ஜோசியம்





மெரினா பீச்சில் ரோகிணியும், சுமதியும் காலாற நடந்தார்கள். சுண்டல் வாங்கிக் கொறித்தார்கள். கிராமத்திலிருந்து வந்து, ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலில் தங்கியபடி வேலைக்குச் செல்லும் இருவருக்கும் விடுமுறை நாட்களில் அதிக செலவில்லாத பொழுதுபோக்கு இதுதான்!

‘‘டைம் ஆயிடுச்சு ரோகிணி. கிளம்பலாமா’’ என்றாள் சுமதி.
‘‘ஏய், ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. அந்த கம்ப்யூட்டர் பொம்மைகிட்டே ஜோசியம் பார்த்துட்டு வந்துடறேன்’’ என்றபடி ஓடினாள் ரோகிணி. ஐந்து ரூபாய் கொடுத்து அந்த பொம்மையிடமிருந்து ஹெட்போனைப் பறித்து காதில் மாட்டிக்கொண்டாள். பொம்மையின் உடலெங்கும் லைட் எரிந்து மினுமினுத்தது. ஹெட்போனில் ஒலித்த ஜோசியத்தை சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு வந்தாள் அவள்.
‘‘ஏண்டி நீ திருந்தவே மாட்டீயா? ‘நீங்க உலகத்தையே ஜெயிக்கப் போறீங்க, அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு நல்ல காலம்தான்’னு சில பிட்டு டயலாக்குகளை அவன் பழைய டேப் ரிக்கார்டர்ல பதிவு பண்ணிப் போடுறான். அதைப் போயி நம்பி காசை செலவு பண்றியே..!’’ என்றாள் சுமதி.
‘‘நான் ஜோசியமா நினைச்சு இதைக் கேக்கலைடி! யோசிச்சுப் பாரு... இந்தக் காலத்துல நம்மளை மட்டம் தட்டிப்பேசவும், குறை சொல்லவும், குழி பறிக்கவும்தான் நிறைய பேரு இருக்காங்க. ஏதோ இந்த பொம்மையாவது பாஸிட்டிவ்வா பேசி நம்மகிட்ட தன்னம்பிக்கையை வளர்க்குதே. அதுக்காகத்தான் கேக்கறேன்!’’ என்று ரோகிணி சொல்ல, சுமதி யோசிக்க ஆரம்பித்தாள்.