கல்யாண மண்டபத்தில் ரஜினி காட்டிய ஸ்டைல்!





கவியரசரின் பாதங்களில் ஸ்டைல் மன்னன் விழுந்து வணங்கும் இந்த அபூர்வ தருணத்தை படம் பிடிக்க மின்னல் வேகத் திறமை வேண்டும். அந்தத் திறமைக்கு சொந்தக்காரர் சுபா சுந்தரம். இந்தப் புகைப்படம் பற்றி பகிர்ந்துகொள்கிறார் கவியரசரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன்...

‘‘1976 என்று நினைக்கிறேன். பெங்களூரில் ‘அன்னக்கிளி’ படத்தின் வெற்றிவிழா நடந்தது. அப்போதுதான் கவிஞரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினி. அந்த சமயத்தில் ‘கவிக்குயில்’ என்ற படத்தில் ரஜினி ஒரு கேரக்டர் பண்ணிக்கொண்டிருந்தார்.

அதற்கு முன்பு ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’ படங்களில் நடித்திருந்தார். ‘மூன்று முடிச்சு’ வெளிவந்த நேரம். அப்போது எனது சகோதரியின் திருமணம் நடந்தது. தி.நகர் பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்த கல்யாணத்திற்கு கலை உலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு வந்த ரஜினியைச் சூழ்ந்துகொண்ட பலரும், ‘‘நாங்க ‘மூன்று முடிச்சு’ பார்த்தோம். படத்தில் உங்கள் ஸ்டைல் நல்லா இருந்துச்சு’’ என்று பாராட்டினார்கள். ‘‘அந்த சிகரெட்டை எப்படி தூக்கிப் போட்டீங்க’’ என்று ஆர்வமாகக் கேட்டவர்களிடம் சிகரெட்டை தூக்கிப் போட்டும் பற்ற வைத்தும் ஸ்டைல் காட்டினார் ரஜினி.

திரும்பத் திரும்ப பலரும் கேட்டாலும் சலிக்காமல் மறுபடியும் மறுபடியும் சிகரெட் ஸ்டைலை செய்து காட்டினார். திருமணம் முடிந்ததும் ரஜினி புறப்படத் தயாரானார். அதை கவனித்த அப்பா, என்னைக் கூப்பிட்டு, ‘‘ரஜினியை காரில் கொண்டுபோய் விட்டுட்டு வா’’ என்றார். ஆனால் ரஜினி, ‘‘பரவாயில்ல... நான் போய்க்கறேன்’’ என மறுத்தார். ‘‘அப்பா சொன்னாங்க’’ என்றதும்தான் காரில் உட்கார்ந்தார். போகும்போது, ‘‘ஐ லவ் கண்ணதாசன்... ஐ லைக் கண்ணதாசன்...’’ என ரொம்ப நெகிழ்ச்சியாக அப்பா மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தினார்.

பாலசந்தர் இயக்கத்தில் ரஜினியை வைத்து படம் தயாரிக்க அப்பா திட்டமிட்டிருந்தார். எல்லாம் முடிவான நேரத்தில் கவிஞரின் உயிரை காலன் பறித்துக்கொண்டான். ‘‘கண்ணதாசனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். ஏதாவது செய்யணும்’’ என்று பாலசந்தரும் சொல்லிக் கொண்டிருந்தார். பத்து வருடங்கள் கழித்து நான் ரஜினியை சந்தித்து படம் தயாரிப்பது பற்றி பேசினேன். அவரும், ‘‘நிச்சயமா பண்ணலாம்’’ என்று சொன்னார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போதும் ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்தால் ரஜினியே நெருங்கி வந்து நலம் விசாரிப்பார். நாம்தான் அவரிடம் போய் பேச வேண்டும் என நினைக்காமல், அவரே முன்வந்து பேசுவார். இந்த நல்ல குணம்தான் அவரை உச்சத்தில் உட்கார வைத்திருக்கிறது.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்