இந்த பாப்பையாவும் பட்டிமன்றமும்



இப்போ 6ம் வகுப்பு இருக்கே... எங்க காலத்துல அதுக்குப் பேரு ‘ஃபர்ஸ்ட் ஃபார்ம்’. பத்தாம் வகுப்பை ‘அஞ்சாவது ஃபார்ம்’னு சொல்லுவோம். பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி. அது ‘ஆறாவது ஃபார்ம்’. அதுக்கு அடுத்து ரெண்டு வருஷம் ‘இன்டர்மீடியட்’ படிப்பு. கல்லூரியில படிக்கணும். அது முடிச்சதும் 2 வருஷம் இளங்கலை பட்டப்படிப்பு. முதுகலையையும் ரெண்டு வருஷம் படிக்கணும். கிராமப்புறப் புள்ளைங்க இவ்வளவு படிகளைக் கடந்து பட்டப்படிப்புக்குள்ள நுழைய சிரமமா இருக்கும்னு நினைச்சு, ரெண்டு வருஷ இன்டர்மீடியட் படிப்பை எடுத்துட்டு, ‘ப்ரீ யுனிவர்சிடி கிளாஸ்’னு ஒரு வருஷ பி.யூ.சி. படிப்பை பின்னாடி கொண்டு வந்தாங்க. காலப்போக்குல அதுவும் மாறி பிளஸ் ஒன், பிளஸ்டூன்னெல்லாம் வந்திருச்சு. நான் 5&ம் வகுப்பும் ஃபர்ஸ்ட் ஃபார்மும் படிச்சது, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை நடத்துன பள்ளிக்கூடத்துல. மெஜுரா கோட்ஸ் மில்லுக்கு எதுத்தாப்புல பள்ளிக்கூடம். இப்பவும் இந்தப் பள்ளிக்கூடம் இயங்குது. ஃபர்ஸ்ட் ஃபார்ம்ல ஒவ்வொரு சனிக்கிழமையும் கைத்தொழில் வகுப்பு நடக்கும். அதுல மாதம் ஒருமுறை ‘லைசியம் கிளாஸ்’னு ஒண்ணு நடத்துவாங்க. ‘லைசியம்’ங்கிற கிரேக்க வார்த்தைக்கு ‘பேச்சுமன்றம்’னு அர்த்தம். அதுதான் எனக்குக் கிடைச்ச முதல் பட்டறை. வகுப்புவாரியா, ஒவ்வொரு பிரிவுலயும் நல்லா பேசுற பையங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பைக் குடுத்து பேசச் சொல்லுவாங்க. என்னைவிட ரொம்ப நல்லாப் பேசுற பையங்கல்லாம் இருந்தாங்கே. கைய கால ஆட்டிக்கிட்டு, ஆக்ரோஷமா அவங்கே பேசுறதைப் பாக்க ரொம்ப நல்லாயிருக்கும். ஆனா, என் பிரிவில எனக்குப் போட்டியா யாரும் இல்லே. அதனால நான்தான் ஃபர்ஸ்டாவே வருவேன். ‘லைசியம் கிளாஸ்’ல எனக்குக் கிடைச்ச வெள்ளிமெடல்தான், பேசுனதுக்காக நான் முதன்முதல்ல வாங்குன பரிசு. அந்த மெடலை பல பேருகிட்ட எடுத்துக்காட்டி, ‘எங்க வீட்டு கருவாயப்பய வாங்குன மெடலு’ன்னு சொல்லி எங்க அம்மா அழுமாம். தாயோட அன்புக்கு அழுகையும் ஒரு அடையாளந்தானய்யா!


ஃபர்ஸ்ட் ஃபார்ம் முடிச்ச சமயத்தில, உறவுக்கார ஆசிரியர் ஒருத்தர் என்னைக் கூட்டிப் போயி தல்லாகுளத்தில இருந்த அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில சேத்து விட்டுட்டாரு. ஆனா, அங்கே நடந்த கூத்து இருக்கே... லுத்தரன் ஸ்கூல்ல படிச்ச ஃபர்ஸ்ட் ஃபார்ம் படிப்பு போதாதுன்னு சொல்லி திரும்பவும் ஃபர்ஸ்ட் ஃபார்மில சேத்துப்புட்டாங்க. ஃபெயிலே ஆகாம, ஒரே வகுப்பில ரெண்டு வருஷம் படிச்சதும் ஒரு வேடிக்கைதானேய்யா! அங்கயும் மாதம் ஒருமுறை பேச்சுப்போட்டி நடக்கும். சிறப்பான தமிழாசிரியர்கள் அங்கே இருந்தாங்க.

நடராஜ பாகவதர்னு ஒரு தமிழாசிரியர். நல்லாப் பாடுவாரு. திராவிட இயக்கத்துல தீவிரப் பற்றுள்ளவர். அதனால, பேரை ‘நடையரசனார்’னு மாத்தி வச்சுக்கிட்டார். அவர்தான் போட்டிகளை நடத்துவாரு. இங்கேயும் என்னைவிட சிறப்பா பேசக்கூடிய பையங்க இருந்தாங்கே... வேலுச்சாமி, மாணிக்கம்னு இப்பவும்கூட சில பேரை நினைவிருக்கு. குறிப்பா வேலுச்சாமி. அவரும் என்னை மாதிரி மில்லு தொழிலாளி வீட்டுப்புள்ளைதான். பேச்சாளரா வரணும்னு அவருக்கு ரொம்ப ஆசை. அவரோட ஆர்வத்தைப் பாத்துட்டு ஆசிரியர்கள் சிலரே அவருக்கு பேச வேண்டிய விஷயங்களை தயாரிச்சுக் குடுப்பாங்க.

இப்ப அவரு மதுரையிலதான் இருக்காரு. கவிஞர் வேலவன்னு சொன்னாத் தெரியும். இயல்பாவே, சின்ன வயசுல இருந்து இனம்புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்கு இருந்துச்சு. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அடிமட்டக் குடும்பத்துல பொறந்ததாலயா... கல்வியறிவே இல்லாத ஒரு குடும்பத்தில இருந்து முதல் தலைமுறைப் பிள்ளையா பள்ளிக்கூடம் வந்ததாலயா... காரணம் புரியல! அதனால மத்தவங்க கிட்டருந்து எப்பவுமே கொஞ்சம் தள்ளியே இருப்பேன். எந்தக் காரியத்தைத் தொட்டாலும், ‘நம்மால முடியாது’ங்கிற மனநிலை முன்னாடி வந்து நிக்கும். அது பேச்சுப்போட்டிகள்லயும் எதிரொலிக்கும். ஒரு கட்டத்துல பேச்சுப்போட்டிகள்ல பேசுறதையே விட்டுட்டேன்.


பேச்சு தவிர எனக்கு நல்லாப் பாடவும் வரும். பல குரல்ல பேசுவேன். யாரையும் ஒரு தடவை பாத்துட்டேன்னா, அவங்க பண்றது மாதிரியே பாவனை செஞ்சு ‘லந்து’ பண்ணுவேன். நாடகங்கள்ல நடிக்கிறதுன்னா முன்னாடி நிப்பேன். இதுதவிர ஓவியங்கள் வரையுற திறனும் இருந்துச்சு. ஒரு பொருளைப் பாத்து அச்சு அசலா அதை மாதிரியே வரைய முடியும். எனக்குள்ள இருந்த நடிப்புத் திறனையும் ஓவியத்திறனையும் வெளியில கொண்டுவந்தவர், அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் சாமுவேல்ராஜ்தான். நாகர்கோவில்காரர். இவரும் திராவிட இயக்கத்துக்காரர்தான். பேரை ‘அரசு’ன்னு தூய தமிழ்ல மாத்தி வச்சுக்கிட்டார். அவர் வரைஞ்ச அண்ணா ஓவியத்தைப் பார்த்து, அண்ணாவே மயங்கிப்போய் வாங்கி வச்சுக்கிட்டாராம். நிறைய நாடகங்கள் போடுவாரு. உணர்ச்சி தெறிக்கிற மாதிரி வசனங்கள் எழுதுவாரு. அந்த நாடகங்கள்ல எனக்கும் வாய்ப்புக் குடுப்பாரு. கட்டபொம்மன் மாதிரி ராஜா வேடத்துல நடிக்கிறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க அய்யா தீவிரமான காங்கிரஸ்காரரு. எங்கே காங்கிரஸ் கூட்டம் நடந்தாலும் என்னைக் கையில புடிச்சுக்கிட்டு கிளம்பிருவாரு. முத்துராமலிங்கத் தேவர் பேச்சுன்னா அய்யாவுக்கு உயிரு. தேவர் பேசுற நிகழ்ச்சிகளுக்கு எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டம் வருமோ..? இன்னைக்கு எங்களுக்குக் கூடுற கூட்டமெல்லாம் என்னய்யா கூட்டம்..? இதுமாதிரி பத்துமடங்கு கூடி நிக்கும் பாருங்க... சமுத்திரம் மாதிரி. தேவரோட பேச்சுல தெறிச்சு விழுகிற தர்மாவேசம் இருக்கே... அது பயங்கரமா இருக்கும்.  

தேவர் மட்டுமில்லே... அன்னைக்கு அரசியல்வாதிகள் எல்லாருமே சத்தியவந்தன்களா இருந்தாங்க. மக்களுக்கு அவங்கமேல மிகப்பெரிய மரியாதை இருந்துச்சு. பேச்சு வேற, செயல் வேறன்னு இல்லாம, மக்களும் நாட்டு நலனுமே வாழ்க்கைன்னு வாழ்ந்தாங்க. தேவர் மாதிரி தலைவர்களோட பேச்சைக் கேட்டதாலோ என்னவோ... எனக்கு அந்த வயசுலயே காங்கிரஸ் மேல பெரிய மரியாதை வந்திருச்சு. இதுக்கு வேறு சில காரணங்களும் இருந்துச்சு. சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில, மதுரையில எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரு குஸ்தி வகுப்பு நடக்கும். வெள்ளைக்காரர்களை எதுத்துப் போராட உள்ள வலிமையோட உடல்வலிமையும் வேணுங்கிறதுக்காக நடந்த அந்த பயிற்சி வகுப்புகள்ல இளைஞர்கள் ஆர்வத்தோட கலந்துக்கிட்டாங்க. குறிப்பா, மில் தொழிலாளிங்க மத்தியில பலத்த ஆதரவு இருந்துச்சு. காங்கிரஸ்காரங்க செஞ்ச இன்னொரு காரியம், வீதிக்கு வீதி படிப்பகங்கள் திறந்தது. மக்கள்கிட்ட காசு வசூல்பண்ணி பத்திரிகைகளை வாங்கிப் போடுவாங்க. எங்களை மாதிரி காசு குடுத்து பத்திரிகை வாங்கமுடியாத ஆட்களுக்கு அந்த நூலகங்கள் கோயில் மாதிரி. சின்னப்பசங்க நாங்க தெருவில உண்டியல் குலுக்கி நிதி வசூல் பண்ணி நூலகங்களுக்குக் குடுப்போம். சுதந்திரம் கிடைச்சப்போ நான் ஃபர்ஸ்ட் ஃபார்ம் படிக்கிறேன். சுதந்திரம்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாத வயசா இருந்தாலும், பெரியவங்களோட குதூகலத்துல நாங்களும் கலந்தோம். கொடியேத்தி இனிப்பு வழங்கி கொண்டாடுனோம்.


காங்கிரஸோட எனக்கு இப்பிடி ஒரு பந்தம் இருந்த தருணத்திலயே கம்யூனிஸ்ட் இயக்கமும் என்னைப் பாதிக்கத் தொடங்குச்சு. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில இருந்த எங்க பெரியம்மா மகன் தேவகடாட்சம் மூலமா எனக்கு ‘ஜனசக்தி’ அறிமுகமாச்சு இல்லையா... அதில நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட தலைவர்கள் எல்லாரும் ஏழைகளை ரட்சிக்க வந்த புரட்சிப் போராளிகளா தெரிஞ்சாங்க. நான் ஏழையா இருந்து ஏழ்மை ஏற்படுத்துற வலியை அனுபவிக்கிறவன்... என் கூட வாழுற சகமனிதர்கள் எல்லாரும் ஏழைகளாவே இருக்காங்க. ஏழைகளோட நிலையை மாத்துறதே கொள்கைன்னு களத்துல இறங்கிப் போராடுன கம்யூனிஸ்ட்கள் மேல பிடிப்பு வந்தது இயல்பான ஒண்ணுதானே? அப்பாவோட காங்கிரஸ் கூட்டங்களுக்கு போறது மாதிரியே தேவகடாட்சம் அண்ணனோட சக்கரை செட்டியார், ஜீவா, ராமமூர்த்தி, சீனிவாசராவ், டாங்கே, நம்பூதிரிபாட் மாதிரி தலைவர்கள் பேசுற கூட்டங்களுக்கும் போவேன். அவங்க பேசுற உணர்ச்சிகரமான பேச்சுகளை உணர்ந்து உள்வாங்கிக்கிற பக்குவம் இல்லைன்னாலும்கூட, எனக்குள்ள பல விளைவுகளை அந்தப்பேச்சுகள் ஏற்படுத்தினதை மறுக்க முடியாது.
இந்த சூழ்நிலையில, ‘அரசு’ வாத்தியார் மூலமா எனக்கு திராவிட இயக்கத்தோட அறிமுகம் கிடைச்சுச்சு. அந்த இயக்கம் என்னையும் என் சிந்தனையையும் புரட்டிப்போட்டுருச்சு.

சின்ன வயசுல இருந்து இனம்புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்கு இருந்துச்சு. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அடிமட்டக் குடும்பத்துல பொறந்ததாலயா... கல்வியறிவே இல்லாத ஒரு குடும்பத்தில இருந்து முதல் தலைமுறைப் பிள்ளையா பள்ளிக்கூடம் வந்ததாலயா... காரணம் புரியல!

அடுத்த வாரம் சந்திப்போமா!