ஜோக்ஸ்





‘‘தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே... என்ன விஷயம்?’’
‘‘கட்சிக்காரங்க யாரோ, ‘அரசியல் பவர்ஸ்டாரே’ன்னு அவருக்கு பட்டம் கொடுத்து போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்களாம்..!’’
- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

என்னதான் ‘ஆட்டோ’ன்னு பேர் இருந்தாலும் அதை ‘மேனுவலா’தான் ஓட்ட முடியும். தானா ஓடாது..!
- ‘தேனான’
தத்துவங்களை ‘தானா’ யோசிப்போர் சங்கம்
- காயத்ரி, மதுரை.

‘‘ஏட்டய்யா! திடீர்னு எதுக்கு கபாலியை கைது செய்தீங்க..?’’
‘‘திருட்டு ராஸ்கல்... நமக்குத் தெரியாம ரகசியமா திருடப் போறான்யா!’’
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

நீங்க எவ்வளவு பெரிய ‘பிஸ்தாவா’ இருந்தாலும் உங்களை பாயசத்துக்கோ, ஐஸ்கிரீமுக்கோ உபயோகப்படுத்த முடியாது.
- பிஸ்தாக்களைப் பார்த்து பயந்து நடுங்கும்
பிஸ்கோத்துகள் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘டாக்டர் பட்டம் வாங்கியதிலிருந்து தலைவர் ரொம்பதான் பந்தா காட்டுறார்...’’
‘‘எப்படி..?’’
‘‘ஓய்வு நேரத்தில் என்ன செய்யுறீங்கன்னு கேட்டா, ‘மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறேன்’னு சொல்றார்..!’’
- சுகுமாரன், கோவை.

என்னதான் ஒரு டாக்டர் அறுவை ஜோக் சொல்லி சிகிச்சை கொடுத்தாலும் அதையெல்லாம் ‘அறுவை’ சிகிச்சைன்னு சொல்ல முடியாது.
- ஆபரேஷன் தியேட்டரில் படுத்தபடி அபாயகரமாக யோசிப்போர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘தோல்வியைக் கூட தலைவர் வெற்றியா மாத்திக்குவாரா... எப்படிச் சொல்றே?’’
‘‘தூக்கத்துல நடக்கிற வியாதியை, நடை பயணமா மாத்திட்டார்னா பாத்துக்கோயேன்..!’’
- சி.சாமிநாதன், கோவை.