விளம்பரத்தால் பலன் உண்டா?





காபி பவுடர் தயாரித்து விற்கும் தொழிலை சிறிய அளவில் நடத்தி வரும் நாங்கள், பிசினஸ் டெவலப் ஆக விளம்பரம் செய்யலாம் என நினைக்கிறோம். விளம்பரத்தால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா? விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் யாரை அணுகுவது?
- பூங்கோதை, சென்னை.
பதில் சொல்கிறார் கதிரவன் (வினிஷா விஷன் விளம்பர நிறுவனம், சென்னை.)

தங்கள் தொழிலை எந்த அளவு விரிவாக நடத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே விளம்பர உத்தியை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, தங்கள் பொருள் சென்னையில் மட்டும் விற்பனை ஆனால் போதுமென்றால், செய்தித்தாள்களின் சென்னைப் பதிப்பு, பண்பலை ரேடியோக்கள், மற்றும் உள்ளூர் கேபிளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைவான செலவில் விளம்பரப்படுத்த நினைக்கிறவர்களுக்கு பிட் நோட்டீஸ், ஸ்லைடு, பேனர் என நிறைய வழிகள் உள்ளன. மாறாக எல்லா இடங்களிலும் தங்களது தயாரிப்பு ரீச் ஆக வேண்டுமென நினைத்தால், அதற்கான டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் டீலர் வசதிகளை செய்து விட்டு, சேட்டிலைட் சானல்கள் மூலம் விளம்பரப்படுத்தலாம்.

உங்களுக்கான விளம்பரத்தை உருவாக்கித் தர ஏகப்பட்ட விளம்பரத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களை அணுகி, கொஞ்சம் பொருட்செலவோடு ஒரு விளம்பரத்தைத் தயாரித்து விடலாம். விளம்பரம் ரெடி. அது வெளியாகும் சாதனங்களை எப்படி அணுகுவது? அதற்காகத்தான் காத்திருக்கின்றன விளம்பர ஏஜென்சிகள். விரும்புகிற ஏரியாவில் மட்டும் விளம்பரம் செய்கிற வசதி இன்று வந்துவிட்டதால், கட்டணங்களும் முன்பை ஒப்பிடும்போது மிகவும் குறைவே.

‘விளம்பரத்தால் பலன் கிடைக்குமா’ என்கிற தங்களது சந்தேகம், தாங்கள் முதன்முதலாக ஒரு பொருளை விளம்பரம் செய்ய வருபவர் எனக் காட்டுகிறது. ‘விளம்பரமின்றி வியாபாரமில்லை’ என்பதுதான் இன்றைய யதார்த்தம். எந்தப் பொருளானாலும் காட்சிப்படுத்தினால்தான் சந்தையில் விற்கிறது. ஆனால், ‘விளம்பரம் செய்தும் நஷ்டம்’ என யாராவது சொன்னால்... அது அவர்கள் வியாபாரம் செய்த விதத்தால்தான் இருக்குமேயன்றி, விளம்பரத்தால் அல்ல.

இந்த வருடம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் நான். உடலில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் நார்மலாக இருக்கிறேன். ஓடியாடி உழைத்த நாட்களில் ஓரிரு முறை ‘முழு உடல் பரிசோதனை’ பண்ணியிருக்கிறேன். தற்போது மீண்டும் ஹெல்த் செக்கப் செய்ய பிள்ளைகள் வலியுறுத்துகிறார்கள். அவசியமில்லை என நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா?
- ராஜசேகரன், சமயநல்லூர்.
பதில் சொல்கிறார் வி.எஸ்.நடராஜன் (முதியோர் நல மருத்துவர்)

முறையான உணவுப் பழக்கம், நல்ல உடற்பயிற்சி இரண்டையும் கடைப்பிடிப்பவர்களை நோய் அடிக்கடி சீண்டாது. தாங்கள் இந்த டைப் நபர் என நினைக்கிறேன். வாழ்த்துகள். ஆனாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா?

தொண்ணூறு வயதில் ‘நீரிழிவு’ பிரச்னைக்கு ஆளாகி என்னிடம் வந்திருக்கிறார் ஒருவர். நம்ப முடிகிறதா? உழைக்கும் காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாலும், ஓய்வுக் காலத்தில் அஜாக்கிரதையாக இருந்து, அதனால் அவதிப்படுபவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஏனெனில் பல சிக்கல்கள் சென்று சேரும் ஒரு முடிச்சுதான் நம்முடைய முதுமை. வயதுக் காலத்தில் உடலில் அக்கறை செலுத்தாதவர்களுக்கு, அது முதுமையின் ஆரம்ப நாட்களிலேயே வேலையைக் காட்டத் தொடங்கி விடுகிறது.

தங்களைப் போன்று தன்னம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களோ வேறு வடிவத்தில் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அதாவது ஆரம்ப காலத்தில் கட்டுப்பாடாக இருந்ததாலேயே, நோய்கள் கொஞ்சம் அடங்கி இருப்பது போல் தெரியும். எந்த அறிகுறியும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே தெரியாது. ஆனால், மறதி பிரச்னை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கேன்சர் போன்றவை எல்லாமே முதுமைப் பருவத்தில் கூட முளைத்து பாடாய்ப் படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதே நிஜம்.

எனவே, இத்தனை நாளும் இருந்தது போல உங்கள் உடல் தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டுமெனில், தங்களது எண்ணத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். இன்றைய மருத்துவ நிலவரப்படி, எழுபது வயதுக்குட்பட்டவர்கள் வருடத்துக்கு ஒரு முறையும், எழுபதைத் தாண்டியவர்கள் ஆறு மாதத்துக்கொரு முறையும் உடலைப் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.