மசாலா பொடிகளில் மகத்தான லாபம்





மார்க்கெட்டில் இன்ஸ்டன்ட் பொடிகளுக்குப் பஞ்சமே இல்லை. பாயசம் மிக்ஸில் தொடங்கி, பிரியாணி மசாலா வரை எல்லாவற்றுக்கும் ரெடிமேட் பொடிகள் இன்று கிடைக்கின்றன. ‘‘விளம்பரங்கள்தான் வித்தியாசமா இருக்கே தவிர, எல்லா பொடிகளும் கிட்டத்தட்ட ஒரே சுவையிலதான் இருக்கு. வீட்டு ருசி அதில் மிஸ்ஸிங்’’ என புலம்புகிறவர்கள்தான் அதிகம். சென்னையைச் சேர்ந்த தோழிகள் மீனா, கல்பனா மற்றும் மல்லிகா மூவரும் இதே புலம்பலை அனுபவித்தவர்கள். அந்த அனுபவம்தான் இன்று அவர் களை மசாலா பொடித் தயாரிப்பு பிசினஸில் பிசியாக்கி இருக்கிறது.

‘‘என்னதான் பிரமாதமா சமைக்கிறவங்களா இருந்தாலுமே, அவங்களுக்கு தன்னோட சமையல்ல அத்தனை சீக்கிரம் திருப்தி வராது. ‘சாம்பார் பொடி எப்படி அரைப்பீங்க? ரசப்பொடிக்கு என்ன சேர்ப்பீங்க’ன்னு டிப்ஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. பெரும்பாலும் ரெடிமேடா கிடைக்கிற பொடிகள், ஒரே மாதிரி உப்பு, காரத்தோடதான் இருக்கும். சிலதுல மசாலா நெடி தூக்கலா இருக்கும். நமக்குத் தகுந்தபடி உப்பு, காரச் சுவையோட வேணும்னா, வீட்ல இடிச்சு உபயோகிக்கிறதுதான் ஒரே வழி. ஆனா இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்? சுய உதவிக் குழுவுல இருக்கிறதால, மூணு பேரும் சேர்ந்து, மசாலா பொடி தயாரிச்சு விற்கலாம்னு யோசிச்சோம். முதல்ல கொஞ்சமா செய்து பார்த்து, சாம்பிள் கொடுத்ததுல நல்ல வரவேற்பு கிடைச்சுது. காரம் தூக்கலா வேணும், உப்பு கம்மியா இருந்தா இன்னும் நல்லாருக்கும்ங்கிற மாதிரி ஆளாளுக்கு ஆலோசனைகளும் சொல்லி, ஆர்டரும் கொடுத்தாங்க. இன்னிக்கு சாம்பார் பொடி, ரசப்பொடியில தொடங்கி, பிரியாணி மசாலா, டீ மசாலா, பாதாம் மிக்ஸ், சுக்கு மல்லி காபித்தூள், இன்ஸ்டன்ட் புட்டு, கரம் மசாலானு கிட்டத்தட்ட 32 வகையான பொடிகள் செய்து வித்திட்டிருக்கோம்’’ என்கிறார்கள் இவர்கள்.

‘‘எங்க வீட்டுக்கு எவ்வளவு ஆரோக்கியமா, சுத்தமான முறையில, தரமான பொருள்களை வச்சு செய்வோமோ, மத்தவங்களுக்கும் அதே மாதிரிதான் செய்து தர்றோம். மொத்தமா கிலோ கணக்குல செய்து வச்சுக்கிட்டு, கெட்டுப் போகற வரைக்கும் வச்சு விற்கற கதையெல்லாம் இல்லை. ஆர்டர் வர வர... ஃப்ரெஷ்ஷா ரெடி பண்ணித் தருவோம். தவிர, வயசானவங்களுக்கும், குழந்தைங்களுக்கும், நோயாளிகளுக்கும் ஏத்தபடி, அளவான உப்பு, காரம் சேர்த்து செய்து கொடுக்கறதால, எங்க தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு’’ - என வெற்றி ரகசியம் சொல்கிறார்கள் தோழிகள்.

முதலீடு: 2,000 ரூபாய் (மளிகைப் பொருள்கள், பேக்கிங் செய்யும் கவர், சீலிங் மற்றும் எடை மெஷின் உள்பட)
லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: 500 ரூபாய் (ஒரே நாள் பயிற்சியில் 15 விதமான மசாலா பொடிகள் தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம்)
தொடர்புக்கு: 91714 05524

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்