கவிதைக்காரர்கள் வீதி






ஓளிந்திருக்கும் காலம்


*   ஆற்றின் மேலே
பாலம் கட்டியபிறகு
பரிசலில் வந்துபோனார்கள்
சுற்றுலாப் பயணிகள் மட்டும்!

*   குழந்தைகள் இருக்கும்
எல்லா வீடுகளுக்கும்
தவறாமல் வந்துவிடுகிறார்கள்
குழந்தைகளுக்கு உணவூட்ட
யாரேனும் ஒரு பூச்சாண்டி!

*   சிட்டுக்குருவிகளை
பார்க்க ஆசைப்பட்டன
நகரத்தில் மிச்சமிருக்கும்
மரங்கள்!

*   அடைமழையின்
ஒவ்வொரு துளியிலும்
ஒரு வானம்!

*   அப்பாவின் கோபம்
சொற்களில் இருக்கும்
அம்மாவின் கோபம்
மௌனங்களில் இருக்கும்

*   குடுகுடுப்பையில்
ஒளிந்து கிடக்கிறது
சாமக் கோடங்கியின்
நல்லகாலமும்!

*   எப்போதும்
உன் புன்னகைகளை
என் நினைவுக்கு
எடுத்துச் செல்லும் நான்
நீ கோபமான அன்று
உன் மௌனங்களை
எடுத்துச் சென்றேன்.
வீடு வரை வந்த மௌனங்கள்
உடைந்து விட்டன
பெரும் கண்ணீர்த் துளிகளாக!
- பெ.பாண்டியன், காரைக்குடி.