+2 இயற்பியல் சென்டம் வாங்க டிப்ஸ்





இயற்பியலில் சென்டம் வாங்குவதற்கு அடிப்படையான விஷயமாக இருக்கும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என கடந்த இதழில் பார்த்தோம். அடுத்ததாக ஐந்து மதிப்பெண் கேள்விகள்.

இந்தப் பகுதியில் 12 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இவற்றில் ஏழிற்கு பதிலளிக்க வேண்டும். இதில் கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கணக்கீடு கேள்வியும் அடங்கும். கட்டாயக் கேள்வி தவிர, கூடுதலாக இரு வினாக்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படுகின்றன. இவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு, முப்பத்தைந்து மதிப்பெண்களையும் முழுதாக அள்ள என்ன செய்யலாம்?

சென்னை எம்.சி.டி. முத்தைய செட்டியார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் திருமாறன் தருகிற ஐந்து மார்க் அட்வைஸ் டிப்ஸ் இவை...
*  கட்டாயக் கணக்கீடு கேள்வியானது எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம். சமீபமாக தொடர்ந்து ‘நிலை மின்னியல்’, ‘மின்னோட்டத்தின் விளைவுகள்’, ‘அணுக்கரு இயற்பியல்’ பாடங்களிலிருந்தே இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பாடங்களின் கணக்கு கேள்விகளையெல்லாம் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து பயிற்சி பெறுவது அவசியம்.

*  கட்டாயக் கேள்வி தவிர, மீதமுள்ள ஆறு கேள்விகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை. சர்க்யூட் போன்றவை கொஞ்சம் குழப்பக்கூடும். பொதுவாக தியரி கேள்விகளை விட கணக்கீடு கேள்விகளைத் தேர்வு செய்வது நேரத்தை மிச்சப்படுத்தும். தெளிவாக முழு மதிப்பெண்ணையும் பெற வைக்கும்.
*  எப்போதும் 2வது மற்றும் 7வது பாடங்களிலிருந்து தலா இரு கேள்விகள் இந்தப் பகுதியில் கேட்கப்படுகின்றன. எனவே, இவ்விரு பாடங்களையும் முழுதாகப் படிக்கத் தவற வேண்டாம். நிச்சயமாக இருபது மதிப்பெண்களைத் தரும் பாடங்கள் இவை.



*  பயன்பாடுகள் (applications) மற்றும் பண்புகள் (properties) பற்றி விவரிக்குமாறு கேட்கும் கேள்விகள் அதிகம் இந்தப் பகுதியில் கேட்கப்படுகின்றன. மொத்தப் பாடத்திலும் சேர்த்து சுமார் 12 கேள்விகள் இந்த டைப்பில் இருக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்துப் படித்தால் போதும்... நிச்சயம் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம். கண்டிப்பாக பத்து மார்க் கிடைத்துவிடும்.

சாம்பிள் கேள்விகள்:
1) காமா கதிர்களின் பண்புகள்
2) நியூட்ரானின் பண்புகள்
3) மீ கடத்தியின் பயன்கள்
4) ஒளி மின்கலத்தின் பயன்கள்
*  சர்க்யூட் வரைய வேண்டிய கேள்விகளும் சுமார் பத்து வரை இருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் படித்தால், ஒரு கேள்விக்கான முழு மதிப்பெண் உறுதி.

சாம்பிள்:
1) வீட்ஸ்டோன் சுற்று
2) அகமின்தடை
3) மின்னழுத்த மானி
4) அரை அலை திருத்தி
5) கூட்டும் பெருக்கி (சம்மிங் ஆம்ப்ளிஃபயர்)
*  பாயின்ட்டுகளாக விடை எழுதக் கேட்கிற பட்சத்தில், ‘எவையேனும் ஐந்து பாயின்ட்டுகளை கூறுக’ எனக் கேட்டால் மட்டுமே ஐந்து பாயின்ட்டுகள் எழுத வேண்டும். இப்படிக் குறிப்பிடாமல் பொதுவாகக் கேள்வி கேட்டிருந்தால், பத்து பாயின்ட் இருந்தாலும் மொத்தத்தையும் எழுதி விட வேண்டும். இது முக்கியம்.

*  ‘மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்’ பாடத்திலிருந்து கேட்கப்படுகிற கேள்விகளில் படம் வரைந்து பாகம் மற்றும் அளவு குறிப்பிடும்போது தவறு செய்கிறார்கள் பல மாணவர்கள். எனவே அந்தப் படங்களை நல்லபடியாக மனதில் உள்வாங்கிச் செல்லுதல் அவசியம். (உதாரணத்துக்கு நைக்கல் பட்டகம் மற்றும் புரூஸ்டர் விதி போன்ற கேள்விகளைச் சொல்லலாம்.)

‘‘மற்ற பாடங்களுடன் கம்பேர் பண்ணுகிறபோது, இதுல பாடங்களோட எண்ணிக்கை குறைவு. அதனால படிக்க ரொம்பவே நேரம் கிடைக்கும். எனவே, ‘சென்டம்’ கனவு நிறை
வேறணும்னா எல்லா பாடங்களையும் கட்டாயம் படிச்சுட்டுப் போகணும்’’ என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியை ஆக்னஸ். பத்து மதிப்பெண் கேள்விகளை அடுத்த இதழில் பார்க்கலாம்.
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன், ஏ.டி.தமிழ்வாணன்