்ல. எல்லோருக்கும் உதவ வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் நூறு பேர் தங்கிற இங்க நூத்தியெம்பது பேர் இருக்கிறாங்கள். ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கே பெரிய பிரச்னை. தண்ணி பிரச்னை. கொஞ்ச பேரை வேற இடத்துக்கு அனுப்ப யோசிக்கிறோம்.. உதல புதுசா யாரையும் எடுத்து என்ன செய்ய முடியும்?’’ என்றார். அவர் பதிலைக் கேட்ட சத்தியன் நிலைகுலைந்தான். பனையேறி விழுந்தவனை மாடு மிதித்தது போன்ற உணர்வு அவனுக்கு.
நாகலிங்கம் தன் பங்குக்கு கெஞ்சினார். ‘‘கொஞ்ச நாளைக்குதான் அய்யா... நீங்க நினைச்சால் இடம் இருக்கும்.’’
“என்ர மனசில எல்லாருக்கும் இடம் இருக்கு. ஆனால் இங்க இடம் இல்லை. காலையில் மூண்டு பிள்ளைகளுக்கு கேட்டு வந்தவங்கள், இடம் இல்லை எண்டு சொல்லிட்டன். என்னில கோவியாதைங்கோ... புதுசா வர்ர பிள்ளைகள தங்க வைக்க நிதி காசு காணாது.’’

‘போய் வாருங்கள்’ என்பது போல் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது பூமணி தன் பாவாடையில் முடித்து வைத்திருந்த ஒற்றைத் தோட்டை எடுத்து அந்தப் பெரியவரிடம் நீட்டி, ‘‘உது பெறுமதியானது எண்டு அம்மா சொன்னவ. உதை கழற்றித் தந்திட்டு மற்றதை கழற்றி தரக்கையில பொம்பர் போட்ட குண்டு வெடிச்சி செத்துப் போனா... அம்மா இருந்தா உங்க வரமாட்டன். அப்பா பாவம்... அவரும் நானும் இப்ப ரோட்டுல நிக்கிறோம்... நீங்க உந்த தோட்ட வைச்சிக்கொண்டு எனக்கு இடம்தாங்கோ’’ என்று சொன்னபோது சத்தியனும் நாகலிங்கமும் வியப்புடன் அவளையே பார்த்தார்கள். பதில் பேச முடியாத இல்லப் பொறுப்பாளரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னங்களில் படிந்தது.